சுட்டும் விரல்கள்!
கடலுார், நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 1998ல், 6ம் வகுப்பு படித்தபோது, வகுப்பாசிரியராக இருந்தார் ராமசாமி. மிகவும் அன்பானவர்; தோழமை உணர்வோடு பழகுவார். வகுப்பில், யாருடனும் நெருங்கி பழகாமல், தனித்தே இருப்பேன் நான். இதை பார்த்தவர், அதற்கான காரணம் கேட்டார். சில மாணவர்களை விரலால் சுட்டி, 'இவன், அழுக்கு சட்டை அணிந்திருக்கிறான்; மற்றொருவன் காலணி போடவில்லை...' என்று வெறுப்புடன் கூறினேன்.புன்னகைத்தபடியே, 'அவர்களின் குடும்ப சூழ்நிலையால் இப்படி இருக்கின்றனர். இவை எல்லாம் மாற்றி கொள்ள கூடியவை தான். ஆனால், அவர்களின் குறைகளை சுட்டிக் காட்டிய போது, உன் ஆள்காட்டி விரல் மட்டுமே அவர்களை நோக்கி இருந்தது... 'மற்ற விரல்கள் எல்லாம் வெறுக்கும் குணம் உள்ள, உன்னை நோக்கி இருந்ததை கவனிக்கவில்லையா... பிறர் குறையை சுட்டுவதை தவிர்த்து, அதை தீர்க்க நல்ல யோசனை இருந்தால் கூறு...' என அறிவுரைத்தார்.அதை ஏற்று, யாரையும் குறை கூறாமல், சுற்றத்துடன் சுமுகமாக வாழ பழகிக்கொண்டேன்.என் வயது, 36; அந்த ஆசிரியர் அறிவுரைப்படி, இயலாமல் வாடுவோர் குறைகள் தீர, இயன்ற உதவிகள் செய்து வருகிறேன்.- கே.கணேஷ், கடலுார்.