தீர்க்க சுமங்கலி பவ!
ஒரு சமயம் குருஷேத்திர யுத்த களத்தில், 'பிரியத்தினால் அவர்களை கொல்லாமல் பீஷ்மர் விட்டு வைத்திருப்பதாகச் சொல்லி திட்டினான் துரியோதனன்.அதைப் பொறுக்க முடியாத பீஷ்மர், துரியோதனனிடம் சொன்னார்.''துரியோதனா அதிகம் பேசாதே! இத்துடன் உன் பேச்சை நிறுத்திக் கொள். நாளை சூரியன் அஸ்தமனம் ஆவதற்குள் பாண்டவர்கள் ஐவரையும் கொன்று உன்னைச் சந்தோஷப்படுத்தி இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருகிறேன்,'' என்றார்.அவருடைய பயங்கர சபதம் கவுரவ அணியினருக்கு தெரிந்தபோது, அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இது பாண்டவர்களுக்கும் தெரிய வந்தது.'பாண்டவர் அனைவரையும் காப்பேன்' என்று அதற்கு முன்பே, சகாதேவனிடம் வாக்குறுதி தந்திருந்தார் கிருஷ்ணர்.பீஷ்மர் சொல் மாறுகிறவர் அல்ல. ஆகையினால், பீஷ்மரின் சபதத்தை யுக்தியால் முறியடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார் கிருஷ்ணர். அவர் பாஞ்சாலியிடம் சென்று, ''என்னுடன் வா!'' என்று அவளைத் தனியே அழைத்துச் சென்றார்.''இப்போது நாம் ஒருவர் கண்ணிலும் படாமல் பீஷ்மர் இருக்கும் பாசறைக்குப் போகப் போகிறோம். நீ பாஞ்சாலி என்று வெளியிடாமல், பீஷ்மரை இருளிலேயே வணங்கு.உன் வளையல் ஒலி கேட்டவுடன் பீஷ்மர், கவுரவர் தரப்பிலிருந்து யாரோ ஒரு ராஜ ஸ்திரீதான் வந்திருக்க வேண்டும் என்று கருதி அபயம் அளிக்கும் நோக்கத்துடன், 'தீர்க்க சுமங்கலியாக இரு அம்மா!' என்று வாழ்த்துவார். அப்படி அவர் வாழ்த்தி விட்டால், பாண்டவர்களைக் கொல்ல முடியாது!'' என்று சொல்லி விட்டு, அவளை அழைத்துச் சென்றார் கிருஷ்ணர்.பீஷ்மரின் பாசறைக்குள் காலடி எடுத்து வைத்தாள் அவள். செருப்பு வேறு சரக்... சரக் என்று சப்தமிட்டது. இந்தச் சப்தம் கேட்டால், உடனே பீஷ்மர் 'யாரது?' என்று கேள்வி கேட்பார். இவள் பாஞ்சாலி என்ற உண்மையை சொல்ல நேரிடும். அப்படி உண்மையை சொன்னால் தன்னுடைய திட்டம் தவிடு பொடியாகி விடும் என்று உணர்ந்த கிருஷ்ணர், ''செருப்புகளைக் கழற்றி விடு!'' என்று ஜாடை செய்தார். பாஞ்சாலி கிருஷ்ணர் ஆணைக்குக் கட்டுப்பட்டாள். ஆனால், அந்தச் செருப்புகளை என்ன செய்வது? அங்கேயே விட்டாலும் காரியம் கெட்டு விடுமே, என்று தடுமாறினாள் பாஞ்சாலி.ஆனால், கிருஷ்ணர், சலங்கைகள் கோர்க்கப்பட்டிருந்த அந்தச் செருப்புகளைக் கீழே குனிந்து எடுத்து அதன் சலங்கைகள் ஒலித்து விடாதபடி தன் மார்போடு அணைத்துக் கொண்டார்.பாஞ்சாலி உள்ளே சென்றாள். பீஷ்மரின் பாதத்தில் வீழ்ந்து பணிந்தாள்.''தீர்க்க சுமங்கலியாக இரு குழந்தாய்!'' என்று வாழ்த்தினார் பீஷ்மர்.ஆனால், பாஞ்சாலி மீண்டும், மீண்டும் வணங்கினாள். ஒவ்வொரு முறை வணங்கும் போதும், 'தீர்க்க சுமங்கலியாக இரு!' என்று சொல்ல வேண்டியது மரபாதலால் அவர் அவ்விதமே சொன்னார்.இவ்வாறு ஐந்து நமஸ்காரங்களை செய்தவுடன், அவர் மனம் திடுக்கிட்டது. 'வந்திருப்பது யார் என்று தெரியாமல், ஆசி வழங்கி விட்டோமோ!' என்று யோசித்தார்.ஒருவேளை பாஞ்சாலியாக இருந்தால்...?உடனே அவர், ''யார் நீ... முதலில் அதைச் சொல்,'' என்றார்.'நான்தான் பாஞ்சாலி!' என்றாள் அவள்.மீண்டும் திடுக்கிட்டார் பீஷ்மர் .''என்னுடைய சபதத்தைத் தெரிந்து கொண்டு, உன் கணவன்மார் உயிரைக் காக்கச் சாமர்த்தியமாக யுக்தி செய்து என் சபதத்தை முறியடித்து விட்டாய். நீ பெண்ணாக இருந்ததால் தப்பினாய். பெண்களை நான் எப்போதும் தண்டிப்பது இல்லை. ஆகவே, உன்னை எவன் இங்கே அழைத்து வந்தானோ, அவனை நான் தண்டிக்கிறேன்!'' என்று கூறியவராகத் தீப்பந்தத்தைக் கொளுத்திக் கொண்டு பாசறைக்கு வெளியே வந்தார்.வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. அந்த மழையில் பாஞ்சாலியின் செருப்புகளை மார்புடன் அணைத்து, அவை நனையாமல் இருக்கத் தன் பீதாம்பரத்தால் அதைப் போர்த்திய கிருஷ்ணர் புன்னகையுடன் நின்றார்.பீஷ்மர் திடுக்கிட்டார்...அங்கே கிருஷ்ணரிடம் ரட்சிக்கும் தன்மை மட்டும்தான் இருந்தது. அவரிடம் அகங்காரம் இல்லை. தான் என்கின்ற கர்வம் இல்லை. உண்மையான ஒரு தேச பக்தன் என்ற தொண்டு உள்ளமே இருந்தது.தேச பக்தன் என்பவன் கிருஷ்ணரைப் போல் இருக்க வேண்டும். ஒருவனைக் காப்பாற்றும் எண்ணம் கொண்டவன் கிருஷ்ணரைப் போல் இருக்க வேண்டும்.***