உள்ளூர் செய்திகள்

இளவரசன் ப்ருத்திவி!

சுமார், எட்டு ஆண்டுகளுக்கு முன் -அதிகாலை நேரம், வயலில், மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தான் இம்புலி. அப்போது அவ்வழியாக இருவர் வந்தனர். ''தம்பி! ஏன் இப்படி அவசர அவசரமாக வேலை செய்ற... என்ன விஷயம்?'' என்று கேட்டார் வந்தவரில் ஒருவர்.''ஐயா... தயவு செய்து வேலை நேரத்தில், வீண் வம்பு பண்ணாதீங்க... என் நிலமாக இருந்தாலும் பரவாயில்லை; இது அடுத்தவருடைய நிலம். வேலையை நன்றாக செய்ய வேண்டும் அல்லவா...'' என்றான் இம்புலி.''என்னப்பா இது... அடுத்தவர் நிலத்தை, நீ ஏன் உழ வேண்டும்?''''ஒரு நிமிஷம் உட்காருங்க ஐயா... கொஞ்சம் நேரம் உங்ககிட்ட ஓய்வா பேசிட்டு, அப்புறமா என் வயல் வேலையில் இறங்கணும்,'' என்றான்.''இது யாரோட நிலம்?'' என்று கேட்டார் மற்றொருவர்.''இந்த நிலம் பூராவும் பக்கத்து வீட்டு பெரியவருடையது. கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருக்காரு... அப்படி இருக்கும் போது, அவருக்கு உதவ வேண்டியது என் கடமை அல்லவா!'' என்றான் இம்புலி.''சரி! இப்ப நீ செஞ்ச வேலைக்கு என்ன கூலி கொடுப்பாரு!''''என்னய்யா, என்ன சொல்றீங்க... இந்த நிலத்து சொந்தக்காரர் என் அப்பாவிற்கு சமம். அவரிடம் கூலி வாங்கணுமா... உதவுறதுல இருக்குற மகிழ்ச்சியே மகிழ்ச்சி... என் உடம்புல பலம் இருக்குற வரை உழைப்பேன்; மத்தவங்களுக்கும் உதவுவேன்,'' என்றான்.''அதெல்லாம் சரி... அடுத்தவங்களுக்கு, கூலி வாங்காமல் இனாமாக வேலை செய்கிறாய்... அப்படியென்றால், உன் நிலத்து விளைச்சலில் வரும் வருமானம் மட்டும் உன் செலவிற்கு போதுமா?''''ஓ! தாராளமா போதுமய்யா... வறுமை என்றால் என்னவென்றே எங்களுக்கு தெரியாது; வறுமைக்கும் எங்களை தெரியாது. வயிறார சாப்பிட்டு, நிறைவான மனசுடன் வாழ்கிறோம். எங்கள் மகாராஜாவின் ஆட்சியின் சிறப்பு இது தான்!''ஐயா! சாமி கிட்ட நாங்க என்ன வேண்டிக்கிறோம் தெரியுமா... எங்கள் மகாராஜாவும், அவர் குடும்பமும், நீடுழி வாழணும்; அவரின் குடும்பம் தழைத்து ஓங்கணும்; நோய் நொடியின்றி சீறும், சிறப்புமாக வாழணும். இப்படி வேண்டுதல் செலுத்திய பின் தான், மண்வெட்டி, ஏர், கலவை அனைத்தையும் தொட்டு கும்பிட்டுவிட்டு, குடிசையை விட்டு வெளியேறுவோம் ஐயா!'' என்றான்.இம்புலி சொல்வதை கேட்டு, லேசாக கசியும் கண்களுடன், அமர்ந்திருந்தினர் இருவரும்.அப்போது, ஒரு இளம் பெண், தலையிலும், இடுப்பிலும் கூடையை சுமந்தபடி, ஓட்டமும், நடையுமாக வந்து, ''கும்பிடுறேன் ஐயா!'' என்று, விருந்தினரை பார்த்து, மென்மையாக புன்னகைத்தாள். அவள் தான் சின்னி, இம்புலியின் மனைவி.''ஆமா... விருந்தாளிகளை கவனிக்க வேணாமா...'' என்று கேட்டாள்.''ஐயா! மன்னிச்சிடுங்க... இதோ ஒரு நிமிஷம்... ஓடிப்போய், சூடா, நான்கு ஆப்பம் வாங்கிட்டு வர்றேன்,'' என்று புறப்பட முற்பட்டாள் சின்னி.'ஆப்பம் எல்லாம் வேண்டாம் தங்கச்சி... உன் புருஷனுக்கு நீ எடுத்து வந்த உணவு எங்களுக்கு வேணும்!' என்றனர் இருவரும்.''மன்னிச்சிடுங்க ஐயா... இது வெறும் கம்பங்கூழும், வெஞ்சனமும் தான்... முதல் முறையா வந்திருக்கும் விருந்தாளிக்கு கூழையா கொடுப்பாங்க; அது மரியாதையா...'' என்று மிக கெஞ்சலாக சொன்னாள்.'இல்ல தங்கச்சி... நீ என்ன சொன்னாலும் நாங்க கேட்க மாட்டோம். கம்பங்கூழ், எங்களுக்கு மிகவும் பிடித்த உணவு. நாங்க கேட்கிறதை தான், நீ கொடுக்ணும், விருப்பம் இல்லைன்னா எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்...' என்றனர்.''சரி...'' என்று ஒப்பு கொண்டவள், தான் கொண்டு வந்திருந்த மற்றொரு கூடையை கையில் எடுத்தபடி, ''வசந்தி அக்கா வீட்டு குழந்தைங்க பசியோடு இருப்பாங்க... இதை அவங்க வீட்டுல கொடுத்துட்டு வந்துடுறேன்...'' என்றாள்.''நீ ஏன் அவங்க வீட்டு பிள்ளைகளுக்கு உணவு எடுத்துட்டு போகணும். உன் அக்கா தானே குழந்தைகளுக்கு உணவு தயாரிச்சு கொடுக்கணும்,'' என்றார் ஒருவர்.''அக்காவிற்கு உடம்பு சரியில்லை; எப்படி உணவு தயாரிப்பாக... குழந்தைகளை பட்டினி போடறது, மிகப்பெரிய பாவமில்லையா... அதான், நா எடுத்துட்டு போறேன்,'' என்று கூறி விரைந்தாள்.'உங்கள் இருவரையும் பார்க்க, மிகவும் பிரமிப்பாக இருக்கு... நீ அடுத்தவர் தோட்டத்தில் இறங்கி வேலை செய்கிறாய்; உன் மனைவி, அவள் அக்காவுக்கு உடல் நலம் சரியில்லை என்று, அக்குடும்பத்திற்கு உணவு தயாரித்து எடுத்து செல்கிறாள்... என்னவொரு பெருந்தன்மை; பெரிய மனசு' என்று பாராட்டினர் விருந்தாளியர்.''ஐயா! ஒருத்தருக்கு ஒருத்தர் இந்த உதவி கூட செய்யவில்லை என்றால், அப்புறம் நமக்கும், மற்ற மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்!'' என்றான் இம்புலி.'சரிப்பா... பசி வயிற்றை கிள்ளுது... உன் மனைவி அந்த குழந்தைகளுக்கு உணவு கொடுத்துவிட்டு திரும்பி வர, எவ்வளவு நேரமாகுமோ தெரியல. அதனால், உன் சாப்பாட்டையே எங்களுக்கு கொடு,' என்றனர்.அடுத்த நிமிடம்...'அப்பப்பா... என்ன ருசி என்ன ருசி... இதை போன்ற சாப்பாட்டை, இதுநாள் வரை நாங்கள் இருவரும் சாப்பிட்டதே இல்லை' என்று, மாறி மாறி புகழ்ந்தபடியே சாப்பிட்டனர் இருவரும்.அதே வேளையில், சின்னியும் சாப்பாடை கொடுத்துவிட்டு வந்து சேர்ந்தாள்.'சரி... நாங்க பொறப்படறோம். நாங்க எப்போது வந்தாலும், இதே போல கம்பங்கூழும், கெட்டித் தயிரும் கொடுக்கணும் புரியுதா... அப்புறம், இந்த வாயில்லா பூச்சியான எங்க மாப்பிள்ளையை அனாவசியமா திட்டாதே...' என்று மிக உரிமையுடன், சின்னியின், கரங்களை பற்றி, ஒரு கத்தை பணத்தை வைத்து மூடினர்.''ஐயா... என்ன இது... எதுக்காக இவ்ளோ பணத்தை, அள்ளி கொடுக்கிறீங்க,'' என்று பதறினாள்.''உன் அருமையான சாப்பாட்டிற்கு தங்கச்சி,'' என்று, ஒருவர் சொல்லி முடிக்கவில்லை...''என்ன வார்த்தை சொல்றீங்க ஐயா... சாப்பாடு போட்டதுக்கு பணம் வாங்குவாங்களா... அது எவ்ளோ பெரிய பாவம். நீங்க இரண்டு பேரும் இப்படி அவமானப்படுத்துவீங்கன்னு நினைக்கவே இல்லை.''உங்க ஊர்ல வேணா விருந்தாளிக்கு சாப்பாடு போட்டுட்டு, பணம் வாங்குற பழக்கம் இருக்கலாம். ஆனா, இங்கே எங்க துஷ்யந்த மகாராஜா ஆளும் நாட்டிலேயே இதைப்போன்ற அக்கிரமம் நடக்கவே நடக்காது; அது மிகவும் கேவலம்,'' என்றாள்.- 1 தொடரும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !