உள்ளூர் செய்திகள்

ஒரு நாயின் தியாகம்!

கோபாலபுரம் என்ற ஊரில், ஜமீன்தார் ஒருவர் வசித்து வந்தார். காட்டில் வேட்டையாடுவது அவரது வழக்கம். ஒரு வேட்டை நாயை அன்போடு வளர்த்து வந்தார். வேட்டைக்குச் செல்லும் போது, நாயையும் உடன் அழைத்துச் செல்வார். கண்ணில் படும் சிறு விலங்குகளை வேட்டையாடி, ஜமீன்தாரின் முன்னே போடுவது, அந்த நாயின் வழக்கம்.ஒரு நாள் -வேட்டை நாயுடன், காட்டிற்கு சென்றார். அவர் ஒரு பாதை வழியாகச் செல்ல, வேட்டை நாயோ, இன்னொரு வழியில் சென்றது.திடீரென்று, திரும்பி வந்த நாய், 'ஊய்...' என, ஊளையிட்டபடி, ஜமீன்தாரை நோக்கி, வேகமாக ஓடி வந்தது. 'வழக்கமான பணியை செய்யாமல் ஊளையிட்டப்படி, வெறி பிடித்தது போல் வருகிறதே' என்று அலட்சியமாக நினைத்தார் ஜமீன்தார்.அதற்குள், வேட்டை நாய், அவர் மீது பாய்ந்து, அவரை அங்கிருந்து விரட்டும் வகையில் சைகையால் முயன்றதுஒரு நிமிடம்... திடுக்கிட்ட ஜமீன்தார், 'நாய்க்கு வெறி பிடித்து விட்டது. இன்னும் விட்டு வைத்தால், கடித்துக் குதறி விடும்; உடனே சுட்டுக் கொன்று விட வேண்டியது தான்' என்று முடிவு செய்தார். துப்பாக்கியால், நாயை சுட்டார். 'பொத்' என, விழுந்து, நாய் உயிரை விட்டது. அந்த நேரத்தில், ஜமீன்தார் நின்ற பகுதியில், காட்டு வெள்ளம், திடீர் என பாய்ந்து வந்து, அவரை அடித்துச் சென்றது. அப்போது தான், நாயின் உண்மையான செயலை உணர்ந்தார்.'காட்டில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது; அதை கண்ட நாய், அதிலிருந்து தப்ப வைக்க முயற்சி செய்திருக்கிறது. இதை, உணராமல், அநியாயமாக சுட்டுக் கொன்று விட்டோமே' என்று எண்ணி கவலையடைந்தார். வெள்ளம் அவரை இழுத்து சென்றது. காட்டு வெள்ளத்தில் இருந்து தப்பிச் செல்ல முடியவில்லை. தத்தத்தளித்தபடியே வெள்ளத்தில் மிதந்தார்; அப்படியே நினைவு மங்கி, மெல்ல மெல்ல மூழ்குவதை உணர்ந்தார். அப்போது ஏதோ ஒன்று, தெப்பம் போன்று, அவர் கையருகே, காட்டு வெள்ளத்தில் மிதந்து வந்தது. கண்களை மூடிய நிலையில் அதைப் பிடித்துக் கொண்டார்.மறுநாள் -காட்டில், ஒரு பகுதியில், கரை ஒதுங்கினார். சூரிய ஒளி அவர் மீது பட, மெல்ல மெல்ல தன்னிலையை அடைந்தார். கையில், ஏதோ தட்டுப்படுவதை உணர்ந்தார்.'மயங்கிய நிலையில் தண்ணீரில் மிதந்த போது, கையில் அகப்பட்ட மிதவையைப் பற்றிக் கொண்டோமே... அந்த மிதவை மட்டும் கையில் அகப்படவில்லை என்றால், உயிர் பிழைத்திருக்க முடியாது' என்று நினைத்தபடியே மெல்ல கண் திறந்தார்.அந்த மிதவையைக் கண்டதும், 'ஓ'என தேம்பித் தேம்பி அழுதார்.''என்னருமை வேட்டை நாயே... நீ இறந்தும் கூட, மிதவையாகி என்னைப் காப்பாற்றி விட்டாயே... வெள்ளப்பெருக்கு வருவதை அறிவுறுத்தினாய். அதை புரிந்து கொள்ளாமல், உனக்கு வெறி பிடித்து விட்டதாக தவறாக எண்ணி, உன்னைக் கொன்று விட்டேன். ''நீ இறந்த பின்னும், மிதவையாகி என் உயிரைக் காப்பாற்றி விட்டாய். உன்னைப் போன்ற, ஒரு உத்தமத் தோழனை இனி, எங்கே தேடுவேன்...'' என்று, அழுது புலம்பினார் ஜமீன்தார்.குட்டீஸ்... ஒரு செயலை செய்யும் முன், நிதானமாக யோசியுங்க... அவசரமா முடிவு எடுக்காதீங்க...சரியா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !