உள்ளூர் செய்திகள்

சேமிப்பே செல்வம்!

கோடை வெயில் கொளுத்தியது; மர நிழல் தேடி, பறவைகளும், விலங்குகளும் அலைந்து திரிந்தன.கடுமையான வெயிலிலும், எறும்பு கூட்டம் ஒன்று, சிதறிக்கிடந்த தானியங்களை சேகரித்து, வேக வேகமாக எடுத்து சென்றன. கூட்டில் உள்ள தானியக் கிடங்கில், பத்திரமாக சேமித்தன.வெட்டிப் பேச்சை தவிர்த்து, தானியங்களைச் சுமந்து வரிசையாக சென்ற அழகு, ரசிக்கும்படி இருந்தது. சுறுசுறுப்பு ஆச்சரியப்படுத்தியது.எறும்புகள் சென்ற வழியில், வெட்டுக் கிளி ஒன்று சோம்பலாக படுத்திருந்தது. அது ராகம் போட்டு, 'சின்னத் தம்பிகளே... வெயிலில் ஏன், இப்படி உணவைச் சுமந்து கஷ்டப்படுறீங்க; உங்கள பார்த்தால் பாவமா இருக்கு... வேலை செய்தது போதும்; வாங்க... பாடி, ஆடி மகிழலாம்...' என்று அழைத்தது.'மன்னித்து விடுங்கள் வெட்டுக்கிளியாரே... இது விளையாடும் நேரமில்லை; வேலை அதிகம் உள்ளது. வழியை விடுங்கள்...' என்று கூறி, பணியில் கண்ணும் கருத்துமாக இருந்தன குட்டி எறும்புகள்.'எப்படியோ தொலையுங்க; நான் விளையாட போறேன்...' என்று, எரிச்சலை கொட்டியபடி, பறந்து மறைந்தது வெட்டுக்கிளி.கோடைகாலம் முடிந்தது. மழைக்காலம் துவங்கியது. மழை கொட்டியதால் எங்கு பார்த்தாலும், தண்ணீர் நிரம்பியிருந்தது. பறவைகளும், விலங்குகளும் வெளியில் செல்ல வழியில்லாமல் முடங்கின. உணவு கிடைக்காமல் அவதிப்பட்டன. பல மிருகங்கள், பட்டினியால் மடிந்தன. குட்டி உரியினமான எறும்புகள், சேமித்து வைத்திருந்த தானியங்ளை தின்று, ஓய்வெடுத்தன.மழை லேசாக விட்டது; வெயில் முகம் காட்டியது. கோடைக் காலத்தில் கடினமாக உழைத்து, சேமித்து வைத்திருந்த தானியங்களை எல்லாம், வெயிலில் உலர்த்திக் கொண்டிருந்தன எறும்புகள்.மழையால், உணவு கிடைக்காமல் தவித்த வெட்டுக்கிளி, அந்தப் பக்கம் வந்தது. எறும்புகளை கண்டதும், 'தம்பிகளே... நான் ரொம்ப பசியோடு வாடுகிறேன்; சாப்பிட எதாவது கொடுத்து உதவுங்க...' என்று கேட்டது.'வெட்டுக்கிளியாரே... கோடைகாலத்தில், நாங்கள் கஷ்டப்பட்டு, தானியங்களை சேமித்து வைத்த போது, பாடிக் கொண்டிருந்தீர். அது மட்டுமல்ல; எங்களை கேலியும் செய்தீர்...''ஆமாம்... தப்பு தான்; இப்போது தான் சேமிப்பின் அருமை புரிகிறது. அறியாமல் செய்த பிழையை பொருத்தருளுங்க... என்னை மன்னித்து, பசி போக்க ஏதாவது தந்துதவுங்க...' வெட்டுக்கிளியின் கெஞ்சலால், மனம் நெகிழ்ந்த எறும்புகள், 'கோடைக் காலத்தில் தானியங்கள் அதிகமாக கிடைக்கும். அப்போது, சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். சேமித்தால், மழை காலத்தில், ஆடிப்பாடி உண்டு மகிழலாம்...' என்று அறிவுரை கூறி, உலர்ந்த தானியங்களை கொடுத்தன. காய்ந்த வயிற்றுடன், துவண்டு கிடந்த வெட்டுக்கிளி, அவற்றை உண்டு பசியாறியது. நன்றி பெருக்குடன் கண்ணீர் வடித்தது. உழைத்தும், சேமித்தும் வாழ்வேன் என, உறுதி ஏற்றது.குட்டீஸ்... உழைப்பது மட்டும் முக்கியமல்ல... இளைமையில் சேர்க்கும் செல்வத்தை, முதுமை காலத்துக்கு பயன்படும் வகையில், சேமித்து வைக்க வேண்டும்.கு.சாய் ஷக்தி ஸ்ரீ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !