விஞ்ஞானி! (14)
இன்று ஒலியை விட வேகமாகப் பறக்கும் விமானங்கள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டு பயன் படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், முதன் முதலில் இந்த விமானத்தைக் கண்டுபிடிக்க அடிப்படையாக அமைந்தது வானில் சிறகடித்துப் பறக்கும் பறவைகள்தாம். 1490ம் ஆண்டிலேயே இத்தாலி நாட்டின் இணையற்ற அறிவியல் மேதையும், புகழ் பெற்ற ஓவியருமான லியானர்டோ டாவின்சி பறக்கும் இயந்திரங்களுக்கான மாதிரிப் படங்களை முதன் முதலில் வரைந்து காட்டினார். அத்துடன் நில்லாமல் அவரே அப்படிப்பட்ட பறக்கும் இயந்திரம் ஒன்றையும் உரு வாக்கினார். இறக்கை போன்ற ஒரு பெரிய கருவியைக் கட்டிக் கொண்டு மனிதன் சிறிது தூரம் ஓடினால், அப்படியே அந்தரத்தில் பறக்க முடியும் என்று கூறினார் டாவின்சி.இருப்பினும் அந்த இறக்கை போன்ற கருவி இயங்குவதற்கு அதிகமான விசை (சக்தி) தேவைப்பட்டது. அதை இறக்கையில் எப்படி அமைத்து உருவாக்குவது என்று முதலில் தெரியவில்லை. அதனால் அவர் உருவாக்கிய கருவியைக் கட்டிக் கொண்டு பறக்க யாரும் முன் வரவில்லை. ஆனால், மனிதன் வானத்தில் பறக்க முடியும் என்ற நம்பிக்கையை முதன் முதலில் உலகத்திற்கு வழங்கியவர் டாவின்சிதான்.அதன் பின்னரும் பலர் பறந்தே தீரவேண்டும் என்று தீர்மானித்து தமது மூளைக்கெட்டிய வழிகளில் முயன்று கொண்டுதான் இருந்தனர்.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாண்ட் கோல்பியர் சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட இருவர் புகை நிரப்பப்பட்ட பலூன்களைத் தயாரித்து வானில் பறக்க விட்டனர். அந்த நிகழ்ச்சி பலரது சிந்தனையைக் கிளறிவிட்டது.அதைவிடப் பெரிய பலூன்களைத் தயாரித்து, வாயுவை நிரப்பிப் பறக்க விட்டதால், அதைப் பிடித்துக் கொண்டு மனிதனும் பறக்கலாமே என்று அவர்கள் நினைத்தனர். பலரிடம் சொல்லவும் செய்தனர்.நாட்டு மக்களெல்லாம் பறப்பதைப் பற்றியே பேசிக் கொண்டு இருந்ததைக் கேட்ட பிரெஞ்சு மன்னன், 'அது பைத்தியக்காரத்தனம்; பல பேர் மடிய நேரிடும்' என்று அஞ்சினான். அதனால், பலூன் மூலம் யாரும் வானில் பறக்க முயற்சி செய்யக் கூடாது என்று ஒரு தடையை விதித்து விட்டார்.ஆனால், அக்கால அறிவியல் அறிஞர்கள் பலரும் மன்னனின் கருத்தை ஏற்கவில்லை. 'ஆராய்ச்சிகளுக்குத் தடை விதிப்பது சரியல்ல...' என்று அவர்கள் மன்ன னிடம் கூறினர். அந்தக் தடையை உடனே நீக்கி விடவும் கோரினர்.'வானத்தில் ஆபத்தில்லாமல் பறக்க முடியும். உயிருக்கு இழப்பு ஏற்படாது என்ற உத்தர வாதத்தை உங்களால் வழங்க முடியுமா?' என்று அவர்களிடம் கேட்டார் மன்னன்.'அந்த உத்தரவாதத்தை இன்றைய நிலையில் எங்களால் தரமுடியாது. ஆனால், துணிவோடு பறக்க முன் வருபவர்களைத் தடைசெய்வது நல்லதல்ல... முன்னேற்றத் திற்கு அது பெரிய முட்டுக்கட்டையாகி விடும்!' என்று மட்டும் திரும்பத் திரும்ப வற்புறுத்தினர் அந்த அறிவியல் அறிஞர்கள்.பின்னர் தீவிரமாக யோசித்து மன்னன் ஒரு முடிவுக்கு வந்தான்.'கொலை, திருட்டுப் போன்ற கொடிய குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மரண தண்டனைக் குற்றவாளிகளை பலூன்களில் கட்டிப் பறக்க விடலாம். அவர்கள் மாண்டாலும் பரவாயில்லை' என்பதே அந்த முடிவு.அதையும் அறிவியல் அறிஞர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை.'முதன் முதலில் விண்ணில் பறக்கும் பெருமையைக் கொடும் குற்றவாளிக்கு அளிப்பது சரியல்ல!' என்பதே அவர்களது வாதம்.'எங்களில் ஒருவர் உயிரைப் பணயம் வைத்துப் பறக்கத்தயார். அதை அனுமதியுங் கள்!' என்பதே அவர்களுடைய இறுதி வேண்டுகோள். இறுதியில் மன்னன் அவர் களுடைய வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து, சம்மதம் தெரிவித்தார்.அறிவியல் அறிஞர்கள் உடனே வானவீதியில் பறக்கும் ஏற்பாடுகளைச் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டனர். பலூன் தயாரிக்கப்பட்டது. அதன் அடியில் ஒரு மனிதன் அமர்ந்து செல்லும் அளவில் ஒரு பெரிய கூடையும் வைத்துக் கட்டப்பட்டது. பலூனில் வாயுப் புகை நிரப்பப்பட்டது. அடுத்து, பறப்பது யார் என்ற கேள்வி எழுந்தது.அறிவியல் ஆர்வம் கொண்ட இளைஞரான எப்.பீ.டி., ரோசியர்ஸ் தான் பறக்க முன் வந்த இளைஞன்.பலூன் கூடையில் ரோசியர்ஸ் ஏறி அமர்ந்தார். பலூன் பறக்க விடபட்டது. பலூன் மெல்ல மெல்ல மேலே சென்று ஆயிரம் அடிக்கு மேற்பட்ட உயரத்தில் பறக்கத் தொடங்கியது. கீழேயிருந்த மக்கள் அதை ஆர்வத் தோடும், வியப்போடும் பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது திடீரென்று அந்த பலூனில் தீப்பற்றிக் கொண்டது. பத்து நிமிடங்களில் பலூன் முழுக்க எரிந்து சாம்பலானது. ரோசியர்ஸும் பலூனோடு சேர்ந்து எரிந்து சாம்பலாகி வானவீதியில் கலந்து விட்டான்.ஆனால், அவரைப் போன்ற அறிவியல் அறிவும், ஆர்வமும் கொண்ட பலரது துணிவும், தியாகமும்தான், இன்றைக்கு உலகம் முழுவதும் பறந்து கொண்டிருக்கும் வகை வகையான விமானங்களை உருவாக்க அடித்தளமாக அமைந்தது.***