சிற்பியின் நுட்பம்!
ஜித்தாபூர் நாட்டை, மனசேகன் என்ற மன்னர் ஆண்டு வந்தார்; அவருக்கு, தன்னைப் போல் ஒரு உருவச்சிலை வடித்து, அரண்மனை கலை மண்டபத்தில் வைக்க ஆசை ஏற்பட்டது. அந்த பணியை சிறப்பாக முடிக்கும், திறமை மிக்க சிற்பியை தேடி கண்டுபிடிக்க, அமைச்சருக்கு உத்தரவிட்டார். அமைச்சர் நம்பிக்கையுடன், 'மன்னா... வெகு சீக்கிரமே சிற்பியைக் கண்டறிந்து, உங்கள் ஆவலைப் பூர்த்தி செய்கிறேன்...' என்றார்; மகிழ்ச்சியடைந்தார் மன்னர்.நாட்டில் உள்ள சிற்பிகளை வரவழைத்த அமைச்சர், 'உங்களில் சிறப்பாக பணியாற்றுபவரை அறிய, ஒரு போட்டி வைக்கப் போகிறேன். அதில் வெற்றி பெறுபவரே, மன்னரின் உருவத்தை சிலையாக வடிக்க தகுதியானவர்...' என்றார்.போட்டிக்கு தயாராயினர் சிற்பிகள்.'ஒரு நொடியில், குதிரை சிலையை வடிக்க வேண்டும்...' என்று உத்தரவிட்டார் அமைச்சர். திடுக்கிட்ட சிற்பிகள், 'இதென்ன... ஒரு நொடியில் குதிரை சிலையை வடிப்பதா... குறிப்பிட்ட கால அவகாசம் எடுத்து தான் சிலையை வடிக்க முடியும்; அதுவும், மாதங்கள் பல ஆகலாம்; உங்கள் உத்தரவுப்படி எல்லாம் சிற்பம் வடிக்க முடியாது...' என்றனர்.அந்த கூட்டத்தில், சிற்பி மருதமுத்து மட்டும், அமைச்சரின் அருகில் வந்து, 'நான் உளி எடுத்து வந்திருக்கிறேன்; சிலை வடிக்க ஏற்ற கல்லை காட்டுங்கள்; நொடியில் குதிரை சிலை வடிக்கிறேன்...' என்றான்.மற்ற சிற்பிகளும், அமைச்சரும் ஆச்சரியமடைந்தனர். உளி, சுத்தியுடன், கல்லின் அருகே சென்ற மருதமுத்து, 'அமைச்சரே... நேரத்தை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்...' என்றான். சற்றுநேர மவுனத்துக்கு பின், கையசைத்து, உத்தரவிட்டார் அமைச்சர்.உடனே, உளியால், கல்லில், இரண்டு புள்ளிகள் வைத்து, கண் போன்ற அமைப்பை ஏற்படுத்தினான் மருதமுத்து. பணியை, நொடிக்குள் முடித்து, 'அமைச்சரே... எந்த உருவத்திற்கும், உயிரினத்திற்கும் கண் தான் முக்கியம்; சிற்பிகள் வடிக்கும் சிலைக்கும், உயிர் கொடுப்பது கண்கள் தான். இந்த கல்லில், குதிரையின் கண்களை வடித்து விட்டேன்; குதிரைக்கு உயிர் கொடுத்து விட்டேன்... 'உங்கள் பார்வைக்கு வேண்டுமென்றால், இது கல்லாகத் தெரியலாம். ஆனால், சிற்ப சாஸ்திரத்தின் அடிப்படையில், உயிருள்ள கண்கள் பெற்றுள்ளதால், இது குதிரை சிற்பம் தான்...' என்று, சாமர்த்தியமாக கூறினான்.அனைத்து சிற்பிகளும் வியப்படைந்தனர்; மருதமுத்துவின் அறிவுத் திறனை பாராட்டினர்.'மற்றவர்களைப் போல், முடியாது என்று கூறாமல், துணிந்து, மதி நுட்பத்தைப் பயன்படுத்திய மருதமுத்து, தலை சிறந்த சிற்பியாகத்தான் இருக்க முடியும்' என்று முடிவு செய்தார், அமைச்சர்.அப்போது அங்கு வந்த மன்னரிடம், விவரங்களை கூறினார் அமைச்சர். ஆச்சரியமடைந்த மன்னர், சிலை வடிக்கும் பொறுப்பை, அந்த சிற்பியிடமே ஒப்படைத்தார். அப்பணியை சிறப்பாக முடித்து பாராட்டும், பரிசுகளும் பெற்றான் மருதமுத்து.குட்டீஸ்... எந்த செயலையும் செய்ய வழிமுறைகள் உண்டு. முடியாது என்று ஒதுங்கிச் செல்ல கூடாது; தன்னம்பிக்கையுடன் நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும்... சரியா!