சாக்கடை நீர்!
திருநெல்வேலி, ஜவஹர் நகர் மன்ற உயர்நிலைப் பள்ளியில், 1964ல், 8ம் வகுப்பில் சேர்ந்தேன். புதிய வகுப்பு ஆசிரியரை தெரிந்து கொள்ளும் ஆர்வம் முதல்நாள் அதிகமாக இருந்தது. என்னைப் போலவே பலரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். உரிய நேரத்தில் வகுப்புக்கு வந்தார் ஆசிரியர் ராயர். சுவாரசியமிக்க கதைகள் சொல்லி பாடம் நடத்துவதில் புகழ் பெற்றவர். வகுப்பு நேரமான, 40 நிமிடத்தில், 30 நிமிடம் கதை சொல்லியே பாடத்தை விளங்க வைப்பார். முதல் நாளன்று என்ன கதை சொல்ல போகிறார் என எதிர்பார்த்தபடி இருந்தோம். அதிரடியாக, 'நீங்க எல்லாரும், முறையாக தேர்வு எழுதி, நல்லமுறையில் தேர்ச்சி பெற்று, இந்த வகுப்புக்கு வந்ததாக நினைக்கிறீர்களா...' என கேட்டார்.எல்லாரும், 'ஆம்...' என, ஒரே நேரத்தில் சொன்னோம். உடனே தனக்கே உரிய பாணியில், 'முற்காலத்தில், ஒரு ஊரில், தண்ணீர் பஞ்சம் நிலவியது; குடிக்க கூட தண்ணீர் கிடைக்கவில்லை. அலைந்து திரிந்து தேடினர் மக்கள். வேறு வழியின்றி, சாக்கடை நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்து தாகம் தீர்த்தனர். அதுபோல் தான், நீங்களும் இந்த வகுப்புக்கு வந்திருக்கிறீர்கள். உங்கள் விடைதாளை மறு மதிப்பீடு செய்தால் ஒருவர் கூட தேற மாட்டீர்கள்...' என்றார்.இதை கேட்டதும் வாய் அடைத்து, பாடங்களை முறையாக கற்க துவங்கினோம். எனக்கு, 71 வயது; அன்று அந்த ஆசிரியர் சொன்ன கதை, இன்றும் நினைவில் உள்ளது. மனைவியுடன் அவ்வப்போது பகிர்ந்து மகிழ்கிறேன்.- க.குத்தாலிங்கம், திருவனந்தபுரம்.தொடர்புக்கு: 85474 95484