உள்ளூர் செய்திகள்

சிலுக்கு...

முன்னொரு காலத்தில் பறவைகளில், சேவல்களே உயரமாகப் பறக்கும் ஆற்றல் உடையனவாக இருந்தன. அந்தச் சேவல்கள் எல்லாவற்றிற்கும் தலைவனாக 'சிலுக்கு' என்ற சேவல் இருந்தது.ஒரு தடவை பறவைகளிடையே, யார் மிக உயரமாகப் பறப்பவர் என்ற போட்டி ஏற்பட்டது. போட்டியில் கலந்து கொள்ள சிலுக்கு வந்தது.கம்பீரமாக நின்று சுற்றும்,முற்றும் பார்த்து, நெஞ்சை நிமிர்த்தி, சிறகுகள் அகல விரித்து, உயரே எழுந்து பறந்து முதலிடம் பெற்றது.பறவைகள் அனைத்தும் அதை பாராட்டின. சிவப்பு நிறத் தொப்பி சிலுக்குக்கு அணிவிக்கப் பட்டது. வெற்றி பெறுபவருக்கு அணிவிக்கப் படும் மிகப்பெரிய விருதாக அது கருதப் பட்டது. சிலுக்கு மிகவும் பெருமிதமடைந்தது. தலையை நிமிர்த்தி மற்ற பறவைகளைப் பார்த்து, ''கொக்கரக்கோ... என்னை வெல்ல எவராலும் முடியாது,'' என்று வெற்றி முழக்கம் எழுப்பியது.கிடைத்த வெற்றி சிலுக்குக்கு மிகவும் கர்வத்தை ஏற்படுத்தியது. இப்போதெல்லாம் ஏனைய பறவை களோடு முன்னர் போல அது பேசுவதில்லை. எப்போதும், ''என்னை வெல்ல எவராலும் முடியாது,'' என்று கூவியது.தினமும் பயிற்சிகளைச் செய்யாமல், சோம்பேறியாகச் சாப்பிடுவது, தூங்குவது மாக தன் காலத்தைக் கடத்தியது. முன்னர் இருந்ததை விட பலமடங்காக அதன் உடல் பருமனாகி விட்டது. நடப்பதற்கே மிகவும் கஷ்டப்பட்டது. எனினும் அடிக்கடி தலையை உயர்த்தி நெஞ்சை நிமிர்த்தி, ''கொக்கரக்கோ... நானே வெற்றி வீரன்,'' என்று கர்வத்துடன் உரக்கக் கூறியது.ஒருநாள் மாலை நேரம், மயில் வேகமாக ஓடி வந்தது. சிலுக்கைப் பார்த்து வணக்கம் சொல்லியது. பின்னர், ''சிலுக்கு அண்ணா, நேற்று உங்களை விட உயரமாகப் பருந்து அண்ணன் பறந்ததாக, எல்லாரும் பேசுகிறனர்,'' என்று பயந்தவாறு சொன்னது.சிலுக்கு ஏளனமாகச் சிரித்தது.''போடா மடையா... என்னை வெல்ல இவ்வுலகில் எவரும் கிடையாது,'' என்று ஏளனமாகப் பேசி மயிலைத் துரத்தியது.சில நாட்களுக்கு பின்னர், குயில் தம்பி வேகமாகப் பறந்து வந்தான். சிலுக்கைப் பார்த்து மரியாதையுடன் வணங்கினான்.''சிலுக்கு அண்ணா! நேற்று மாலை புறாத் தம்பி உங்களைவிட உயரமாகப் பறந்தான். அதை நான் என் கண்ணால் கண்டேன்,'' என்றான்.சிலுக்கின் கண்கள் கோபத்தால் சிவந்தன. தலையை வேகமாக ஆட்டி, கால்களால் கோபத்துடன் தரையைக் கிளறியது.''என்னை வெல்ல எவராலும் முடியாது. முட்டாளே இனியும் என் கண் முன்னே நிற்காதே, ஓடிவிடு,'' என்று உரக்கக் கத்தியது.அஞ்சி நடுங்கிய குயில் தம்பி, வேகமாகப் பறந்து ஓடினான்.சிலுக்கு மனதில் லேசான சந்தேகம் ஏற்பட்டது. இங்குமங்குமாக கடுமையாக யோசித்தவாறு நடந்தது.''மயிலும், குயில் தம்பியும் சொன்னது உண்மையாக இருக்குமா? பருந்தும், புறாவும் என்னைவிட உயரமாகப் பறந்திருக்குமா? இருக்கவே இருக்காது,'' என்று தனக்குத் தானே ஆறுதல் சொன்னது.''கொக்கரக்கோ...'' என்று உரத்துக் கூவியது. வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு, சோம்பலுடன் மீண்டும் படுத்துத் தூங்கியது.மறுநாள், காலைப்பொழுது. சிலுக்கு இன்னமும் தூக்கத்திலிருந்து விழிக்க வில்லை. மைனா அக்கா பதைபதைத்தவாறு பறந்து வந்தாள். படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த சிலுக்கைப் பதற்றத்துடன் தட்டி எழுப்பினாள்.திடுக்கிட்டு எழுந்தது சிலுக்கு.''மைனா அக்கா! ஏன் எனது தூக்கத்தைக் கெடுத்தாய்?'' என்று எரிச்சலுடன் மைனாவைப் பார்த்து கேட்டது.''சிலுக்கு! உனக்கு ஒரு செய்தி தெரியுமா? காக்கை நேற்று மாலை, உன்னை விட உயரமாகப் பறந்தான். அதை நான் என் கண்களால் பார்த்தேன்,'' என்று கவலையுடன் சொன்னது.அப்போதுதான் சிலுக்கின் மனதில் ஒருவிதமான அச்சம் பரவியது.''மைனா அக்கா நிச்சயமாக பொய் சொல்ல மாட்டாள். அப்படியானால், அற்பனான காக்கை என் சாதனையை முறியடித்துவிட்டானா?'' என்று கவலை யுடன் யோசித்தது. எனினும் ஒரு முடிவிற்கு வந்தது. மீண்டும் ஒருமுறை எல்லாருக்கும் தன் திறமையை வெளிப்படுத்த விரும்பியது.''நாளை காலையில் எனது திறமையை மீண்டும் வெளிப்படுத்துகிறேன்,'' என்று அறிவிப்பு வெளியிட்டது. காட்டில் எல்லா இடமும், சிலுக்கின் அறிவிப்பைப் பரப்பியது சிட்டுக்குருவி.அடுத்தநாள் அதிகாலையிலிருந்தே, காட்டில் எல்லாப் பகுதிகளிலிருந்தும் பறவைகள், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து சேரத் தொடங்கின. வட திசையி லிருந்து மயில்களின் அரசனும், தென் திசையிலிருந்து பருந்துகளின் தலைவனும், கிழக்கிலிருந்து வானம்பாடியும், மேற்கி லிருந்து பஞ்சவர்ணக் கிளியும் எனப் பெரிய, பெரிய பறவை அரசர்களும் அங்கு வந்து கூடினர்.காற்று வீசும் சத்தத்தையும், இலைகளின் சலசலப்பையும் தவிர, அந்த இடத்தில் வேறு எந்த ஓசையும் கேட்கவில்லை.அப்போது அங்கே மிடுக்குடன் நடந்து வந்தது சிலுக்கு. தலையை உயர்த்தி, சுற்றும் முற்றும் கர்வத்துடன் பார்த்தது. நெஞ்சை நிமிர்த்தி, தலையை வளைத்து உரக்கக் கூவியது.''கொக்கரக்கோ... என்னை வெல்ல எவராலும் முடியாது!''மரத்தின் கிளையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறியது. சிறகுகளை அகல விரித்துப் பரப்பியது. வேகமாக எழுந்து பறக்க முயன்றது. அந்தோ பரிதாபம். முடியாமல் நிலத்தில் விழுந்து அடிபட்டது.சிலுக்குக்கு ஒரே அதிர்ச்சி.''என்னால் ஏன் பறக்க முடியவில்லை?'' சுற்றியிருந்த பறவைகளுக்கு ஒன்றும் புரியவில்லை. சிலுக்கு பறக்க முடியாமல், நிலத்தில் விழுந்ததாக அவை எண்ண வில்லை. பறப்பதற்கு முன்னர் ஏதோ உடற்பயிற்சி செய்கிறது என்றே அவை நினைத்தன.மீண்டும் ஒருமுறை சிலுக்கு பறக்க முயற்சி செய்தது. முன்னர் போலவே, நிலத்தில் படாரென்று விழுந்து அடிபட்டது. அடிகளுக்கு மேல் அடி விழுந்ததால் சிலுக்கால் பறப்பதற்கு முடியவில்லை. பயிற்சிகள் செய்யாமல், சோம்பேறியாக இருந்ததால், அதன் உடல் மிகவும் பருமனானதே அதன் தோல்விக்குக் காரணம்.சிலுக்கால் பறக்க முடியாது என்பதை ஏனைய பறவைகள் உணர்ந்தன. சிலுக்கைப் பார்த்து கேலியாகச் சிரித்தன. அவமானம் ஒருபுறம், பறக்க முயன்று கீழே விழுந்ததால், ஏற்பட்ட அடிகளின் வலி மறுபுறம் சிலுக்கை வாட்டின.அவமானம் தாங்க முடியாமல், தலையைத் தொங்கப் போட்டவாறு வேகமாக அங்கிருந்து சிலுக்கு ஓடியது. அதற்குப் பிறகு எவரும் சிலுக்கை அந்தக் காட்டிலே பார்க்கவில்லை.எனினும் இன்றும், சிவப்புத் தொப்பி யணிந்த சேவல்கள், தலையை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி, உரத்த குரலில், ''கொக்கரக்கோ...'' என்று வெற்றி முழக்கம் இடுவதை நாம் பார்க்கலாம். அவமானத்தால் காட்டை விட்டு, நாட்டுக்குள் ஓடிவந்த சிலுக்கின் உறவினர்கள் அவை. தமது பழைய பெருமையை இன்றும் உரத்த குரலில் கூவி, நமக்கு அவை தெரிவிக்கின்றன.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !