அதிமேதாவி அங்குராசு!
இந்திய ஹாக்கி அணியும், சர்வாதிகாரி ஹிட்லரும்! ஹா க்கி விளையாட்டு, முதன் முறையாக ஒலிம்பிக்கில், 1928ல் சேர்க்கப்பட்டது. முதல் போட்டி, ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் நடந்தது. அதில் இந்திய அணி, ஜெயபால்சிங் முண்டா தலைமையில் களம் கண்டது. இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியை, 3- - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வென்ற முதல் தங்க பதக்கம். இது, இந்தியாவுக்கு மட்டுமே கிடைத்தது அல்ல; ஒட்டுமொத்த ஆசியா கண்டத்துக்கே பெருமை சேர்த்தது. இப்போது, ஒலிம்பிக் போட்டியில் ஜொலித்து கொண்டிருக்கும் ஆசிய நாடுகளான ஜப்பான், சீனா, கொரியா கூட அந்த காலத்தில் தங்கப்பதக்கம் வென்றதில்லை. அந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக, எந்த நாடும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்சில், 1932ல் அடுத்து ஒலிம்பிக் போட்டி நடந்தது. இதில் இரண்டு ஆட்டங்களில் இந்தியா, 35 கோல்கள் அடித்தது. அமெரிக்க அணியை 24 - -1 என கோல் அடித்து வென்றது இந்தியா. ஹாக்கி ஆட்டத்தின் மந்திரவாதி என கருதப்பட்ட வீரர் தயான் சந்த், அவரது தம்பி ரூப்சிங் உட்பட ஆட்டக்காரர்களின் புகழ் உலகம் முழுதும் பரவியது. ரூப்சிங் மட்டும், 12 கோல்கள் அடித்தார். ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக கோல் அடித்தவர் என்ற புகழையும் பெற்றார். இறுதிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி, 2ம் முறையாக தங்கப்பதக்கம் வென்றது இந்தியா. அடுத்தது, ஐரோப்பிய நாடான ஜெர்மனி , பெர்லின் நகரில் ஒலிம்பிக், 1936ல் நடந்தது. இந்த முறை இந்திய ஹாக்கி அணியின் தலைமை பொறுப்பை ஏற்று வழி நடத்தியது தயான் சந்த். இறுதிப் போட்டியில், 8- - 1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா. ஹாக்கி இறுதிப் போட்டி ஒன்றில் இவ்வளவு அதிக கோல் வேறுபாட்டில் எந்த அணியும் வென்றதில்லை. இன்று வரை முறியடிக்கப்படாத சாதனையாக இது உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில், நம் வீரர் தயான் சந்த்தின் ஹாக்கி ஆட்டம், ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரையும் ஈர்த்தது. பரிசளிப்பு நிகழ்வின் போது, 'நீங்க ஜெர்மானியராக இருந்திருந்தால், எங்கள் ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவி தந்து கவுரவித்திருப்பேன்...' என புகழ்ந்தார் ஹிட்லர். ஐரோப்பிய நாடான இங்கிலாந்து லண்டனில், 1948ல் ஒலிம்பிக் போட்டி நடந்தது. இந்த முறை இந்திய அணியை கிஷன்லால் வழி நடத்தினார். பாகிஸ்தான் தனி நாடாகி அந்த அணியும் பங்கேற்றது. இந்த நிலையில், 4 - 0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, 4ம் முறையாக தங்கம் வென்றது இந்தியா. நாடு விடுதலை அடைந்த பின் கிடைத்த முதல் வெற்றி இது. அப்போதைய இங்கிலாந்து மன்னர் ஜார்ஜ், நம் வீரர்களுக்கு விருந்து கொடுத்து கவுரவித்தார். ஐரோப்பிய நாடான பின்லாந்து, ஹெல்சிங்கி நகரில், 1952ல் ஒலிம்பிக் இறுதிப் போட்டி நடந்தது. இதில், 6 - 1 என்ற கோல் கணக்கில், நெதர்லாந்து அணியை வீழ்த்தி 5ம் முறையாக தங்கம் வென்றது இந்தியா. இந்த போட்டிக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர் முனுசாமி ராஜகோபாலின் தடுப்பாட்டம் கண்டு திகைத்து விட்டனர் நெதர்லாந்து வீரர்கள். ஒருக்கட்டத்தில் அவரை துாக்கி மைதானதுக்கு வெளியே நிறுத்தி, 'இங்கேயே நில்லு... அப்போ தான் எங்களுக்கு தொல்லை தர மாட்டாய்...' என, நகைச்சுவை பொங்க கூறியது, விளையாட்டு வரலாற்றில் பெருமை மிகு நிகழ்வாக பேசப்படுகிறது. ஆஸ்திரேலியா, மெல்போன் நகரில் ஒலிம்பிக் போட்டி, 1956ல் நடந்தது. இந்திய அணி, பல்பீர்சிங் தலைமையில் களம் கண்டது. இறுதிப் போட்டியில், பெனால்டி கார்னர் கோல் அடிக்கும் முறையில் பாகிஸ்தானை வீழ்த்தி, 6ம் முறையாக தங்கம் வென்றது இந்தியா. ஹாக்கி போட்டியில் இந்தியா எளிதாக தங்கம் வெல்ல இயலாது என்பதை புரியவைத்தது அந்த ஒலிம்பிக். ஐரோப்பிய நாடான இத்தாலி, ரோம் நகரில், 1960ல் நடந்த ஒலிம்பிக்கில் இந்திய அணி சிறப்பாக ஆடியது. வீரர் பிரிதிபால் சிங் உழைப்பால் அணியின் சிறப்பு மிளிர்ந்தது. ஆனாலும் வெள்ளிப்பதக்கம் தான் வெல்ல முடிந்தது. கிழக்காசிய நாடான ஜப்பான், டோக்கியோவில், 1964ல் ஒலிம்பிக் இறுதிப் போட்டி நடந்தது. இதில் 1 - 0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது. ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியாவுக்கு எதிராக ஒரு கோலுக்கும் அதிகமாக அடிக்க இயலாமல் இருந்தன உலக நாடுகள். இந்த நிலை வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், 1968ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் மாறியது. இங்கு இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் தான் கிடைத்தது. தொடர்ந்து, ஜெர்மனி மியூனிக் நகரில் 1972ல் நடந்த ஒலிம்பிக்கிலும் இந்தியாவுக்கு வெண்கலம் தான் கிடைத்தது . ஆசிய - ஐரோப்பிய கண்டங்களை உள்ளடக்கிய ரஷ்யா, மாஸ்கோ நாரில், 1980ல் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மீண்டும் தங்கம் கிடைத்தது. ஐரோப்பிய நாடான ஸ்பெயின் அணியுடன் கடுமையாக மோதி தான் அந்த பதக்கம் வாங்க முடிந்தது. தொடர்ந்து பின்னடைவுகள் ஏற்பட்டன. சீனா, பீஜிங் நகரில், 2008ல் நடந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் பங்கேற்க இந்திய அணி தகுதி பெறவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பின், இந்திய ஹாக்கி அணி தற்போது தலை நிமிர்ந்து வருகிறது. ஜப்பான், டோக்கியோ நகரில், 2020ல் நடந்த ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலம் வென்றது. ஐரோப்பிய நாடான பிரான்ஸ், பாரிஸ் நகரில், 2024ல் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றது இந்தியா. ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டிகளில் தொடர்ச்சியாக, ஆறு முறை தங்கம் வென்ற இந்தியாவின் சாதனையை உலகில் யாரும் முறியடிக்கவில்லை. - என்றென்றும் அன்புடன், அங்குராசு.