பறக்கும் பாம்பு!
கிரைசோபீலியா வகையை சேர்ந்த உயிரினம் பறக்கும் பாம்பு. கோலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்தது. தனித்துவம் நிறைந்தது. பச்சை நிறத்தில், பளபளப்பான தோலுடன் காணப்படும். இதனால் பச்சை மரப்பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது 1.5 மீட்டர் வரை நீளமாக இருக்கும். மரங்களில் வாழும். உடல் மெலிந்து, செதில்கள் மென்மையாக இருப்பதால் மரங்களில் எளிதாக ஏற முடியும். பல்லி, தவளை, சிறு பறவைகள், பூச்சிகளை உணவாக்கும். தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா கண்ட பகுதியில் இந்தியா, இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகளில் இவை காணப்படுகிறது. விஷமற்ற இந்த பாம்பு இனம் மரங்களுக்கு இடையே பறக்கும் திறனுடையதாக கருதப்படுகிறது. உண்மையில் இது பறப்பதில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். மாறாக, உடலை தட்டையாக்கி, காற்றில் 100 மீட்டர் துாரம் வரை சறுக்கி செல்லும் திறன் உடையது. முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். இந்த இனத்தில் கிரைசோபீலியா ஓர்னேட்டா என்ற வகையும் உள்ளது. இது, அலங்கார பறக்கும் பாம்பு என அழைக்கப்படுகிறது. மஞ்சள் கோடுகளுடன் அழகிய தோற்றம் கொண்டது. இந்த பாம்பு இனம், மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. பதுங்கி வாழும் தன்மை கொண்டது. இயற்கையின் அற்புத படைப்புகளில் இவையும் ஒன்றாக கருதப்படுகிறது.- வ.முருகன்