இளஸ் மனஸ்! (270)
அன்புள்ள அம்மா...என் வயது, 15; பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. எனக்கு கற்பனைத் திறன் மிகவும் அதிகம்; கவிதைகளும், கதைகளும் எழுதுவேன். நான் கதை எழுதுவதை பார்த்து கண்டிக்கின்றனர் என் பெற்றோர்.* கதை எழுதுவதற்கு ஒரு மொழியின் இலக்கண அறிவு தேவை* கசப்பான அனுபவங்களையும், சோக நிகழ்வுகளையும் ஏராளமான தோல்விகளையும் கடந்து வந்திருக்க வேண்டும்* எழுத்தாளராக குறைந்தபட்ச வயது, 30 அடைந்திருக்க வேண்டும்* பெண்களுக்கு எழுதும் ஆசை எதற்கு... ஒழுங்காக படிக்கும் வேலையை கவனி என்று கண்டிப்புடன் கூறி விட்டனர். அவர்கள் கூறுவது எல்லாம் உண்மையா... அதன்படி, இருந்தால் தான் கவிதை எழுத முடியுமா... பதில் சொல்லுங்கள்.இப்படிக்கு,-முத்துலட்சுமி கணேசன்.அன்பு மகளே...எழுத்தாளராக பிரகாசிக்க, மொழியில் இலக்கணம் தெரிய வேண்டும் என அவசியமில்லை. கோர்வையாக சொற்களை புரியும்படி எழுத, சொல்லத் தெரிந்தால் போதும்; அனுபவங்களை தான் எழுத வேண்டும் என்பது இல்லை. அதீத கற்பனைகளையும் எழுதலாம்; கதை சொல்வதும், கேட்பதும் ரத்தத்தில் ஊறியவை. மகாபாரதமும், ராமாயணமும் எழுதப்பட்ட பூமி இது. கோடி கதைகள் இங்கு கொட்டி கிடக்கின்றன.பல்வேறு வயதுள்ளோர் எழுதி சாதித்துள்ளனர். அது பற்றி பார்ப்போம்...* மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு எமிரேட் தலைநகர் அபுதாபியில் வசிக்கும் நான்கு வயது சிறுவன் சாயித் ரஷீத் அய்ம்ஹெரி. இவர், 'சாயீத் யானையும், கரடியும்' என்ற கதையை எழுதி பிரசுரித்துள்ளார். இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது* கிறிஸ்டோபர் பவோலினி, 15ம் வயதில், 'எரகான்' என்ற நாவலை எழுதியுள்ளார்* ஐந்து வயது சிறுமியாக, கவிதையும், கதையும் எழுதி, குளோபல் சைல்டு ப்ரோடிஜி அவார்ட்ஸ் வாங்கியுள்ளார், அபிஜிதா குப்தா* அனுஷா சுப்பிரமணியன், 12ம் வயதில் கேட்ரியோனாவின் வாரிசுகள் என்ற தலைப்பில் எழுதியுள்ளார்* ஜுனி சோப்ராவுக்கு வயது, 15 ஆகிறது; பேசும் வீடு என்ற நாவலை எழுதி புகழ் பெற்றுள்ளார்* மெலிட்டா டெசி, 16ம் வயதில் கோளங்களின் போர் என்ற நாவலை படைத்து புகழ் பெற்றுள்ளார்* சரண்யா பட்டாச்சார்யா, 16ம் வயதில் பருவங்களின் மோதல் என்ற தலைப்பில் எழுதியுள்ளார்* ஐரோப்பிய நாடான பிரான்சு பாரிசில் வசிக்கும் நிக்கி கன்னா, 15ம் வயதில் ஒரு நாவல் வடித்துள்ளார்* கிரியசிஸ் நைட், 7ம் வயதில் மிகச்சிறந்த பெரிய சிங்கம் என்ற கதையை எழுதியுள்ளார். அதனால், எழுதுவதற்கு வயது ஒரு தடை என எண்ண வேண்டாம். படிப்பையும், எழுத்தையும் இரு கண்களாக பாவிக்கவும். நல்ல வேலைக்கு சென்று, காலுான்றிய பின், எழுத்தை பொழுது போக்காக மேற்கொள்ளலாம். தினமும், 100 பக்கங்கள் வாசி. தொடர் வாசிப்பு சரளமான எழுத்து நடையையும், மொழி இலக்கணத்தையும் கற்றுத் தரும். எழுதியவற்றை தொகுத்து, மின் புத்தகங்களாக வெளியிடலாம்; இது மிகவும் சுலபம்.ஈசாப் கதைகள், தெனாலிராமன், பீர்பால், முல்லா நசுருதீன், டான் குவிசாட், ஆயிரத்தோரு அரபியன் இரவுகள், சிந்துபாத் கதைகள், டின்டின் கதைகள் படி.நிறைய கார்ட்டூன் படங்கள் பார். தினமும், இரவு அன்றாட நடவடிக்கையை டைரியில் எழுது. வரும், 2025ல் உன் முதல் நாவலை வெளியிட வேண்டும்; வெளியீட்டு விழாவுக்கு நான் வந்து வாழ்த்த வேண்டும்.- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.