இளஸ் மனஸ்! (285)
அன்புள்ள அம்மா...என் வயது, 14; தனியார் பள்ளி ஒன்றில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவி. எனக்குள் ஒரு கேள்வி எழுந்துள்ளது. பல நாட்களாக விடை தேடுகிறேன். மனித குலத்துக்கு பெரும் நாசம் விளைவிப்பது எது என்பது தான் அந்த கேள்வி. அதற்கு விடையாக, இயற்கை சீற்றம், பெருமளவில் பரவும் கொள்ளை நோய், உலக அளவில் ஆங்காங்கே நடக்கும் போர்கள் என பல உள்ளன. இந்த மூன்று பேரழிவுகளில், எதனிடம் கவனமாக இருக்க வேண்டும். தகுந்த விளக்கம் அளித்து உதவுங்கள்.இப்படிக்கு,எம்.சீத்தாலட்சுமி.அன்பு மகளுக்கு...உலகில், இயற்கை சீற்றங்களாக, பூகம்பம், சுனாமி, அக்னி வெயில், காட்டு தீ, புயல், வெள்ளம், எரிமலை வெடிப்பு, மூடுபனி, பனிப்பாறை, ஏரி வெடிப்பு போன்றவை கருதப்படுகிறது. இயற்கை சீற்றங்களால் ஒவ்வொரு ஆண்டும், 10 லட்சம் பேர் இறப்பதாக புள்ளி விபரம் கூறுகிறது. கொள்ளை நோய்களில் காலரா, எச்.ஐ.வி., கோவிட், எபோலா வைரஸ், சார்ஸ், பிளேக், கறுப்பு மரணம், ஸ்பானிஷ் ப்ளூ காய்ச்சல், சளிக்காய்ச்சல் போன்றவை அடங்கும். இவற்றில், கறுப்பு மரணத்தால், 5 கோடி பேர் இறக்கின்றனர். சளிக்காய்ச்சல் பாதிப்பால், 10 கோடி பேர் இறப்பதாக புள்ளி விபரம் கூறுகிறது. எய்ட்ஸ் நோய்க்கு, 3.3 கோடி பேர் இறந்துள்ளனர். கோவிட் பெருந்தொற்றில், 2.7 கோடி பேர் இறந்தனர்.இனி, உலகப் போர்களை எடுத்துக் கொள்வோம்...முதல் உலகப்போரில், ராணுவம், பொதுமக்களை சேர்த்து, 4 கோடி பேர் கொல்லப்பட்டனர்.இரண்டாம் உலகப்போரில், 6 கோடி பேர் கொல்லப்பட்டனர்.போர் என்றால், இனப்படு கொலை, கூட்டு குண்டு வீச்சு, கொள்ளை நோய், பசி பட்டினி, பலாத்காரம், இடம் பெயர்தல் போன்றவையும் அடங்கும்.ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா போர், பிப்., 24, 2022ல் துவங்கியது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் அக்டோபர் 7, 2023ல் துவங்கியது. இவ்வாறு சண்டையிடும் நாடுகளுக்கு ஆதரவாக, எதிராக மற்ற நாடுகள் சேர்ந்து மோதிக் கொண்டால் நிலமை என்னவாகும். மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் வாய்ப்பு ஏற்படும். மனம் போன போக்கில் கொடூர அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். உலகம் முழுக்க கதிர்வீச்சால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும்.உலக பொருளாதாரம் தலைகுப்புற கிடக்கும். கோடிக்கணக்கான மக்கள் அகதிகளாவர். பசி, பட்டினி, நோய், மரணம் என மனித குலம் வீழ்ச்சியடையும்.மூன்றாம் உலகப் போர் ஆரம்பித்த சில மாதங்களில், உலகின், 800 கோடி பேரும் அழிந்து, பூமி உருண்டை ராட்சத இடுகாடு ஆகி விடும். மனித குலம் மட்டுமல்ல, உயிரினங்களும் அழிந்து விடும். மனித குலத்துக்கு எதிரி நோய் கிருமிகளோ, இயற்கை பேரழிவோ அல்ல... பேராசை உடைய மனிதன் தான். ஒரு குரங்கோ மற்ற விலங்குகளோ தன்னையும், தன் இனத்தையும் அழிக்க பயங்கர குண்டு தயாரிப்பதில்லை.மனிதனின் பேராசை, பெண்ணாசை, மண்ணாசை, ஈகோ, இன, மத, மொழி வெறி செயல்கள் அழிவுக்கு தான் பயன்படும். நோய் கிருமிகளை விட, இயற்கை பேரழிவுகளை விட, ஆயிரம் மடங்கு அழிவை தருவது போர். சண்டையிடும் நாடுகளுக்கு இடையே புகுந்து, தனி மனிதராக ஒருவர் எதுவும் செய்ய இயலாது. தலைவர்கள் தான், சமாதானத்துக்கு பாடுபட வேண்டும். ஒற்றுமையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். போரில்லா அமைதியான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் சபதமேற்று பாடுபட வேண்டும்!- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.