உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ் (335)

ஆன்ட்டி, எங்க அம்மாவுக்கு குட்டி குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தையை காட்டி, 'இவள் தான் உன் தங்கச்சி பாப்பா... நீ இவளுக்கு அண்ணன். பொறுப்பா, ஜாக்கிரதையாக பார்த்துக்கணும்...' என்று என்னிடம் சொன்னாங்க. 'அப்பா, காலங்காத்தால வேலைக்கு போயிட்டு, ராத்திரி தான் வராங்க... அதனால், ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாலயும், ஸ்கூல்லேருந்து வந்தப்புறமும் விளையாடப் போகாம, நீ தான் தங்கச்சி பாப்பாவை பக்கத்துல உட்கார்ந்து கவனமாய் பார்த்துக்கணும்'ன்னு அம்மா, என்னிடம் பொறுப்பை ஒப்படைச்சாங்க. அப்போ பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. கிளாஸ் லீடரான மாதிரி தோணிச்சு. ஆனா, போகப்போக தங்கச்சி பக்கத்துலயே உட்கார்ந்து போரடிக்குது, ஆன்ட்டி. காலையில், டீ போட்டு கொடுத்துட்டு, வீட்டு வேலைக்கு போற அம்மா, 8:00 மணிக்கு திரும்பி வர்றாங்க. கையோடு கொண்டு வர்ற இட்லியோ, தோசையோ குடுத்து, அவசர அவசரமா குளிக்க வச்சு, தலைசீவி, சீருடை மாட்டி, 'ஓடுடா பள்ளிக்கூடத்துக்கு'ன்றாங்க... நானும், மணியடிக்கிறதுக்குள்ள ஓட்டமும், நடையுமா ஸ்கூலுக்கு போறேன். தினமும் இப்படி செய்ய முடியல. தங்கச்சி பாப்பா பக்கத்துல உட்கார்ந்துக்க, ஆரம்பத்துல நல்லா இருந்துச்சு; ஆனா இப்பல்லாம் போரடிக்குது. வெளியே விளையாடப் போகணும் போல இருக்குது. விளையாட போனா, அம்மா திட்றாங்க; முதுகுல நாலு போடுறாங்க. வீட்டை விட்டு ஓடிப் போயிடலாம்ன்னு தோணுது... என்ன செய்யறதுன்னு புரியல ஆன்ட்டி. இப்பல்லாம், அம்மா என்னைக் கொஞ்சறதே இல்லை. 'செல்லம், குட்டி, கண்ணு...' என்று தங்கச்சி பாப்பாவை மட்டும் கொஞ்சுறாங்க... அழுகையா வருது, ஆன்ட்டி... - இப்படிக்கு, லிங்கா. அன்பு மகனே, இதை யார் முழுசா உனக்கு எழுதி கொடுத்தது... அந்த பெரியவங்க கிட்டயே, நீ இதைக் கேட்டிருக்கலாம். அவர்களே உனக்கு நல்ல பதில் சொல்லியிருப்பாங்க. ஆனாலும், நீ என்னை கேட்டதால் நான் சொல்கிறேன்... நீ குட்டிப் பாப்பாவாக இருந்தபோது, உன்னையும் இப்படித்தான் அம்மா கொஞ்சியிருப்பார்; முத்தம் கொடுத்து மகிழ்ந்திருப்பார். உனக்கு, 5 - 6 வயது ஆகும் வரை, நீ அந்த வீட்டின் செல்லக்குட்டியாக இருந்திருப்பாய். நீ, இப்போது பள்ளிக்கு செல்லும் சிறுவன். எந்த வகுப்பு என்பதை நீ குறிப்பிடவில்லை. எந்த வகுப்பானாலும், இப்போது நீ தான் வீட்டின் மூத்த பையன். குழந்தைப் பருவத்திலிருந்து வெளிவந்து, சிறுவனாகி விட்டவன். அம்மா மாதிரியே தங்கை மீது அக்கறையும், அன்பும் செலுத்த வேண்டியவன். இரண்டாவதாக பிறந்த குழந்தையை கொஞ்சும்போது, முதலாவதாக பிறந்த மூத்த குழந்தைக்கு பொறாமை வருவது சகஜம் தான்; அது இயற்கை. ஆனால், அதை விட்டு வெளியே வா. அவள் ஒன்றும் அறியாத சின்னஞ்சிறு குழந்தை என்பதை நினைத்துப் பார். அவள் மீது பொறாமைப்படலாமா... குழந்தைக்கு என்ன தெரியும்... முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரி அந்த குழந்தை. நீ சிரித்தால், அது சிரிக்கும். 'ங்கா.. ங்கா...' என்று பேச முயற்சிக்கும். நீ கோபம் காட்டினால் உதட்டை பிதுக்கி, அழ முயற்சிக்கும். நாய்க்குட்டி, பூனைக்குட்டி மாதிரி குட்டி குழந்தையை, மெல்லத்துாக்கி நீயும் கொஞ்சு. விளையாட்டு காட்டு. பொக்கை வாய் திறந்து, அது சிரிப்பதை பார். உன் பொறாமை, கோபமெல்லாம் ஓடியே போய் விடும். உன் தங்கையடா அது. உன் ரத்தம். உனக்கு சொந்தம் என்று நினைத்தால், சின்னத்தனமான எண்ணங்கள் விலகி ஓடும். - அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !