உள்ளூர் செய்திகள்

இன்டர்நெட்!

இன்டர்நெட் என்னும் வலையமைப்பு, 1969ல் உருவாக்கப்பட்டது. இணைய தேடுதளத்தில், வார்த்தைகளை தட்டச்சு செய்தால் போதும், உலக தகவல்கள் விரல் நுனியில் வந்து விடும். எண்ணற்ற கணினிகளை இணைத்துள்ள வலையமைப்பு தான் இன்டர்நெட்.ஆங்கிலத்தில், 'இன்டர் கனெக்டட் நெட்வொர்க் ஆப் நெட்வொர்க்ஸ்' என்று அழைப்பர். இதன் சுருக்கமே, இன்டர்நெட் ஆனது.ஆய்வு, தொழில்நுட்ப வல்லுனர்கள் முயற்சியால் உருவானது. அமெரிக்க ராணுவ தொழில்நுட்ப வல்லுனர்களின் பங்கும் அதிகம் உள்ளது.அமெரிக்கா - ரஷ்யா இடையே பனிப்போரால், இன்டர்நெட் உருவானது. சோவியத் யூனியனாக அப்போது இருந்த ரஷ்யா, 'ஸ்புட்னிக்' என்ற விண்கலத்தை, 1957ல் விண்ணுக்கு அனுப்பியது. இதற்கு பதிலடியாக, அமெரிக்கா, மேம்பட்ட ஆய்வுத் திட்டங்கள் மையம் என்ற அமைப்பை நிறுவியது. தொழில்நுட்ப வல்லுனர் திறமையை பயன்படுத்தி செயற்கைக்கோள் தயாரித்தது.நிலையான தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்காக, 1960ல் கணினிகளை இணைக்கும் வலையமைப்பில் கவனம் செலுத்த துவங்கினர் ஆய்வாளர்கள். இதன்மூலம் வலையமைப்பு கருவி பழுதடைந்தாலும், மின் தடை ஏற்பட்டாலும் கூட, தகவல் பரிமாற்றம் நடக்கும்.அமெரிக்கா, கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் தான் முதல் கணினி வலைதளம் செயல்பட்டது. மாணவர்களின் உதவியுடன் சோதனை நடத்தினார் பேராசிரியர் லீன்ராக். அமெரிக்காவில் யுதா, கலிபோர்னியா, ஸ்டான்போர்டு பல்கலை ஆராய்ச்சி நிலைய கணினிகளுடன் இணைப்பை ஏற்படுத்தினர். பின், 'லாக் இன்' என்ற சொல்லை தட்டச்சு செய்து, தொலை துார கணினியில் அது தோன்றுகிறதா என ஆராய்ந்தனர். தொடர்ந்து மேற்கொண்ட சோதனைகளில் வெற்றி கண்டதால் இன்டர்நெட் தொடர்பு விரிவாக்கம் செய்யப்பட்டது. - ரா.அருண்குமார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !