காலத்தால் உதவி
சென்னை, வில்லிவாக்கம், சிங்காரம்பிள்ளை உயர்நிலைப் பள்ளியில், 1965ல், 11ம் வகுப்பு படித்தபோது, தலைமை ஆசிரியராக இருந்தார், கனகசபாபதி. கணித பாடங்களை எளிமையாக நடத்துவார். சூத்திரங்களை விளக்கி, புரியும் வகையில் சொல்லி தருவார். இறைவணக்க கூட்டம் முடிந்தவுடன், அன்றைய முக்கிய செய்திகளை ஒரு மாணவர் படிக்கும் வழக்கத்தை நடைமுறை படுத்தி இருந்தார். அன்று, கணிதத்தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது, பேனாவில் மை தீர்ந்து விட்டது. என்ன செய்வது என தெரியாமல், குழப்பத்தில் தவித்தேன். அப்போது, தேர்வறை கண்காணிப்பு பணியிலிருந்த தலைமை ஆசிரியர், தன் பேனாவை தந்து எழுத சொன்னார். தேர்வை முடித்து திருப்பி கொடுத்த போது, 'தேர்வு சமயத்தில் இரண்டு பேனா வைத்திருக்க வேண்டும்...' என அறிவுறுத்தினார். நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்தேன். எனக்கு, 76 வயதாகிறது. அரசு நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். தேர்வறையில் இக்கட்டான நேரத்தில் உதவிய, தலைமை ஆசிரியர் கனகசபாபதி செயல், நினைவில் பசுமையாக உள்ளது. அவரது வழியில், தேவையானோருக்கு உதவுவதை வாழ்வில் வழக்கமாக்கி உள்ளேன்.- ஆர்.வெங்கடேசன், சென்னை.தொடர்புக்கு: 94449 55907