உள்ளூர் செய்திகள்

கனவில் வந்த ரயில்!

கன்னியாகுமரி மாவட்டம், சொத்தவிளை அரசு நடுநிலைப் பள்ளியில், 1993ல், 8ம் வகுப்பு படித்தப்போது நடந்த சம்பவம்... அன்று வகுப்பாசிரியர் ஷேக் முகமது, ரயில் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை கூறியபடி, 'ரயிலில் பயணித்துள்ளோர் கை உயர்த்தவும்...' என்றார். நான், பட்டென கையை துாக்கியபடி அக்கம் பக்கம் பார்த்தேன். சக மாணவர்கள் யாரும் கை உயர்த்தாமல் என்னை வியப்புடன் நோக்கினர்.அது பெருமையாக இருந்தது. மிக நிதானமாக, 'அடடே... ரயிலில் போயிருக்கிறாயா...' என கேட்டபடி, 'எங்கிருந்து, எந்த ஊருக்கு பயணம் செய்தாய்...' என்றார் ஆசிரியர். சும்மா பேச்சுக்கு தானே கேட்கிறார் என தவறாக எண்ணி, தெரிந்த இரண்டு ஊர் பெயரை கூறினேன். கோபம் கொப்பளிக்க, 'என்னை கோமாளி என நினைத்து விட்டாயா... ரயில் சேவையே இல்லாத ஊர்களின் பெயரை கூறுகிறாயே...' என பிரம்பால் விளாசி தண்டித்தார் ஆசிரியர். வலி தாங்காமல், கனவில் ரயிலை கண்டதாக கூறினேன். அதை கேட்டு அதிர்ந்து, பிரம்பை மேஜையில் வைத்து என்ன செய்வதென தெரியாமல் விக்கித்து நின்றார் ஆசிரியர். சக மாணவர்கள், கேலியாக என்னை பார்த்தனர். அது வெட்கி தலைகுனிய வைத்தது. மறுநாளில் இருந்து வகுப்புகளில், 'இன்று கனவில் என்ன வந்தது... எங்கே போனாய்...' என கேட்க துவங்கினார் ஆசிரியர். இதனால் ஒவ்வொரு நாளும் கோமாளி பட்டம் பெறும் நிலை ஏற்பட்டது. எனக்கு, 48 வயதாகிறது; மின் ஒப்பந்ததாரராக பணி செய்து வருகிறேன். பள்ளி வகுப்பில் அறியாமையால் நடந்த கோமாளித்தனத்தை எண்ணும் போது வருத்தம் மேலிடுகிறது. - மகேஷ் அப்பாசுவாமி, நாகர்கோவில்.தொடர்புக்கு: 94870 56476


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !