கூசாமல் பேசு!
தேனி மாவட்டம், உத்தமபாளையம், ராயப்பன்பட்டி சவரியப்ப உடையார் நினைவு உயர்நிலைப்பள்ளியில், 1962ல், 6ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...உடற்பயிற்சி ஆசிரியராக இருந்த மாயாண்டி, ராணுவத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்ற பின் பள்ளிப்பணியில் சேர்ந்திருந்தார். நல்லொழுக்கம் கடைபிடிக்க கண்டிப்புடன் வலியுறுத்துவார்.அவரை பார்த்தாலே பயந்து நடுங்குவோம். பிற பாடங்களை நடத்தும் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும் போது, மாற்றாக வருவார். ஹிந்தி, ஆங்கில மொழி இலக்கணத்தை அருமையாக கற்றுத் தருவார். சொற்களை முறைப்படி உச்சரித்து உரையாட பயிற்சி தருவார்.முயன்று பயிற்சி செய்யாதோரை பிரம்பால் அடித்து தண்டிப்பார். அந்தந்த மொழியில் வசவு சொற்களை பயன்படுத்தி திட்டுவார். அத்துடன், 'பல மொழிகளை பேசி பழகினால் தான் எளிதாக பணிகளுக்கு செல்ல முடியும்... சரியான உச்சரிப்பு வர, 'பட்லர் இங்கிலீஸ்' அடிக்கடி பேசினால் போதும்...' என்று அறிவுரைப்பார்.எனக்கு, 72 வயதாகிறது. வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். பள்ளியில் பயிற்சியின் போது கடுமை காட்டிய ஆசிரியர் மாயாண்டியின் அருமை, படிப்பை முடித்து பணியில் சேர்ந்த போது புரிந்தது. மேன்மையான நோக்கத்துடன் உயர்வுக்கு வழிகாட்டியவரை வணங்குகிறேன்.- ரா.ரெங்கசாமி, தேனி.தொடர்புக்கு: 90925 75184