மனம் தடுமாறேல்!
சென்னை, ஐயப்பன்தாங்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1992ல், 4ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...வகுப்பறைகள் ஓலைக்கூரை வேய்ந்து எளிமையாக அமைக்கப்பட்டிருந்தன. திறந்த வெளியாக இருந்ததால் பாடம் நடத்தும் போது வெளியில் வருவோர், போவோரை பார்த்தபடி இருப்போம். அன்று ஆசிரியை அருணா பாடம் நடத்திக் கொண்டிருந்தார். திடீரென மற்றொரு வகுப்பறை கூரையில் தீ பற்றியது. பாடம் நடத்துவதை நிறுத்தி, தீயை அணைக்க சென்றுவிட்டார் ஆசிரியை.பரபரப்பு கண்டு வகுப்பறையை விட்டு வெளியே வந்தோம். சில மாணவியர், 'பள்ளிக்கு விடுமுறை விட்டாச்சு... வா... வீட்டுக்கு போகலாம்...' என்று கூறி அழைத்தனர். அதை நம்பி புறப்பட்டுவிட்டேன். எங்கள் பின்னால் ஓடிவந்த மாணவன் வழி மறித்து, ஆசிரியை அழைப்பதாக கூறினான். திரும்பி வந்தபோது கோபாவேசத்தில் பிரம்பை துாக்கியபடி நின்றார் ஆசிரியை. பயத்துடன் அருகில் சென்றோம். என் காதை திருகி, 'விடுமுறை என்று நீங்களே முடிவெடுப்பதா...' என்றார்.புரியாமல் விழித்த போது, 'பீடி பிடித்தவரின் பொறுப்பற்ற செயலால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த நபரை பிடித்து தண்டனை கொடுத்தாகிவிட்டது. நீங்கள் ஏன் யாரிடமும் சொல்லாமல் புறப்பட்டீர்...' என பிரம்பால் விளாசி தண்டனை கொடுத்தார். பின், 'எந்த விஷயத்திலும் உண்மை அறியாமல் முடிவு எடுக்கக் கூடாது...' என அறிவுரைத்து புரிய வைத்தார்.எனக்கு இப்போது, 39 வயதாகிறது; இதழ்களுக்கு கதை, கட்டுரைகள் எழுதிவருகிறேன். எந்த செயலானாலும் தீர விசாரித்து உண்மையை அறிவதை கடைபிடித்து வருறேன். இதற்கு அடித்தளம் அமைத்த ஆசிரியை அருணாவை போற்றுகிறேன்.- கி.சுமதி கிருஷ்ணமூர்த்தி, சென்னை.