உள்ளூர் செய்திகள்

மறக்க முடியுமா?

மதுரை மாவட்டம், சமயநல்லுார், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1974ல், 6ம் வகுப்பு படித்தேன். எங்கள் ஊரான வடபழஞ்சியில் இருந்து பள்ளிக்கு, இரண்டு பஸ்கள் மாறி செல்ல வேண்டும்.பஸ் கட்டண செலவிற்கு, தினமும் 60 காசு வேண்டும். எங்கள் குடும்பத்தின் ஏழ்மை சூழலில், அது எட்டாக்கனி. எனவே, விடுதியில் சேர்க்க முடிவு செய்தார், என் அப்பா. மாணவர் விடுதி திறப்பதற்கு ஒரு வாரம் இருக்கும் முன்பே, பள்ளி திறக்கப்பட்டு விட்டது. ஒரு வாரம் படிப்பு வீணாகி விடுமே என்ற குழப்பத்தில், பள்ளியின் வாசலில் என்னுடன் கண்கலங்கி நின்றிருந்தார், என் அப்பா.அப்போது, தெய்வமே எங்கள் கண்முன் வந்து நின்றது போல், ஆசிரியர் பிச்சை வந்தார். எங்கள் நிலைமையை கேட்டறிந்தார். 'கவலைப்படாதீர்கள். விடுதி திறக்கும் வரை, உங்கள் மகன் என் வீட்டிலேயே தங்கி படிக்கட்டும்...' எனக் கூறி, என்னை அழைத்துச் சென்றார். ஒரு வாரம் எனக்கு தங்குவதற்கு இடமும், உணவும் கொடுத்த அந்த தெய்வத்தை, இன்று நினைத்தாலும், நன்றியால் கண்கலங்குகிறது. தற்போது என் வயது, 63. மதுரை, காமராசர் பல்கலைக்கழக வ.உ.சி., ஆண்கள் விடுதியில், 1989ல், ஸ்டோர் கீப்பராக பணியில் சேர்ந்து, விருப்ப ஓய்வு பெற்றேன். யார் என்று தெரியாமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வீட்டில் தங்குவதற்கும், உண்பதற்கும் ஆசிரியர் பிச்சை செய்த உதவியை, என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. - செ.கணேசன், மதுரை. தொடர்புக்கு: 90256 26313


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !