உள்ளூர் செய்திகள்

முள்ளும் மலரும்!

கும்பகோணம், நேட்டிவ் உயர்நிலைப் பள்ளியில், 1964ல், 7ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!பள்ளி விளையாட்டு மைதானம் காவேரி நதியின் அக்கரையில் இருந்தது. ஒவ்வொரு திங்கள் கிழமையும் மாலை விளையாட்டு ஆசிரியர் மேற்பார்வையில் பாலத்தில் வரிசையாக செல்வோம். திரும்பும் போது, கண்காணிப்பு இருக்காது. தண்ணீர் சிறிதளவு பாய்ந்தால் ஆற்றில் இறங்கி நடந்து வருவோம். அன்று திரும்புகையில், இருவருக்குள் வாக்குவாதம் முற்றியது. கைகலப்பாகி தள்ளு முள்ளு ஏற்பட்டது.அடி வாங்கியவனை சமாதானப்படுத்தி, 'புகார் கொடுத்து தண்டனை வாங்கி தரலாம்...' என அழைத்து சென்றேன். கண்டிப்புமிக்க தலைமையாசிரியர் டி.வி.சாமிநாத ஐயரிடம் நடந்ததை விவரித்தேன். பொறுமையாக கேட்டவர், 'சம்பவத்தை நீ பார்த்தாயா...' என்றார். ஆர்வமுடன், 'ஆமாம்... நானும் உடன் வந்தேன்...' என்றேன்.அதை உறுதிப்படுத்தியதும், 'ஆற்று ஓரத்தில் தோண்டியிருக்கும் குழியில் விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்...' என சீற்றமடைந்தார். முட்டி போட்டு நிற்கும் தண்டனை தந்து, பியூனை காவலுக்கு வைத்தார். தேடி வந்த பெற்றோர், தங்கள் பங்குக்கு தண்டித்து இழுத்து சென்றனர்.இப்போது என் வயது, 71; தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். அந்த தலைமையாசிரியரின் கண்டிப்புக்கு பின்னால் இருந்த அன்பையும், அக்கறையையும் மறக்க முடியவில்லை. அவரை வணங்கி மகிழ்கிறேன்.- சே.ப.சந்திரசேகரன், திருச்சி.தொடர்புக்கு: 94223 25594


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !