முத்து முத்தாய்...
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளுர் அஞ்சுவட்டத்தம்மன் மகளிர் உயர்நிலைப் பள்ளியில், 1975ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்... தமிழாசிரியையாக இருந்த எழிலரசி, கரும்பலகையில் சொற்களை முத்து முத்தாய் அச்சிடுவது போல் எழுதுவார். அதை பார்த்து எழுதி பயிற்சி பெற வலியுறுத்துவார்.ஒருநாள், என் வீட்டுப் பாட நோட்டை திறனாய்வு செய்தார். கிறுக்கலாக எழுதியிருந்தது கண்டு, 'புத்தகத்தை பார்த்து நகல் செய்யும் போதே தெளிவில்லாமல், பிழையுடன் இருக்கிறதே... பார்க்காமல் எழுதும் தேர்வில் எப்படி நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்...' என வினா எழுப்பினார்.பின் கனிவு பொங்க, 'ஏதாவது ஒரு பாடத்தில் உள்ள கேள்விக்கான பதிலை மனப்பாடம் செய்து, தனியாக ஒரு நோட்டில் தேர்வு போல் எழுதுவதை கடைபிடி. பின், அதை திருத்தம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள். கையெழுத்து திருந்தி பிழைகளை தவிர்த்து வேகமாக எழுதலாம். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்...' என்று அறிவுரைத்தார். அதை கடைப்பிடித்து முன்னேறினேன். நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன்.என் வயது, 60; இல்லத்தரசியாக இருக்கிறேன். ஒவ்வொரு நாளும், நிகழ்வுகளை நாட்குறிப்பாக எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளேன். கையெழுத்து மேலும் தெளிவாகி வருகிறது. இதற்கு வழிகாட்டி அறிவுரைத்த ஆசிரியையை மனப்பூர்வமாக வணங்கி மகிழ்கிறேன்.- கே.சுமதி, சென்னை.தொடர்புக்கு: 96770 53725