ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (5)
முன்கதை: பள்ளி மாணவன் மகிழ், நாய்க்குட்டிகளை விரும்புவான். கனவுலகில் அவற்றுடன் சஞ்சாரம் செய்வான். இதையறிந்து, காவல்துறையில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி தரும் பிரிவுக்கு அழைத்து சென்றார் அவன் தந்தை. அங்கு ஓய்வு பெற்ற மோப்பநாய் செங்கிஸ்கானுக்கு பிரிவு உபசாரம் நடந்தது. அதை தத்து கொடுப்பதற்கு அலுவலக நடைமுறை துவங்கியது. இனி - பிரிவு உபசார விழா முடிந்தது. விழாவில் பங்கேற்ற அனைவரும், செங்கிஸ்கானை முத்தமிட்டு அன்பை தெரிவித்தனர்.செங்கிஸ்கானை தத்தெடுக்கவிருந்த மகிழ் மற்றும் அவன் தந்தை ஆர்வமுடன் நின்றிருந்தனர். அவர்கள் பக்கம் திரும்பினார், தலைமை நிர்வாக அதிகாரி.''செங்கிஸ்கானை தத்தெடுப்பதற்கு முன், உங்களிடம் சிறு நேர்காணல் செய்யப் போகிறேன். அத்துடன், தத்து கொடுப்பதற்கான நிபந்தனைகளையும் சொல்கிறேன்; இரண்டிலும் திருப்தியான பதில் கிடைத்தால் தான், தத்து கொடுப்பதை அதிகாரப் பூர்வமாய் அறிவிக்க முடியும்...''மிகவும் உற்சாகத்துடன், ''சரி...'' என்றார் மகிழின் தந்தை.''ஐயா... நேர்காணல் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்படும் போது, என்னையும் உடன் இருக்க அனுமதியுங்கள்...''''நீயும் இருக்கலாம் காண்டீபன்...''நிர்வாக அதிகாரியின் எதிரில் தந்தையும், மகனும் அமர்ந்தனர். பக்கவாட்டில் நின்றான் பயிற்சியாளர் காண்டீபன்.''உங்கள் பெயர்...''மகிழின் தந்தை, தன் பெயரை தெரிவித்தார்.''வயது மற்றும் என்ன தொழில் செய்கிறீர்...''''எனக்கு, 40 வயதாகிறது; கடல் மீன்கள் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறேன்...''''நீங்கள் சைவமா, அசைவமா...''''அசைவம்...''''சொந்த வீடா, வாடகை வீட்டில் வசிக்கிறீர்களா...''''அடுக்குமாடி குடியிருப்பில் சொந்த பிளாட்டில் வசிக்கிறேன்...''''தரைத்தளமா, இரண்டு அல்லது மூன்றாவது மாடியா...''''தரைத்தளம்...''''உங்கள் குடும்பத்தில், மொத்தம் எத்தனை பேர்...''''நான், என் மனைவி, மகன் மூவர்...''''உங்களில் யாருக்காவது நாய் முடியால் ஒவ்வாமை இருக்கா...''''இல்லை...''''உங்கள் மனைவிக்கு, 'சைனோபோபியா' எனப்படும் நாய் பயம் உண்டா...''''இல்லை...''''உங்கள் வீட்டில் எத்தனை படுக்கை அறைகள்...''''மூன்று...''''செங்கிஸ்கானை இரும்புக் கூண்டில் அடைப்பீர்களா... சுதந்திரமாக உலாவ விடுவீர்களா...''''சுதந்திரமாக உலாவ விடுவோம்...''''உங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் நாய் வளர்க்க அனுமதி உண்டா...''''ஏற்கனவே அங்கு, பூனைகள், கிளிகள், பன்றி குட்டி, அலங்கார மீன் வளர்க்கின்றனர்; எந்த பிரச்னையும் இல்லை...''''செங்கிஸ்கானுக்கு, 'டயட் சார்ட்' தருவோம். அதன்படியே உணவு வழங்க வேண்டும்...''''சரி...''''மாதம் ஒருமுறை கால்நடை மருத்துவர், உங்கள் வீட்டுக்கு வந்து, செங்கிஸ்கானை பரிசோதிக்க வேண்டும். அவர் பரிசோதித்த சான்றிதழை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். நாய்க்கு, தடுப்பூசிகள், சத்து மாத்திரைகளை நேரத்துக்கு செலுத்தி, பாதுகாக்க வேண்டும்...''இன்னொரு விஷயம். ஓய்வு பெற்ற மோப்ப நாய்க்கு, ஜிம்மி, டாமின்னு புதுப்பெயர் வைக்க கூடாது. கடைசி வரை, செங்கிஸ்கான் என்ற பெயருடன் உலா வர அனுமதிக்க வேண்டும்...''''அழகான பெயர் செங்கிஸ்கான்; நாங்கள் ஏன் மாற்றப் போகிறோம்...''''நீங்கள் தத்தெடுத்து, யாருக்கும் கைமாத்தி விடக் கூடாது...''''அது எங்களுடன் தான் இருக்கும்...''''செங்கிஸ்கான் ஏதாவது ஒரு விஷயத்தில் முரண்டு செய்தால் அடிக்க கூடாது...''''கட்டாயம் அதை செய்ய மாட்டோம்...''''செங்கிஸ்கான், பயிற்சியாளராக இருந்த காண்டீபனுக்கு, இனி அதை பார்க்க அனுமதி கிடையாது. அவர், மற்ற மோப்ப நாய்களை கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு ரயில் சேர வேண்டிய கடைசி நிலையம் வந்ததும், அதில் உள்ள பெட்டிகளை கழற்றி விடுவர். மறுநாள், இன்ஜினுடன் புது பெட்டிகளை பொருத்தி புதிய ஊருக்கு அனுப்புவர் அல்லவா... ''அதுபோல் காண்டீபன் என்ற ரயில் இன்ஜினிலிருந்து, கழற்றி விடப்பட்ட பெட்டி தான் ஓய்வு பெற்ற மோப்பநாய் செங்கிஸ்கான். புதிதாக மோப்ப நாய் பிரிவில் இணைந்துள்ள ஜூலியஸ் சீசர் என்ற புதிய நாயுடன் அவர் இணைக்கப்பட்டுள்ளார்...இனி அதற்கு பயிற்சி தரும் பணியை கவனிப்பார்...''''சரி... விதியை அறிந்து கொண்டேன். செங்கிஸ்கானை இனி அவர் பார்க்க அனுமதிக்க மாட்டோம்...''''இறுதியாக ஒரு விஷயம். மனிதரின், 12 ஆண்டுகள், நாயின், 1 ஆண்டு ஆயுளுக்கு சமம். அதன்படி கணக்கிட்டு பார்த்தால், செங்கிஸ்கானுக்கு தற்சமயம் வயது, 96; தள்ளாத வயதான குடு குடு கிழப்பருவம். எனவே, வீட்டில் வளர்க்கும் மிருகம் தரும் சந்தோஷம், துளியும் அதனிடம் கிடைக்காது...''அவற்றை எல்லாம் ஒப்புக் கொண்டு நீட்டிய ஆவணங்களில் கையெழுத்திட்டார் மகிழின் தந்தை. அவர்களுடன் செல்ல மறுத்தது, செங்கிஸ்கான்.பின்னங்கால்களை பின்னுக்கும், முன்னங்கால்களை முன்னுக்கும் நீட்டியபடி படுத்து சத்யாகிரகம் செய்தது. ஏறக்குறைய ஒரு மனிதரை போல் குரல் எடுத்து ஊளையிட்டது.- தொடரும்...- ஆர்னிகா நாசர்