பகிர்ந்து அளித்த பரிசு!
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ள, ஏ.வி.ஆர்.எம்.வி.மெட்ரிக் பள்ளியில், 1985ல், 10ம் வகுப்பு படித்தேன். எங்கள் தமிழ் ஆசிரியை அங்கயர்கண்ணி, கல்வியின் முக்கியத்துவம், ஒழுக்கம், நேரம் தவறாமை போன்றவற்றை தொடர்ந்து வலியுறுத்தினார். நாட்டு நடப்புகளை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறினார். எங்கள் பள்ளி நுாலகத்தில், தினமலர் நாளிதழ் வாங்குவது வழக்கம். அதில் வரும் முக்கியமான மூன்று செய்திகளை, காலை பிரார்த்தனையில், மாணவர்கள் சுழற்சி முறையில் வாசிக்க வேண்டும் என, அவர் உத்தரவிட்டார். இதனால், செய்திகள் வாசிப்பதற்காக, தினமலர் மீது ஆர்வமானோம். அந்த நல்ல பழக்கம், இன்று வரை தொடர்கிறது. தினமலர் நாளிதழுடன், ஞாயிறு தோறும் வரும் வாரமலர் இணைப்பிதழும் எங்களை கவர்ந்தது. அதில் வெளிவந்த குறுக்கெழுத்துப் போட்டியை, வகுப்பு நண்பர்கள், 12 பேர் இணைந்து நிரப்பி னோம். அதிக விடைகளை விடுவித்த, வகுப்பு தோழி அஞ்சனா பெயரில், அதை அனுப்பி வைத்தோம். முதல் பரிசாக, 100 ரூபாய் மணி ஆர்டரில் வந்து சேர்ந்தது. அதை தமிழ் ஆசிரியையிடம் தெரிவித்து, பரிசு தொகையை ஒப்படைத்தோம். அந்த பணத்தில், 12 'காபி டபரா செட்' வாங்கி, பரிசை எங்களுக்கு பகிர்ந்தளித்தார். எப்போதும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று, அறிவுரையும் வழங்கினார். தற்பாது என் வயது, 54. பன்னாட்டு நிறுவனத்தின், நிதிப்பிரிவில் பணியாற்றி வருகிறேன். நட்பையும், வாழ்க்கைப் பாடத்தையும் போதித்த தமிழாசிரியை அங்கயற்கண்ணியை நினைவில் நிறுத்தி, பள்ளி நண்பர்கள் அனைவரும், ஆண்டு தோறும் எதாவது ஒரு இடத்தில், குடும்பத்துடன் சந்தித்து மகிழ்கிறோம். - த.ராம் மோகன், சென்னை. தொடர்புக்கு: 84288 65188