புராஜெக்ட் ஓ (4)
முன்கதை: பள்ளி மாணவ - மாணவியர் மாநில அளவில் நடக்கும் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பது குறித்த அறிவிப்பு வெளியானது. ஐந்து மாணவ - மாணவியர் கூட்டாக இணைந்து தயாரித்த திட்டத்தை, செயலாக்கம் செய்வதற்கு ஏற்றார், அறிவியல் ஆசிரியை மதிவதனி. இனி- அறிவியல் கண்காட்சிக்கு தயாரான மாணவ - மாணவியர் குழுவை பாராட்டிய அறி வியல் ஆசிரியை மதிவதனி, ''ஆனா...'' என்று, குரலை லேசாக தாழ்த்தினார். அடுத்து, என்ன சொல்லப் போகிறாரோ என்று, ஆசிரியை முகத்தைப் பார்த்தது ஐவர் குழு. ''உங்க யோசனை ரொம்ப நல்லாருக்கு. ஆனா, இதைச் செயல் வடிவமா மாத்துறதுல நிறைய சவால்களும், ஆபத்துகளும் இருக்கு...'' ''ஆபத்தா...'' அதிர்ச்சியாக கேட்டாள், அஞ்சலி. ''ஆமா... ஒரு செயற்கை உயிரியை உருவாக்க, மத்திய அரசோட அனுமதி வேணும். பல படிநிலைகளைத் தாண்டணும்...'' ''அப்போ, அனுமதி வாங்காம இதை செய்ய கூடாதா, மேம்...'' தயக்கத்தோடு கேட்டான், குமார். ''சட்டப்படி வாங்கணும், குமார். ஆனா, நாம செய்யப் போறது, ஆரம்ப கட்ட முயற்சி தான். இது, சாத்தியமான்னு தெரியாது. அதனால, இப்போதைக்கு இதை ரகசியமா முயற்சிப்போம். முடிவு நல்லபடியா வந்தா, அப்புறம் அரசிடம் அனுமதி வாங்கித் தர்றேன்...'' என்ற மதிவதனி, தொடர்ந்தார்... ''அதுவரைக்கும் இந்த விஷயம், நம்ம ஆறு பேரைத் தாண்டி வெளியே போகக் கூடாது. தெரிஞ்சா, சட்ட ரீதியாக ஆபத்தா முடியும், புரியுதா...'' என்று எச்சரித்தார். 'புரியுது டீச்சர்...' என்று, ஐந்து பேரும் ஒருவித திகிலுடனும் தலை அசைத்தனர். அ ஞ்சலி கொடுத்த பேப்பரை எடுத்து, அதில் முட்டை வடிவத்தை வரைந்தார், மதிவதனி. ''என்ன மேம், ஆரம்பத்திலேயே முட்டை போடுறீங்க...'' என்றான், குமார் கிண்டலாக. ''நீங்க சொன்ன அந்த ஒரு செல் உயிரி வளர்றதுக்கு, பாதுகாப்பான இயற்கைச் சூழல் வேணும். அதுக்கு சிறந்த இடம், ஒரு கோழி முட்டை தான்...'' என்றார், மதிவதனி. ஐந்து பேரும் புரியாமல் பார்த்துக் கொண்டனர். ''நாம முட்டையோட மஞ்சள் கருவைச் சாப்பிட்டு இருப்போம். ஆனா, அந்த மஞ்சள் கருவுக்கு மேல், ஒரு குட்டி வெள்ளைப் புள்ளி இருக்கிறத கவனிச்சி இருப்போமான்னு தெரியல...'' ''ஆப்பாயில் சாப்பிடும் போது, பார்த்திருக்கேன் மேம்...'' கையை உயர்த்தினான், குமார். ''அதோட பேரு, கரு வட்டு. முட்டையில இருந்து குஞ்சு உருவாகுறதே, அந்தப் புள்ளியில தான்...'' என்று, மதிவதனி சொன்னதை, கற்பனை செய்து பார்த்தாள், அஞ்சலி. ''அப்போ... நாம தயார் செய்யும் செயற்கை மரபணுவை, அந்த புள்ளியில வச்சு வளர்க்க போறோமா, மேம்...'' ''அதே தான் அஞ்சலி...'' என்று, அவளது கன்னத்தில் தட்டினார், மதிவதனி. ''அந்த மஞ்சள் கருவே, நம்ம புது செயற்கை உயிரிக்குத் தேவையான உணவைக் கொடுத்துடும்...'' ''கேட்கவே திகிலா இருக்கு மேம்... ஆனா, இதை சாதாரணமா நம்ம ஆய்வகத்துல வச்சே செஞ்சிட முடியுமா...'' என்றான், கதிர். லேசாகச் சிரித்து, ''உங்க, 10ம் வகுப்பு ஆய்வகத்துல இருக்குற வசதி, இதுக்குப் பத்தாது, கதிர். ஆனா, 12ம் வகுப்பு உயிரியியல் ஆய்வகத்தில், இதற்கான, 'மைக்ரோ ஊசிகள், மைக்ரோஸ் கோப்' மற்றும் முட்டைகளை அடைகாக்கும், 'இன்குபேட்டர்' எல்லாம் இருக்கு. யாருக்கும் தெரியாம அங்கே இந்த சோதனையைச் செய்யலாம்....'' என்றார், மதிவதனி. 'சூப்பர் மேம்...' என்றனர். ''மரபணுக்களை அந்த கரு வட்டுல செலுத்துனதுக்கு அப்புறம், அந்த முட்டையை நாம ஆய்வகத்துல இருக்குற, 'இன்குபேட்டர்' உள்ளே வச்சுடலாம். செயற்கை செல் உருவாகுறதுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுத்து, அது அடைகாக்கும்...'' என்றார். ''அப்போ... அந்த முட்டைக்குள்ள இருந்து கோழிக்குஞ்சு வராம, நாம டிசைன் செய்த அந்த ஒரு செல் புது உயிரி வெளியே வருமா மேம்...'' என்று கேட்டான், குமார். ''அது, கோழிக்குஞ்சு மாதிரி நடந்து வராது, குமார். ஆனா, முட்டையோட ஓட்டை உடைச்சுக்கிட்டு ஒரு புது உயிர் வெளி யே வரும்ன்னு எதிர்பார்ப்போம். அது, எப்படி இருக்கும்ன்னு பார்க்க, எனக்கே ஆர்வமா இருக்கு...'' என்று புன்னகை த்த மதிவதனி, தன் மேஜையின் மீது இருந்த பாட வகுப்பு அட்டவணையை பார்த்தார். ''வாவ்... இன்னைக்கு மதியம் எனக்கு வகுப்பு எதுவும் இல்லை. அதனால நாம ஏன் புராஜெக்டைத் தள்ளிப் போடணும்... இன்னைக்குச் சாயங்காலமே நம்ம வேலையை ஆரம்பிச்சுடலாம். ''நான் ஆய்வகத்தில் எல்லாத்தையும் தயார் செய்து வைக்கிறேன். மாலை பள்ளி முடிந்ததும், 12ம் வகுப்பு உயிரியியல் ஆய்வகத்துக்கு வந்துடுங்க...'' ஐ ந்து பேரும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். அதே நொடி, பள்ளியின் காலை நேர வகுப்புகள் துவங்குவதற்கான முதல் மணி, பலமாக ஒலித்தது. ஐந்து பேரும் மதிவதனி டீச்சரிடம் விடைபெற்று, வகுப்பறையை நோக்கி விரைந்தனர். அ ன்றைய கணக்கு வகுப்பில், ராகவ் சார் நடத்திய வடிவியல் பாடம் எதுவும், கதிர், அஞ்சலி இருவருக்குமே தலைக்குள் ஏறவில்லை. கரும் பலகையில், ராகவ் சார் வரைந்த வட்டங்கள் யாவும், அவர்களுக்குக் கோழி முட்டையாகவும், அதன் நடுவே அவர் வைத்த மையப் புள்ளிகள், மதிவதனி டீச்சர் சொன்ன, கருவட்டு புள்ளியாகவுமே தெரிந்தன. ''டேய் கதிரு... சார் நடத்துற, 'சர்க்கிள் தியரி' புரியுதாடா...'' என்று, பின் பெஞ்சில் இருந்து, மெதுவாக கதிரின் சட்டையைப் பிடி த்து இழுத்துக் கேட்டான், குமார். கரு ம்பலகையையே வெறித்துப் பார்த்தபடி, ''பலகையில இருக்குற அந்த முட்டை எப்போ பொரிக்கும்ன்னு தான் தோணுது...'' என்று முணு முணுத்தான், கதிர். கதிர், அஞ்சலியைப் பார்க்க, அவளோ தன் நோட்டுப் புத்தகத்தின் பின் பக்கத்தில், முட்டை வடிவங்களை வரைந்து கொண்டிருந்தாள். அ டுத்தடுத்த வகுப்புகள் நகர்ந்து, ஒரு வழியாக, மதிய உணவுக்கான இடைவேளை மணி அடித்தது. ஐந்து பேரும் வழக்கம்போல, மதிய உணவை சாப்பிட வேப்ப மரத்தடியில் அமர்ந்தனர். ''அப்பாடா... பசி உயிர் போகுது...'' என்று, தன் பெரிய டிபன் பாக்சை திறந்தான், குமார். கதிர் எடுத்து வந்திருந்த தக்காளி சாதத்தை, ஒரு பிடி அள்ளி வாயில் போட்ட பரத், தற்செயலாய் வினோதாவைப் பார்த்து சட்டெனக் கத்தினான். ''டேய் கதிர்... அங்கே பாருடா...'' பரத்தின் கத்தலைக் கேட்டு, கதிர் திரும்பும் முன்னரே, வினோதா இருந்த பக்கமாக திரும்பிப் பார்த்த குமார் அலறினான். - தொடரும்... - ஜாரா நரேஷ்