உள்ளூர் செய்திகள்

புராஜெக்ட் ஓ (9)

முன்கதை: அறிவியல் கண்காட்சிக்காக, மாணவ, மாணவியர் ஐந்து பேர் கூட்டாக உருவாக்கிய திட்டத்தை செயல்படுத்த வழிகாட்டினார், ஆசிரியை மதிவதனி. உயிரியை உருவாக்கும் திட்டப்படி வார இறுதியில் ஆய்வக இன்குபேட்டரில் பொருட்களை கலந்து வைத்தனர். அது திங்களன்று மாயமாய் மறைந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அது எங்கே போனது என்ற தேடல் துவங்கியது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டனர். இனி- கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிப்படி, 'யாராவது கவனிக்கின்றனரா' என்று, மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தான் அந்த மாணவன். பின் சட்டென, தன் பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டான். ''அவன் முகத்தை, 'குளோசப்'பில் காட்ட முடியுமா, பரத்?'' ''ஒரு நிமிஷம் மேம்...'' என்று, வீடியோவை நிறுத்திய பரத், படத்தை பெரிதாக்கி, மாணவனின் முகத்தை, 'குளோசப்'பில் காட்டினான். ''முகம் தெளிவாக தெரியலையே...'' என்றார், மதிவதனி. ''மேம்... இது சந்துரு. 12ம் வகுப்பு 'ஏ' பிரிவு...'' என்றான், கதிர். குமாரும், அதை உறுதி செய்தான். ''இவனுக்கு எப்படி நம்ம புராஜெக்ட் பற்றி தெரிஞ்சது?'' யோசனையுடன் கேட்ட மதிவதனி, ''சரி... வீடியோவை ஓட விடு. பார்க்கலாம்...'' என்றார். மீண்டும் அந்த வீடியோவை ஓட விட்டான், பரத். சந்துரு, பையிலிருந்து வெளியே எடுத்தது, ஒரு மொபைல் போன். ஒரு திகில் திரைப்படம் போல, அதை பார்த்துக் கொண்டிருந்தனர். சி ல வினாடிகள் ஆய்வக கதவு அருகே நின்ற அந்த மாணவன், குறுஞ்செய்தி அனுப்பி விட்டு, மொபைலை பாக்கெட்டுக்குள் வைத்தபடி, சாதாரணமாக நடந்து போய் விட்டான். சில வினாடிகள் யாருமே பேசவில்லை. ''திருட்டுத்தனமா ஸ்கூலுக்கு எடுத்து வந்த மொபைலை நோண்டுறதுக்காக, இங்கே வந்திருக்கான் போல...'' என்றார், மதிவதனி. வீடியோ தொடர்ந்து ஓட, திரையில் காலியான காரிடாரின் காட்சியே தெரிந்தது. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், யாரும் ஆய்வகம் பக்கம் வரவில்லை. சனி மற்றும் ஞாயிறு முடிந்து, திங்கட்கிழமை துவங்கியது. காலை, 7:12 மணிக்கு காரிடாரில் ஒரு உருவம் தெரிய உஷார் ஆயினர். ''மேம்...'' என்றாள், பதட்டமாக அஞ்சலி. வீடியோவை நிறுத்தினான், பரத். அதன் வேகத்தைக் குறைத்து ஓட விட்டான். அந்த நபரை எல்லாருக்கும் அடையாளம் தெரிந்தது. 'மேம்... முருகேசன் அண்ணா...' என்றனர். அந்தக் காட்சியை உற்று நோக்கினர். ஆய்வக உதவியாளர் முருகேசன், கையில் ஒரு பையுடன் நிதானமாக நடந்து வந்து சாவியால், கதவைத் திறந்து உள்ளே சென்றார். மானிட்டர் திரையையே பார்த்துக் கொண்டிருந்தனர். சரியாக, 7:38 மணிக்கு, ஆய்வகக் கதவைப் பூட்டி விட்டு, காரிடாரில் நடந்து சென்றார். ''மேம் அவர் உள்ளே வந்த நேரமும், வெளியில் போன நேரமும் குறிச்சுக்கலாமா?'' ''ம்...'' என்றார், சுவாரசியமின்றி மதிவதனி. அதை, 'ரீவைண்ட்' செய்தான், பரத். அந்த நேரத்தை குறித்துக் கொண்டாள், அஞ்சலி. ''மேம்... கவனிச்சிங்களா, வரும் போது கையில் ஒரு பை இருக்குது. ஆனா, வெளியில வரும் போது பை இல்லை...'' சுட்டிக் காட்டினான், குமார். அதன்பின், 7:51 முதல் 7:57 மணி வரை, நண்பர்கள் ஐவரும் வந்து காத்திருக்கும் காட்சியும், 8:02க்கு மதிவதனி வரும் காட்சியும் இருந்தது. ''போதும்... தேங்க்ஸ் பரத்...'' என்றார், மதிவதனி. சில வினாடிகள் குழப்பமான மனநிலையிலேயே இருந்தனர். க ண்காணிப்பு அறையில் இருந்து, அவர்களை மீண்டும் ஆய்வகத்துக்கு அழைத்து வந்தார், மதிவதனி. ஆய்வகம் மர்மக்குகை போல தோன்றியது. ''மேம்... யாருமே ஆய்வகம் உள்ளே வரலன்னா, அந்த முட்டை எங்கே போச்சு...'' என்றான், கதிர். ''முருகேசன் அண்ணா வந்தாரே...'' என்றாள், அஞ்சலி. ''நானும் கவனிச்சேன். அவர், ஆய்வக உதவியாளர். அது சாப்பாட்டு பை மாதிரி இருந்தது...'' என்றாள், மதிவதனி. ஆய்வக மூலையில் முருகேசனின் இருக்கையைப் பார்த்தான், குமார். அங்கே, அந்த பை மேசை மீது இருந்தது. ''மேம், அங்கே இருக்கு அந்த பை. அதுக்குள்ள தேடலாமா...'' என்றான், பரத். ''அடுத்தவங்க பையை எல்லாம் நோண்டக் கூடாது. அது நல்ல பழக்கம் இல்லை...'' என்றாள், அஞ்சலி. மதிவதனியின் முகத்தில் குழப்பம். பார்க்கலாமா, வேண்டாமா என்று யோசிப்பது போல தெரிந்தது. ''வேண்டாம், குமார். திரும்பவும் ஆய்வகம் முழுக்க, ஒருமுறை தேடிப் பார்க்கலாம். ஆளுக்கொரு பக்கமா பாருங்க...'' ''மேம்... அப்படின்னா, நாம இப்போ என்ன தான் தேடுறோம்?'' தயக்கத்துடன் கேட்டான், குமார். உ டனே பதில் சொல்லவில்லை, மதிவதனி. சில நொடிகள் அமைதி நிலவியது. அவரது பார்வை மெதுவாக, இன்குபேட்டர் இருந்த மூலையை நோக்கித் திரும்பியது. ''உண்மையைச் சொல்லணும்னா, எனக்கே சரியா தெரியல... முட்டையை தேடுறோமா அல்லது அதிலிருந்து வெளியே வந்த உயிரியைத் தேடுறமான்னு புரியல...'' என்றார். ''நம்ம சோதனை தோல்வி அடைஞ்சிருந்தா, அந்த முட்டை கெட்டுப் போய், நாம வச்ச இடத்தில இருக்கணும். 'சக்சஸ்' ஆகியிருந்தா, அந்த செல், முட்டைக்குள் வளர்ந்திட்டு இருக்கணும். வெற்றியோ, தோல்வியோ முட்டை இருக்கணுமே. ஆனா, ஏதோ ஒன்று இந்த ஆய்வகத்தில் நடந்திருக்கு...'' என்றார், குழப்பமாக மதிவதனி. - தொடரும்... - ஜாரா நரேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !