உள்ளூர் செய்திகள்

பரிசு!

வண்ணம் பூசும் வேலை செய்பவன் முருகன். மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் வாழ்ந்து வந்தான். வேலையை நேர்த்தியாக செய்வான்; அதிக கூலியும் வாங்க மாட்டான். அன்று ஒரு படகுக்கு வண்ணம் பூசும் வேலை கிடைத்திருந்தது. மஞ்சள், பச்சை என, இரு நிறங்களை அழகாக தீட்டிக் கொண்டிருந்தான். வெளியே சென்றிருந்தார் படகின் முதலாளி. வண்ணம் பூசிய முருகன், படகில் ஒரு ஓட்டை இருப்பதைப் பார்த்தான். அப்படியே ஓட்டினால் தண்ணீர் உள்ளே வந்து ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்தான். அந்த ஓட்டையை நேர்த்தியாக அடைத்து, அதன் மீது வண்ணம் பூசி, வேலையை முடித்து கிளம்பினான் முருகன். இரு நாட்களுக்கு பின் - காலையில் அன்றைய பணிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான் முருகன். வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதை பார்த்து, பரபரப்பாக வெளியே வந்தான். படகுக்கு வண்ணம் பூசும் வேலையை தந்த முதலாளி, காரிலிருந்து இறங்கினார். வேறு வேலை இருக்கும் என எண்ணியபடி, ''வணக்கம் ஐயா...'' என, பணிவுடன் வணங்கினான், முருகன். புன்னகையுடன், ''நீ செய்த வேலைக்கு, எங்கள் குடும்பமே உன்னை வணங்க வேண்டும்...'' என, முதலாளி சொல்ல, புரியாமல் பார்த்தான். ''ஆமாம்பா... இரு நாட்களுக்கு முன், படகுக்கு பெயின்ட் அடிக்க சொன்னேன். அதில், ஓட்டை இருந்தது எனக்கு தெரியும். பிறகு சரி செய்யலாம் என, அலட்சியமாக இருந்து விட்டேன். நான், வெளியூர் சென்றிருந்த நிலையில், புதிதாக திருமணமான என் மகள், மருமகன், மகன் மற்றும் மனைவியும் சுற்றுலாவுக்காக படகை எடுத்து சென்று விட்டனர்... ''ஊரிலிருந்து வந்ததும், இதை கேள்விபட்டு நடுங்கி விட்டேன். ஓட்டை வழியாக படகில் தண்ணீர் புகுந்து மூழ்கி விடுமே என நடுங்கினேன். செய்வதறியாது தவித்தேன். பத்திரமாக படகு திரும்பியதை கண்டு வியப்படைந்தேன். வண்ணம் பூசும் போது, பொறுப்புடன் நீயாகவே படகில் ஓட்டையை அடைத்திருப்பதை அறிந்தேன். நீ பொறுப்படன் செயல்பட்டதால் என் குடும்பம் காப்பாற்றப்பட்டது...'' என்றவர், டிரைவரை பார்த்தார். தட்டுகளில் பழம், இனிப்பு வகைகள், குடும்பத்தினருக்கான துணிமணிகள் என, பரிசுகள் இருந்தன. ''எடுத்துக்கோ முருகா... பொறுப்புடன் செயலாற்றிய உன் நேர்மைக்கு பரிசாக இதை பெற்றுக் கொள்...'' முதலாளி கூற, முருகன் குடும்பம் மகிழ்ந்து சிரித்தது. குட்டீஸ்... எந்த வேலையையும், நேர்த்தியாக, பொறுப்புடன் செய்ய வேண்டும்.- ர.கிருஷ்ணவேணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !