செவிக்கு உணவு!
மதுரை, நிர்மலா மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1992ல், 10ம் வகுப்பு படித்தேன். அப்போது, எங்களின் தமிழ் ஆசிரியையாக இருந்தவர், செந்தாமரையம்மாள். வழக்கமாக, மதிய உணவு இடைவேளைக்கு முந்திய பாடவேளை, அவருடையது. அன்று வகுப்பறையில் அவர் நுழைந்த போது, 'வணக்கம் அம்மா...' என, அனைவரும் சோர்வுடன் கூறினோம். அப்போது, 'செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்...' என்ற திருக்குறளை, கணீர் குரலில் கூறினார். 'பசிக்கு தேவையான உணவை விட, அறிவை வளர்க்கும் கல்வியே முக்கியம்' என்று, அதன் பொருளையும் விளக்கினார். அதைக் கேட்டவுடன் நாங்கள் உற்சாகமானோம். அதன் பின், தமிழ் பாடம் மிகவும் பிடித்தமானதாக மாறியது. அவரின் தமிழ் உச்சரிப்பும், கணீரென்ற குரலும், இலக்கண விளக்கங்களும், குறிப்பாக, 'அலகிட்டு வாய்ப்பாடு கூறுக' பகுதியும், தமிழின் மேல் பெரிதும் ஈடுபாடு கொள்ளச் செய்தது.தற்போது என் வயது, 48. இல்லத்தரசியாக உள்ளேன். கூட்டுக் குடும்பமாக வாழ்கிறோம். எங்கள் வீட்டிலுள்ள குழந்தைகள் அனைவரும், தமிழ் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை என்னிடம் கேட்டு, நிவர்த்தி செய்து கொள்கின்றனர். குழந்தைகளுக்கு சமைத்து உணவு பரிமாறுவதை விட, கற்றுக்கொடுப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு விதையிட்ட தமிழ் ஆசிரியை செந்தாமரையம்மாளை, போற்றி வணங்குகிறேன். - க.இன்பரதி தேவி, துாத்துக்குடி. தொடர்புக்கு: 95007 34757