இனியவன்!
உடல்நிலை சரியில்லாததால் நான்கு நாட்கள் விடுப்பு எடுத்திருந்தான் சந்துரு. அன்று பள்ளிக்கு வந்து வகுப்பில் நுழைந்தவனுக்கு அதிர்ச்சி. வழக்கமாக அமரும் இடத்தில் புதிதாக ஒருவன் அமர்ந்திருந்தான். ''இது, நான் உட்கார்ற இடம்...'' புதியவனை நெருங்கிச் சென்று அமைதியாக கூறினான் சந்துரு. முறைத்தபடி, ''அதனால என்ன... இது உன் இடம், நீ தான் உட்காரனும்ன்னு எங்கேயாவது எழுதி வெச்சிருக்கா... நான் உட்கார்ந்திருக்கேன்ல... வேற எங்கேயாவது போ...'' என, ஆணவத்தோடு கூறினான். ''சந்துரு இங்கே வா... எங்களோடு இரு...'' பின்புற பெஞ்சில் இருந்து குரல் கேட்டது. அங்கு அமர்ந்திருந்த சரவணன் அழைக்க, மவுனமாக நகர்ந்தான் சந்துரு. ''யாரு சரவணன் இது...'' ''புதுசா வகுப்புல சேர்ந்திருக்கான். பேரு கிருஷ்ணா. ரொம்ப அடாவடி பண்றான். யாரையும் மதிக்கிறதில்லை. நாங்களும் அவன் கூட எதுவும் பேசிக்கிறதில்லை...'' 'இது சரியில்லையே' என எண்ணி கொண்டான் சந்துரு. கிருஷ்ணாவின் மனநிலை மாற வேண்டும் என நினைத்து கொண்டான். ஆனால் நினைத்ததற்கு மாறாக கிருஷ்ணாவின் போக்கு இருந்தது. மாணவர்களுடன் இணக்கம் இல்லை. ஆணவத்தை காட்டுகிறான்; நட்பாகப் பழகுவதில்லை. இப்படி எல்லாம் குற்றச் சாட்டுகள் வந்தன. உடற்பயிற்சி வகுப்பில் எல்லாருடனும் வம்பு சண்டைக்கு சென்றதாக கிருஷ்ணா மீது புகார் எழுந்தது. இதை கேள்விப்பட்டதும் வருந்தினான் சந்துரு. இந்நிலையில் திடீரென ஒரு வாரமாக வகுப்புக்கு வரவில்லை கிருஷ்ணா. ஊரில் அவனது தாத்தா இறந்து விட்டதால் விடுப்பில் இருப்பதாக தகவல் சொன்னார் வகுப்பாசிரியர். வி டுப்பு முடிந்து அன்று வகுப்புக்கு வந்தான் கிருஷ்ணா. ஆசிரியர்கள் நடத்திய பாடங்கள் எதுவும் அவனுக்கு புரியவில்லை. தொடர்ச்சி விடுபட்டு போனதால் கணிதம் முழுமையாக புரியாமல் தவித்தான். விழித்தபடி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்ட போது, 'உன் ஒருவனுக்காக மட்டும் தனியாக பாடம் நடத்த முடியாது. வகுப்பு நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்...' என கூறி விட்டனர். 'யாரிடம் கேட்பது, யார் உதவுவர், எல்லாருடனும் சண்டை போட்டு ஆணவத்துடன் நடந்து விலகி உள்ளோனே...' என எண்ணியபடி வருந்தினான் கிருஷ்ணா. மதிய உணவு இடைவேளை நேரம் - சாப்பிடாமல் யோசனையுடன் உட்கார்ந்திருந்தவனிடம் நெருங்கினான் சந்துரு. ''என்ன விஷயம்... ஏன் டல்லா இருக்க...'' ''நான் விடுப்பில் இருந்த நேரத்துல நிறைய பாடம் நடத்தியிருக்காங்க... இப்ப கவனிச்சா எதுவும் புரியலை... எனக்கு அதெல்லாம் யாரு சொல்லித் தருவா. யாரு உதவுவா...'' கண் கலங்கினான் கிருஷ்ணா. ''கவலைப்படாதே... நான் சொல்லித் தர்றேன். ஆனா ஒரு நிபந்தனை...'' ''என்ன நிபந்தனை...'' ''இனி, வகுப்புத் தோழர்கள் யாருடனும் வம்பு சண்டைக்கு போகக் கூடாது. நட்பாக பழக வேண்டும். அன்பாக பேச வேண்டும்... அதுதான் என் கோரிக்கை...'' புன்னகைத்தான் சந்துரு. ''தவறு புரிந்தது. இனி எல்லாருடனும் இணக்கமாக பழகுவேன்...'' கிருஷ்ணா உறுதியான குரலில் சொன்னான். குழந்தைகளே... அதிகாரம், ஆணவத்தால் எதையும் சாதிக்க முடியாது. அன்பு, கனிவால் அகிலத்தை ஆள முடியும். - கே.நாகராஜ்