பாராட்டு!
பள்ளி உயர்நிலை வகுப்பில் படித்து வந்தான் கணேசன்.அன்று பதிவேட்டில் மாணவர் வருகையை பதிவு செய்து கொண்டிருந்தார் வகுப்பாசிரியர் சுந்தர்.''கணேசன்...'' பலமுறை அழைத்த போதும், வகுப்பில் மவுனம் நிலவியது. ''அவன் வரவில்லையா...'' நிமிர்ந்து பார்த்து கேட்டார்.''ஐயா... இன்னும் வரவில்லை...'' ஒரு மாணவன் எழுந்து பதிலளித்தான்.''ம்... வரட்டும்; சரியான பாடம் கற்பிக்கிறேன். நான் கொடுக்கும் தண்டனையில் உரிய நேரத்தில், இனி வகுப்புக்கு வர வைக்கிறேன்...'' கோபத்தில் முணுமுணுத்தார் வகுப்பாசிரியர்.வகுப்பில் பாடம் துவங்கியது.இருசக்கர வாகனத்தில், பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தார், அந்த பகுதி காவல்நிலைய ஆய்வாளர். அவருடன் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மாணவன் கணேசனும் இறங்கினான்.வகுப்பறைக்கு நுழைந்தார் ஆய்வாளர்.திகைத்து நின்ற வகுப்பாசிரியர் சற்று நிதானமாக, ''வாங்க ஐயா...'' என வரவேற்றார்.பதில் முகமன் கூறியபடி, ''இந்த கணேசன், உங்க மாணவனா...'' மிடுக்காக கேட்டார்.''ஆமாம் ஐயா... தவறேதும் செய்து விட்டானா...''''இல்லை. மிகவும் நற்காரியம் செய்துள்ளான்... அவன் செயலை பாராட்டும் வகையில் அழைத்து வந்தேன்...''''என்ன விஷயம்...''''இன்று காலை பள்ளி வரும் வழியில் பணம் நிறைந்த, 'பர்ஸ்' ஒன்று கிடந்திருக்கு. அதை கண்டு எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தான்; விசாரித்து உரியவரிடம் ஒப்படைக்க சற்று காலதாமதம் ஆகிவிட்டது; அதனால், பள்ளிக்கு நானே அழைத்து வந்தேன். கணேசன் போல் நல்ல மாணவர்களை உருவாக்கும் தங்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவதும் என் கடமை...'' என்றார்.மகிழ்ந்தார் வகுப்பாசிரியர்.மறுநாள் வழிபாட்டு கூட்டத்தில், மாணவன் கணேசன் நற்செயல் பற்றி, தலைமையாசிரியர் பாராட்டி பேசினார். கரகோஷம் எழுப்பி வாழ்த்தினர் மாணவர்கள்.பட்டூஸ்... நற்செயல்கள் எப்போதும் போற்றப்படும்!ஜி.சுந்தரராஜன்