உள்ளூர் செய்திகள்

சிலந்திக்கூடு!

மா மரத்தில் கொத்து கொத்தாக மாம்பழங்கள் பழுத்து தொங்கின. அவற்றை கொத்தித் தின்று கொண்டிருந்தன கிளிகள். ஒரு கிளையில், மும்முரமாக வலை பின்னிக் கொண்டிருந்தது, சிலந்தி பூச்சி. அப்போது, பறந்து வந்த கிளியின் இறக்கை பட்டு, சிலந்தி கூடு அறுந்தது. மீண்டும் சிலந்தி, கூடு கட்ட துவங்கியது. கட்டி முடித்ததும், காற்று பலமாக வீசியது. சூறாவளி காற்றில், மீண்டும் அறுந்து போனது சிலந்திக்கூடு. அதை பார்த்த கிளிகள், 'இனிமேல் அவ்வளவு தான்... சிலந்தியால் கூடு கட்ட முடியாது' என நினைத்து, இருப்பிடம் நோக்கி பறந்தன. மறுநாள் கிளிகள், மீண்டும் மாமரத்தை தேடி வந்தன. மரக்கிளையில் அழகாக காட்சி தந்தது சிலந்திக்கூடு. சின்னஞ்சிறிய சிலந்தியிடம், 'கஷ்டப்பட்டு கூடு கட்டி, அது அறுந்து, அறுந்து தோல்வியை சந்திக்கும் உனக்கு, சலிப்பு ஏற்படாதா... மீண்டும் கட்டி விடுகிறாயே, எப்படி...' என கேட்டன, கிளிகள். 'தோல்வியை கண்டு துவண்டு விடாமல், அது தற்காலிகமானது தான் என அறிந்து, மீண்டும் மீண்டும் முயற்சி செய்வது தான் என் இயல்பு. அதை என்றும் கைவிட மாட்டேன்...' என்றது, சிலந்தி. சிலந்தியிடம் பாடம் கற்ற மகிழ்ச்சியில், கிளிகள் பறந்து சென்றன. குட்டீஸ்... தோல்வி தற்காலிகமானது தான்; மனம் தளராத தொடர் முயற்சி தான் வெற்றி தரும். - அ.வனஜா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !