உள்ளூர் செய்திகள்

தெய்வமாய் வந்து!

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், அம்பலசேரி துவக்கப் பள்ளியில், 1970ல், 5ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...இடப்பற்றாக்குறையால் வகுப்பறைகள் அமைக்க புதிய கட்டுமான பணி பள்ளி வளாகத்தில் நடந்தது. கம்புகள் ஊன்றி, 'சென்ட்ரிங்' போட்ட நிலையில் பணி நிறுத்தப்பட்டிருந்தது.அன்று பிற்பகல் இடைவேளை மணி ஒலித்ததும் உற்சாகமாக வெளியே வந்தோம். வளாகத்தில் காலியாக கிடந்த பகுதியில் பெரும்பாலானோர் விளையாடினர்.நான் உட்பட நான்கு மாணவியர் புதிய கட்டுமானம் நடந்த பகுதியின் அருகே விளையாடினோம். திடீரென இடி, மின்னலுடன் மழை துவங்கியது. சற்று நேரத்தில் பலத்த காற்றும் வீசியது.வளாகத்தில் இருந்தோர் வேகமாக வகுப்பறைக்குள் புகுந்து விட்டனர். நாங்கள் நான்கு பேரும், கனமழைக்கு பயந்து புதிய கட்டுமானத்துக்குள் பதுங்கினோம். அறைகுறையாக கட்டியிருந்த சுவர் அருகே ஒண்டியபடி நின்றோம்.கட்டுமானத்துக்காக தோண்டியிருந்த பள்ளம் அருகே பெரிய வேப்ப மரம் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. விழுவது போல் இருக்கவே செய்வதறியாது கூச்சலிட்டோம். இதை கவனித்த தலைமையாசிரியர் சிவலிங்கமும், அதே பள்ளியில் ஆசிரியையாக இருந்த அவரது மனைவி புஷ்பமும் குடையுடன் அங்கு வந்தனர். ஆளுக்கு இருவராக நால்வரையும் மீட்டு அழைத்து வந்த மறுநொடி, வேப்பமரம் புதிய கட்டுமானத்தில் சாய்ந்து மொத்தமும் நொறுங்கியது.இப்போது என் வயது 65; இல்லத்தரசியாக இருக்கிறேன். பள்ளியில் நடந்த அந்த சம்பவம் நினைவுக்கு வரும்போதெல்லாம் அச்சத்தில் மனம் கலங்குகிறது. தெய்வம் போல் வந்து எங்களை காப்பாற்றிய தலைமையாசிரியர் சிவலிங்கம், ஆசிரியை புஷ்பம் தம்பதியை நன்றி பெருக்குடன் எண்ணி நெகிழ்கிறேன்.- வி.பி.மகராசி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !