உயர்வுக்கு விதை!
கோவை, ஒண்டிப்புதுார் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1976ல், 8ம் வகுப்பு படித்த போது காந்தி ஜெயந்தி கட்டுரைப் போட்டி பற்றிய சுற்றறிக்கை வந்தது. தமிழாசிரியை உ.பொ.பழனியம்மாள் என்னையும் பங்கேற்க துாண்டினார்.இயலாமையால், 'எழுத வராது அம்மா...' என மறுத்த போதும், என் பெயரை சேர்த்தார். முயற்சித்து, இரண்டாம் பரிசு பெற்றேன். தொடர்ந்து போட்டிகளில் பரிசும், பாராட்டும் கிடைத்தது.குடும்ப சூழலால் பள்ளி இறுதி வகுப்புக்கு பின், லேத் பட்டறையில் சேர்ந்தேன். பணி நேரம் தவிர்த்து, கட்டுரை, கதைகள் எழுதினேன். அவை, வானொலியில் ஒலிபரப்பாயின; இதழ்களில் பிரசுரமாயின. ஒருமுறை ஆசிரியர் தினத்தன்று அந்த தமிழாசிரியையை சந்தித்து, நான் எழுதிய புத்தகங்களை கொடுத்து, ஆசி பெற்றேன். பூரிப்பில் மகிழ்ந்தார்.அவர் மறைந்த போது, அஞ்சலி செலுத்த சென்றேன். என்னை அடையாளம் கண்டுகொண்ட அவரது குடும்பத்தினர், 'இறக்கும் முன், உங்களையும், உங்கள் எழுத்துகளையும் குறித்து பெருமை பட பேசிக் கொண்டிருந்தார்...' என்றனர். மனம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகியது.என் வயது, 60; பிரபல இதழ்களில் பணிபுரிந்த அனுபவத்தில் பதிப்பக நிறுவனம் நடத்தி வருகிறேன். நுால்கள் எழுதி விருதுகள் வாங்கியுள்ளேன். உயர்வுக்கு நம்பிக்கையூட்டி விதை போட்ட தமிழாசிரியையை போற்றி வாழ்கிறேன்.- கா.சு.வேலாயுதன், கோவை.தொடர்புக்கு: 99944 98033