வெற்றியின் இலக்கு!
திருச்சி, புத்துார் பிஷப் ஹீபர் உயர்நிலை பள்ளியில், 1970ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தேன். அதில் 'எல்க்டிவ்ஸ்' என்ற விருப்ப பாடத்தில், கணக்கை ஆர்வமாக தேர்வு செய்திருந்தேன். துவக்கத்தில் புரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டேன்; குழப்பமாக இருந்தது. வகுப்பாசிரியர் கிறிஸ்டோபர், மாணவர்களை உற்சாகப்படுத்த, அறிஞர்களின் பொன்மொழிகளை அவ்வப்போது பகிர்வார்.அன்று அறிஞர் பெர்னாட்ஷா கூறிய, 'இளைஞனாக இருக்கும் போது பத்து செயல்கள் செய்தால், அவற்றில் ஒன்பது தோல்வியடையும். அதை ஏற்காமல், ஒன்பது முறையும் வெற்றிபெறும் வழியை யோசித்தேன். ஒரு உண்மை பளிச்சென்று விளங்கியது. அதாவது, 90 முறை முயன்றால் ஒன்பது வெற்றிகள் கிடைக்கும் என்பது தான் அந்த உண்மை. எனவே முயற்சியின் எண்ணிக்கையை அதிகரித்தேன்...' என்ற பொன்மொழியை எடுத்துரைத்தார். அது மனதில் பதிந்தது. விடாமுயற்சியுடன் போராடி கணக்கில் சிறந்த மதிப்பெண் பெற்றேன்.என் வயது 73; தெற்கு ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். பள்ளியில் ஊக்கப்படுத்தும் விதமாக பொன்மொழிகளை கூறி வாழ்வின் உயர்வுக்கு வித்திட்ட வகுப்பாசிரியர் கிறிஸ்டோபரை வணங்கி மகிழ்கிறேன்.- ந.தேவதாஸ், சென்னை.தொடர்புக்கு: 92821 45623