உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (230)

அன்புள்ள அம்மா...என் வயது, 15; சென்னை நகரில் பிரபல தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன். தெருவிலோ, வீட்டிலோ, பேருந்து நிலையத்திலோ, சினிமா தியேட்டரிலோ எங்கும் மூக்கை நோண்டுபவர்களை பார்க்கிறேன்.நோண்டியதை முகத்துக்கு நேரே வைத்து பார்க்கின்றனர்; பின், சட்டையிலோ, கீழ் ஆடையிலோ அதை தடவிக் கொள்கின்றனர். சிலர் நோண்டியதை வாயில் வைத்து சுவைக்கின்றனர்; இந்த இழிவான பழக்கத்தை எப்படி களையலாம்... நல்ல ஆலோசனை கூறுங்கள்.இப்படிக்கு,எஸ்.எம்.கந்தர்வ்.அன்பு மகனே...இந்த வழக்கம் பற்றி, 1995ம் ஆண்டு ஒரு ஆய்வு நடந்தது. அதன்படி, 91 சதவீத உலக மக்கள், மூக்கை நோண்டுகின்றனர். ஒருவன், ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம் நான்கு முறையாவது மூக்கை நோண்டுகிறான்.இது அனிச்சையான பழக்கம். மூக்கை நோண்டுவோருக்கு, சுகாதார கேடான செய்கையை கண்காட்சியாய் செய்கிறோம் என்ற பிரக்ஞை இருக்காது.மூக்கு, முதுகெலும்புள்ள உயிரினங்களின் முகத்தில் காணப்படும் புடைப்பு ஆகும். மனிதரில், மூக்கு இரு கண்களுக்கிடையே ஆரம்பித்து உதடு, வாயின் மேல் முகத்தின் நடுவில் அமைந்துள்ளது.நடுச்சுவர் எலும்பு, மூக்கை இரண்டாக பிரிக்கிறது. சுவாசக்காற்றை உள்ளிழுத்து, வெளி விடுவதற்காக நாசித்துவாரங்கள் சிறு ரோம வடிகட்டிகளுடன் மூக்கில் அமைந்துள்ளன.பல பாலுாட்டி உயிரினங்களின் மூக்கு நீண்டிருக்கும். மேற்காசிய நாடான இஸ்ரேல் பேராசிரியர் ஆப்ரகாம் தமிர், மனிதர்களுக்கு, 14 விதங்களில் மூக்கு இருப்பதாய் கூறுகிறார். அவை பற்றி பார்ப்போம்...* பிறை வடிவிலான மெல்லிய மூக்கு * சதைபிடிப்பு மூக்கு * உருண்டை மூக்கு * ரோமன் மூக்கு * வளைந்த மூக்கு இன்னும் பிறவும் உண்டு.மனிதர்களின் உணர்ச்சியை வெளிப்படுத்துவதில், மூக்கின் பங்கு முக்கியம்; கோபமோ, நாணமோ ஏற்பட்டால் மூக்கு சிவக்கும். மூக்கில் நுாற்றுக்கணக்கான நுண்ணுயிர்கள் உள்ளன.மூக்கு வழியாக, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், நிமோனியா, காலரா, டைபாய்டு, மணல்வாரி அம்மை போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு உண்டு.மூக்கிற்குள் காற்று தவிர வெளிபொருள் நுழைந்தால் தும்மல் வரும்; அதன் வேகம் மணிக்கு, 160 கி.மீ., மூக்கை நோண்டாமல் இருக்க சில யோசனைகள் கூறுகிறேன்...* காலை, மாலை, இரவு மூக்கை சுத்தப்படுத்த வேண்டும்* காலையில், கண்ணாடி முன் நின்று, 'கண்ணா... பொது இடங்களில் கேவலமாக நோண்டாதே; மூக்கு நோண்டி என பேர் வாங்காதே' என்று சுயவசியம் செய்து கொள்ள வேண்டும் * மூக்கை துடைக்க, சுத்தமான கைக்குட்டை பயன்படுத்துவது நலம்* மூக்கை நோண்டுபவர் உறவினராய், நண்பராய் இருந்தால், நாசுக்காக அறிவுறுத்தி தடுக்கலாம்* ஜலதோசம் பீடிக்காமல், உடல்நலத்தை கவனமாக பேண வேண்டும். சுயசுத்தம், மன உறுதி, சுய கவுரவம் இருந்தால், மூக்கு நோண்டலை அடியோடு ஒழித்து விடலாம்.- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !