தூண்டுகோல்!
தஞ்சாவூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, கழக உயர்நிலைப் பள்ளியில், 1954ல், 11ம் வகுப்பு படித்த போது தமிழ் ஆசிரியராக இருந்தார் வித்வான் ந.சண்முகதேசிகர். அவர் மீது மிகுந்த மதிப்பு, மரியாதை வைத்திருந்தோம்.பத்திரிகை, கதை புத்தகங்கள் படிப்பது, கதை சொல்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். அன்று வகுப்பில் நடந்த சம்பவத்தை மையமாக்கி, ஒரு கதை எழுதினேன். ஆர்வம் பொங்க அதை படித்து கொண்டிருந்தனர் நண்பர்கள். ஆசிரியர் வந்ததை கூட கவனிக்கவில்லை.வகுப்பில் நுழைந்ததும், 'என்ன சுவாரசியமாக படிக்கிறீங்க...' என்று கேட்டார் ஆசிரியர்.நான் எழுதியிருந்ததை கொடுத்தனர்.வாங்கி புத்தகத்தின் அடியில் வைத்தபடி, 'பாடம் படிப்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும். கதை எல்லாம் ஓய்வு நேரத்தில்...' என்றபடி பாடம் நடத்தினார். வகுப்பு முடிந்த பின் அழைத்து, 'சிறப்பாக எழுதியிருக்கிறாய்; பத்திரிகைக்கு அனுப்பு...' என்றார்.அதன்படி, 'டிங்டாங்!' என்ற சிறுவர் இதழுக்கு அனுப்பினேன். அது, 'உலகம்!' என்ற தலைப்பில் பிரசுரமானது. இதை பாராட்டிய ஆசிரியர், 'மேலும் நிறைய எழுது...' என ஊக்கம் தந்தார். மாயூரன் என்ற புனைப்பெயரில் எழுதி வருகிறேன்.என் இலக்கிய சேவையைப் பாராட்டி, குடியரசு தலைவர் கேடயம் வழங்கினார். கோவையில் நடந்த உலக செம்மொழி மாநாட்டில், சிறுவர் இலக்கியம் பற்றி கட்டுரை சமர்ப்பித்து, அப்போதைய முதல்வர் கருணாநிதி கையால் கேடயம் பெற்றேன்.என் வயது, 85; ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். அன்று, தமிழாசிரியர் ஊட்டிய உற்சாகம் இன்றும் எழுத துாண்டுகிறது. அவரை நன்றியுடன் வணங்குகிறேன்.- கி.குருமூர்த்தி, சென்னை.தொடர்புக்கு: 98409 58837