மனம் மாறிய தந்தை!
மருதுார் கிராமத்தில், வியாபாரி சங்கரன் வசித்து வந்தான். மனைவி பெயர் ரேவதி; குமார் என்ற மகன் இருந்தான்.மாமரங்களை குத்தகைக்கு எடுத்து, மாம்பழ வியாபாரம் செய்து வந்தான் சங்கரன். அதில் நல்ல வருமானம் கிடைத்தது. மகனை நன்கு படிக்க வைத்தான்.விடுமுறை நாட்களில், குமாருக்கு மாம்பழம் கொடுப்பாள் அம்மா. அதை ருசித்து சாப்பிடுவதை பார்த்து ரசிப்பாள்.சில நாட்கள் கடந்தன. அன்று, ''அம்மா... இன்று ஏம்மா, எனக்கு மாம்பழம் தின்பதற்கு கொடுக்கவில்லை...'' என்று கேட்டான் குமார். கனிவு பொங்க, ''நாளை தரேன்...'' என்றாள் அம்மா.தலையசைத்து, விளையாட சென்றான் குமார். மகனுக்கு, மாம்பழம் கொடுக்காததை நினைத்து, குற்றவுணர்வு மேலிட மனம் கனத்தது.வியாபாரத்தை விரிவுபடுத்த, நிறைய மாமரங்களை குத்தகைக்கு எடுத்தான் சங்கரன். இயற்கை முறையில் பழுக்க வைத்து விற்றான். நல்ல வருமானம் கிடைத்தது.சில நாட்களுக்கு பின் -சங்கரனின் எண்ணம் தடுமாறியது. வியாபாரத்தில் அதிக லாபம் வேண்டும் என்று எதிர்பார்த்தான். அதனால், 'கார்பைடு' என்ற கற்களை பயன்படுத்தி மாங்காய்களை பழுக்க வைக்கும் தவறான வழிமுறையை பின்பற்ற ஆரம்பித்தான். வருமானம் அதிகரித்தாலும், நிம்மதியாக துாங்க முடியவில்லை.அதை அறிந்த அவன் மனைவி, ''முறைகேடான இச்செயல் வேண்டாமே...'' என்று எடுத்து கூறினாள். மனைவியை அலட்சியப்படுத்தினான் சங்கரன்.சிறிதும் கலங்காமல், 'கணவனுக்கு, இறைவன் நல்ல புத்தி கொடுக்கட்டும்' என தினமும் வேண்டி வந்தாள் ரேவதி.அன்று, வழக்கம் போல் பள்ளி முடிந்து, வீட்டுக்கு வந்தான் குமார். சுவை மிக்க மாம்பழம் வேண்டும் என்று அடம் பிடித்தான். மவுனம் சாதித்தாள் தாய்.''வீடு நிறைய பழம் இருந்தும், எனக்கு தருவது இல்லையே ஏன்...''''இதை தின்றால் வயிறு வலி வரும்...''''ஏன் வயிறு வலிக்கும்...''''அப்பா வந்ததும் கேட்டு தெரிஞ்சுக்கோ...''தலையை ஆட்டி சென்றான் குமார்.இரவு, வீட்டுக்கு வந்தான் சங்கரன்; அசதியால் அப்படியே அமர்ந்திருந்தான். அவனிடம் வந்த மகன், ''அம்மா, மாம்பழம் கொடுக்க மறுக்கிறார். இங்குள்ள பழங்களை சாப்பிட்டால், வயிறு வலி வருமாமே; அது, உண்மையா...'' என்று கேட்டான்.மகன் சொன்னதை கேட்டு, அதிர்ந்து யோசித்தபடி, ''உனக்கு வேறு பழம் வாங்கித் தருகிறேன்...'' என்றான்.''அப்படின்னா, அம்மா சொல்வது உண்மையா அப்பா...''''அதைப் பற்றி நீ தெரிஞ்சுக்க வேண்டாம்... அம்மா உன் நல்லதுக்கு தான் சொல்லி இருப்பாங்க...''''அப்படின்னா, இந்த பழங்களை என்ன செய்வீங்க...''''வெளியில் விற்று விடுவேன்...''''இந்த மாம்பழங்களை வாங்குவோர், அவர்களின் குழந்தைகளுக்கு கொடுத்தால், வயிறு வலி வருமேப்பா...''இதை கேட்டதும், வெட்கி தலை குனிந்தான் சங்கரன். மகனை மார்போடு அணைத்தான். தவறான செயல்களையும், எண்ணங்களையும் அழித்தான். சட்டத்தையும், நல விதிகளையும் கடைபிடித்து வியாபாரம் செய்ய முடிவு செய்தான். பட்டூஸ்... நன்மை தர கூடிய செயலை மட்டுமே செய்ய வேண்டும்!- வி. சுவாமிநாதன்