பொறுப்பு ஏற்பு!
வேலுார் மாவட்டம், காட்பாடி ஜில்லா போர்டு நடுநிலைப் பள்ளியில், 1945ல், 3ம் வகுப்பு படித்த போது, இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்தது. வகுப்பில், 40 மாணவர்கள் இருந்தோம். ஆசிரியர் முனாப், திறந்தவெளி வளாக மர நிழலில் அமர வைத்து பாடம் நடத்துவார். முதலில், தமிழ் மொழியில், உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்கள் மற்றும் கணக்கு வாய்ப்பாடுகளை மனதில் பதிக்க வழி வகை செய்தார். வகுப்பு துவங்கி, மூன்று வாரங்கள் வரை, இவற்றை நடத்தியதால், 'கசடற' தேர்ந்து சிறந்து விளங்கினோம். என் வீட்டருகே எழுத படிக்க தெரியாத ஏழைகள் வசித்தனர். அவர்களுக்கு கடிதம் எழுதுவதில் உதவ ஆரம்பித்தேன். தொடர்ந்து, தமிழ் கட்டுரை போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றேன். பள்ளி அருகே, 10 ஏக்கர் காலியிடம் இருந்தது. அதன் ஒரு பகுதியில், தற்காலிக ராணுவ மையம் அமைந்திருந்தது. அங்குள்ள கிடங்கில், பெட்ரோல், டீசல் மற்றும் வெடி பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த பகுதியில் தான் நாங்கள் விளையாடுவோம்.ஒருநாள், பிற்பகல், வகுப்பு இடைவேளை நேரத்தில், ராணுவ மையத்தில் பெரிதாக வெடி சத்தம் கேட்டது. பெரிய டிரம்கள் நெருப்புடன் மேலெழுந்து வெடித்து சிதறின. பள்ளி சுற்றுசுவர் அருகில் நின்று வேடிக்கைப் பார்த்தோம். விரைந்து வந்த அந்த ஆசிரியர், மெயின் கேட் அருகில் நின்று பாதுகாப்பு கொடுத்தார். மாற்று வழியில் எங்களை வீட்டுக்கு அனுப்புவதில் முனைப்புக் காட்டி சிறப்புற நிறைவேற்றினார். என் வயது, 87; மின்வாரியத்தில் பொறியாளராக பணி செய்து ஓய்வு பெற்றேன். பள்ளியில் படிப்பு சொல்லி தந்ததுடன், பாதுகாப்பிலும் அக்கறையுடன் செயல் பட்ட அந்த ஆசிரியரை போற்றுகிறேன்.- டி.சம்பத், சென்னை.