உள்ளூர் செய்திகள்

கனியும் முகம்!

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி, பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியில், 2009ல், 12ம் வகுப்பு படித்தேன். ஆங்கில ஆசிரியராக இருந்தார் சேகர். அவரை செல்லமாக இங்கிலீஷ்காரர் என்று அழைப்போம்.வெண்மை நிற சட்டையுடன் கருப்பு பேன்ட், கையில் தங்க காப்பு அணிந்திருப்பார். ராணுவ வீரர் போல் ஒட்ட வெட்டி சிகை அலங்காரம் செய்திருப்பார். புரியும் வகையில், ஆங்கிலத்தில் எளிமையாக பேசி அசத்துவார். பாடத்தை, படங்களாக கரும்பலகையில் வரைந்து விளக்குவார். இதனால், கவனம் பிசகாது. ஆங்கில மொழியை, அறிவியல் பாடம் போல் நடத்தி புரிய வைப்பார். ஒவ்வொரு வகுப்பு முடிவிலும், அந்த பாடத்தின் முக்கியத்துவம் குறித்து தேர்வு நடத்துவார். வார இறுதியில் முழுதும் எழுதி காட்டுவோம். இதனால், படிப்பது சுமையாக தெரியவில்லை. அவரது, 25 ஆண்டு கால கற்பிக்கும் அனுபவத்தில், 'ஆங்கில பாட பொதுத்தேர்வில் யாரும் தோல்வி அடைந்தது இல்லை' என சாதனையாக கூறுவார்.என் வயது, 33; அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றுகிறேன். என் மாணவ, மாணவியருக்கும், அந்த ஆசிரியர் காட்டிய வழிமுறையில் கற்பிக்கிறேன். கரும்பலகையில் வரையும் போதெல்லாம், அவரது இனிய முகம் நினைவில் நிழலாடுகிறது!- கா.அருள்முருகன், தேனி.தொடர்புக்கு: 70107 08214


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !