உள்ளூர் செய்திகள்

சூப்பர் ஒன்பது!

மருதூரில் பெரிய பணக்காரர் ஒருவர் இருந்தார். அவர் உயர் படிப்புப் படித்து பெரிய உத்தியோகத்திலிருந்தார். ஊரில் அவருக்கு மதிப்பும், மரியாதையும் அதிகம். அரண்மனை போன்ற வீடு, அவருடைய மகன்தான் பாலு. அந்தப் பெரிய தெருவிலுள்ள அத்தனை வீட்டுக் குழந்தைகளும் பாலுவின் சிநேகிதர்கள். தன் அப்பாவைப் பற்றி, அவரது கதை சொல்லும் திறமையைப் பற்றி, தன் நண்பர்களிடமெல்லாம் பெருமையடித்துக் கொள்வான் பாலு.பாலுவின் நண்பர்களும், நண்பர்களின் சகோதர, சகோதரிகள் என ஒரு பட்டாளமே பாலுவின் வீட்டில் இருப்பர். அவன் அப்பாவிடம் கதை கேட்க. இரவு எட்டு மணிக்கெல்லாம் வந்து கூடிவிடுவர். இரவு பத்து, பத்தரை மணிவரை பாலுவின் அப்பாவிடம் கதை கேட்டுவிட்டு, பிறகு தான் தூங்கப் போவர் குழந்தைகள்.வழக்கம்போல பாலுவின் அப்பா முண்டா பனியனும், தும்பைப் பூவாய் கதர்வேஷ்டியும், தோளில் கதர் துண்டுமாய், தங்க பிரேம் மூக்குக் கண்ணாடி டால் அடிக்க, ஹாலிலுள்ள சோபாவில் அமர்ந்திருந்தார். கீழே விரித்துள்ள காஷ்மீர் விரிப்பில் குழந்தைகள், அவர் முகத்தையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தனர்.''கதை கூறுவதற்கு முன் இன்று, கொஞ்சம் கணக்குப் போடலாமா?'' என்றார் பாலுவின் அப்பா. அவர்கள் பதில் கூறுமுன், ஒரு காகிதத்தில் ஒரு எண்ணை எழுதி, தன் அருகில் அமர்ந்திருந்த வேணியிடம் கொடுத்தார்.''இதை யாரிடமும் காட்டாதே, மடித்து வைத்துக் கொள்... இன்னொரு காகிகத்தில் 1066 என்ற எண்ணை எழுதி கோபுவிடம் கொடுத்தார். கோபுவிடம், இதேபோல, நான்கு இலக்கமுள்ள ஒரு எண்ணை இதன் கீழே எழுது,'' என்றார்.கோபு -1066 என்ற எண்ணின் கீழ் 3478 என்று எழுதினான். அடுத்து பாலுவின் அப்பா அதன் கீழ், 6521 என்று எழுதினார்.பிறகு மாலதியிடம் அந்தக் காகிகத்தைக் கொடுத்து, ''நான் எழுதிய எண்ணுக்குக் கீழே, நீ ஒரு நான்கு இலக்கமுள்ள எண்ணை எழுது,'' என்றார்.மாலதியும் அவர் கூறியபடி 7150 என்ற எண்ணை எழுதினாள். அதன் கீழ் அவர் 2849 என்று எழுதினார். எண்கள் எழுதியுள்ள காகிகத்தை மணியிடம் கொடுத்து, ''இக்காகிதத்திலுள்ள நான்கு இலக்கங்களுடைய ஐந்து எண்ணையும் கூட்டிச் சொல்,'' என்றார்.கணக்கில் கில்லாடியான மணியும், 1066+3478+6521+7150+2849 என்று அதைக் கூட்டி, அதன் கூட்டுத் தொகையைக் 21,064 என்று கூறினார்.இப்போது பாலுவின் அப்பா, வேணியிடம் கொடுத்திருந்த காகிகத்தை வாங்கிப் பார்த்து அதில் எழுதி இருக்கும் எண்ணைக் குழந்தைகளிடம் காட்டினார். அதில் எழுதி இருந்த எண் 21,064! குழந்தைகள் வியந்து போய், ''அங்கிள், அங்கிள் இது எப்படி? இந்த விடை முன்னாலேயே உங்களுக்கு எப்படித் தெரிந்தது? மேஜிக்கா?'' என்று கேட்டனர்.பாலுவின் அப்பா சிரித்தார்.''மேஜிக் இல்ல, கணிதம். முக்கியமா எண் 9ன் மகத்துவம்,'' என்றார்.''கொஞ்சம் விளக்குங்களேன், ப்ளீஸ் ப்ளீஸ்!'' என்றனர் குழந்தைகள் கெஞ்சலாக.''நான்கு ஒன்பதுகள் 9999 அதாவது பத்தாயிரத்துக்கு ஒன்று குறைவு இல்லியா? இதன் இரண்டு மடங்கு எவ்வளவு? 19998 சரியா? கோபுவிடம். நான் கொடுத்த காகிதத்தில் எழுதிய நான்கு எண் இலக்கம் என்ன?'' என்று கேட்டார் அப்பா.''ஆயிரத்தி அறுபத்தாறு (1066),'' என்றான் கிட்டு.''இதை, 19998லிருந்து மானசிகமாகக் கூட்டி வந்த எண்ணையே நான் வேணியிடம் எழுதிக் கொடுத்தேன்!''''கணிதக் கில்லாடி மணி உடனே மனக்கணக்கில் சரி பார்த்து (19998+1066 =21064) ஆமாம் கரெக்ட்!'' என்றான் உற்சாகமாக.''1066 என்ற எண்ணிற்கு அடுத்து கோபுவும், மாலதியும் எந்த நான்கு இலக்க என் எழுதினாலும் அந்த எண்ணுடன் கூட்டுத்தொகை (9999) வருமாறு நான் அடுத்த எண்ணை எழுதினேன். இப்போது அந்த ஐந்து எண்களின் கூட்டுத் தொகை 21064 ஆகத்தான் இருக்கும்! இது கணிதத்தின் 9 ன் பெருமை,'' என்றார் கண் சிமிட்டியபடி.''அதனால்தான் 9 எண்ணைப் பலரும் ராசி என்று கூறுகின்றனரோ?'' என்றான் கிட்டு.''இதேபோல இன்னொரு கணக்கு அங்கிள்!'' என்றான் ரவி, ஆவலுடன்.''ஓ.கே!'' என்ற அவர், ''ஒரு காகிகத்தில் 12345679 என்று எழுதுங்கள் - 8ஐ தவிர்த்து,'' என்றார்.கந்தன் ஒரு காகிதத்தில் ஸ்கெட்ச் பேனாவினால் குண்டு குண்டாக 12345679 என்று எழுதினான்.''சரி, இதில் உனக்குப் பிடித்த எண் எது?'' என்று கேட்டார்.''ஐந்து!'' என்றான் கந்தன்.''அப்படியானால், அந்த எட்டு இலக்கு எண்ணை (12345679) 45னால் பெருக்கு,'' என்றார்.கந்தன் அவசர அவசரமாகப் பெருக்கினான். வந்த விடையைக் கண்டு எல்லாக் குழந்தைகளும் 'ஓ' என்று ஆர்ப்பரித்தனர்.விடை: 555555555!''அன்வர் பாய்! உனக்கு விருப்பமான எண் எது?'' என்று கேட்டார் பாலுவின் அப்பா.''நான்கு!'' என்றான் அன்வர்.''அப்படியானால் நீ 36லினால் எட்டு இலக்க எண்ணைப் பெருக்கு,'' என்றார்.வந்த விடை: 444444444!மீரா தன் பேவரைட் 3 என்றாள்.கார்த்தி தன் அபிமான எண் 6 என்றான்.மீராவை 27லினால் பெருக்கச் சொன்னார்.விடை: 333333333!கார்த்தியை 54லினால் பெருக்கச் சொன்னார். கிடைத்த விடை: 666666666!''வேடிக்கையாக இல்லை? உங்கள் அபிமான எண்களோடு சங்கிலி விடையாக வருவது?'' என்று கேட்டு நகைத்தார் அவர்.''அந்த வேடிக்கையை நீங்கள் விளக்கினால் தான் எங்களுக்குப் புரியும் அங்கிள்!'' என்றாள் மீரா.''இதுவும் ஒன்பதின் ரகசியம் தான். கந்தன் பெருக்கியது 9x5=45, அன்வர் பெருக்கியது 9x4=36, மீராவின் எண் 9x3=27, கார்த்தி பெருக்கிய எண் 9x6=54 ஒன்பதின் கூட்டாளிகளை இந்த எண்களின் கூட்டுத் தொகையை ஒன்பது தன் கூட்டாளியின் சங்கிலி எண்களாகவே தரும். இதுதான் ரகசியம் ஒன்பதின் மகத்துவம்! இப்படி ஒன்பதைப் பற்றி நிறைய விஷயமிருக்கு!'' என்றார் .இதற்குள் கதைப் பிரியர்கள், ''கணிதம் போதும் அங்கிள், கதை சொல்லுங்கள்,'' என்றனர் கெஞ்சலுடன்.''கவலைப்படாதீர்கள். இனி முழுக்க முழுக்க கதை தான். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? குழந்தைகள் கதை எழுதுவதில் புகழ்பெற்றவர் 'சார்லஸ் டாட்சன்' என்பவர். ஆலிஸின் அற்புத உலகம் கதையை உங்களில் எவ்வளவு பேர் படித்திருக்கிறீர்கள்?''''எல்லாருமே படித்திருக்கோம் அங்கிள். ஆனா அதை எழுதியது 'லூயிகரோல்' என்பவர்னா?''''நிஜம்தான். லூயிகரோல் என்பது சார்லஸ் டாட்சனோட புனை பெயர். இவர் கணிதமேதை. ஆனால், இவருக்குப் பெயரும் புகழும் பெற்றுத் தந்தது இவர் குழந்தைகளுக்காக எழுதிய கதைகள் தான். இங்கிலாந்து அரசி விக்டோரியா மகாராணி இவருடைய ஆலிஸின் அற்புத உலகக் கதையைப் படித்துவிட்டு, அவரை அரண்மனைக்கு (விண்ட்ஸர் காஸில்) அழைத்துப் பாராட்டோ பாராட்டுன்னு பாராட்டினார். அவருடைய அடுத்த குழந்தைக் கதை புத்தகத்தை முதலில் தனக்கு அனுப்பும்படி சார்லஸ் டாட்சனிடம் (லூயி கரோலிடம்) கேட்டுக் கொண்டார். ஆனால், டாட்சனின் அடுத்த மகத்தான படைப்பு கணிதம் பற்றி இருந்தது. விக்டோரியா மகராணிக்கு ஏமாற்றமோ ஏமாற்றம்!'' என்றார்.''விக்டோரியா ராணி ஏமாந்தது போல நீங்களும் எங்களுக்கு கதை சொல்லாமல் கணக்கு சொல்லி ஏமாற்றி விட்டீர்கள் அங்கிள்,' என்று கூறி குழந்தைகள் சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !