ஸ்வேதகான் பகோடா
ஆசியாவில் இருக்கும் இன்னொரு அதிசயம், 'ஸ்வேதகான் பகோடா' தங்கத்தால் தகதகக்கும் கோபுரங்களை உடைய இந்தக் கோவில், மியான்மரில் உள்ள, யான்கோன் நகரில் இருக்கிறது. சமீபத்தில் கட்டப்பட்டதோ என்று நினைக்கும் வகையில், பளபளப்புடன் காட்சி தருகிறது, ஸ்வேதகான் பகோடா.கடந்த, 2,500 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்வேதகான் கட்டப்பட்டுவிட்டது. ஆரம்ப காலத்தில், 18 மீட்டர் உயரம் கொண்டதாகவே இந்தக் கோவில் இருந்தது. காலம் செல்ல செல்ல கோவிலும் மறுசீரமைக்கப்பட்டு கொண்டே வந்தது. 15ம் நூற்றாண்டில் கோவிலின் உயரம், 98 மீட்டராக உயர்த்திக் கட்டப்பட்டது.'ஸ்வேதகான் பகோடா' உருவானதுக்கு ஒரு சுவாரசியமான கதை சொல்லப்படுகிறது.டபுஸ்ஸா, பாலிகா என்ற இரண்டு சகோதரர்கள், பர்மாவில் கவுதம புத்தரை சந்தித்து அவரிடமிருந்து, எட்டு தலைமுடிகளைப் பெற்றனர்.அதை எடுத்துச் சென்று பர்மாவின் அரசர் உக்கலபாவைச் சந்தித்து, கோவில் கட்டுவதற்கு உதவி கேட்டனர். அவரும் சிங்குத்தாரா மலையில் கோவில் கட்டிக்கொள்ளுமாறு கூறினார். தங்கப் பேழையில் புத்தரின் முடிகளை வைத்து, இந்தக் கோவிலில் பாதுகாத்து வருகின்றனர். இப்படித்தான் இந்த, 'ஸ்வேதகான் பகோடா' உருவானது. 'பகோடா' என்றால் கோவில். 'ஸ்வேதகான் பகோடா'வில் நான்கு பிரம்மாண்டமான நுழைவாயில்கள் உள்ளன.பவுத்த புத்தகங்கள், புத்தரின் படங்கள், சிலைகள், மெழுகுவர்த்தி, தங்க இலை, தியானக் கொடி, சின்னஞ் சிறு குடைகள், தாமரைப் பூக்கள் என ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு உள்ளன.கோபுரத்தின் உள்பகுதி செங்கற்களாலும், மேல்பகுதி தங்கத் தகட்டாலும், மூடப்பட்டுள்ளது. வெள்ளை பளிங்குக் கற்களால் தரை கட்டப்பட்டிருக்கிறது. ஸ்வேதகான் பகோடாவில், நான்கு பெரிய கோபுரங்களும்,64 சிறிய கோபுரங்களும் உள்ளன.கோவிலுக்குள் இருக்கும் புத்தரின் குடை நுனியில், ஐந்தாயிரத்து,448 வைரங்களும், இரண்டாயிரத்து,317 மாணிக்க கற்களும் பதிக்கப்பட்டுள்ளன.இந்தக் கோவிலுக்குள் இருக்கும் வாழைப் பூ மொட்டு, கீரிடம், தாமரை மலர், புத்தருக்காக வைக்கப்பட்டுள்ள கிண்ணம், மணி போன்றவை மிகவும் முக்கியமானவை.பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அரசர்கள், செல்வந்தர்கள் கிலோ கணக்கில் தங்கத்தை காணிக்கையாகக் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இன்றும் பக்தர்கள் தங்கத்தை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். எனவே, கோவிலை நன்றாகப் பராமரிக்க முடிகிறது. மேலும் மேலும், தங்கத்தால் கோவிலை இழைக்க முடிகிறது.உலகம் முழுவதிலுமிருந்து புத்த பிட்சுகள், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் இந்தக் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.