உள்ளூர் செய்திகள்

சுவாமி விவேகானந்தர்! (1)

துணிவு!இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்...மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் ஓர் அரங்கத்தில் நாடகம் நடந்து கொண்டிருந்தது; அதில் மனம் பறிகொடுத்திருந்தனர் ரசிகர்கள். எதிர்பாராத வகையில், நாடக மேடையில் காட்சி மாறியது. நாடகத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத கதாபாத்திரங்கள் தோன்றின. தொடர்ந்து, சலசலப்பு எழுந்தது. ரசிகர்களுக்கு எதுவும் புரியவில்லை.விஷயம் இது தான்...- நாடகத்தில், முக்கிய வேடம் ஏற்றிருந்தவர், ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தார். அதை திருப்பிக் கொடுக்கவில்லை. வழக்கு பதிவானதால் அந்த நடிகரை கைது செய்ய, ஆங்கிலேய காவலர்கள், வாரண்டுடன் நாடக மேடைக்கு வந்திருந்தனர்.இந்த காட்சியால் தான் சலசலப்பு ஏற்பட்டிருந்தது. ரசிகர்களுக்கு இது தெரிந்தும் மவுனம் காத்தனர். அப்போது, இடி முழக்கம் போல் கேட்டது, ஒரு சிறுவனின் குரல். 'மேடையை விட்டு வெளியே போ... நடிகரை கைது செய்வதை நாடகம் முடிந்த பின் வைத்துக் கொள்! இடையில் புகுந்து தொந்தரவு செய்யாதே...'திட்ட வட்டமாக, கணீர் என ஒலித்தது அந்த குரல். திடுக்கிட்டனர் காவலர்கள். சிறுவன் குரலுக்கு ஆதரவு கிடைத்தது. அவன் பேச்சை ஆமோதித்து, 'நாடகம் முடியும் வரையில் காத்திருந்து கைது செய்...' என குரல் எழுப்பினர் ரசிகர்கள். எதிர்ப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. காவலர்கள் அவ்விதமே நடந்து கொள்ளும்படி ஆயிற்று.சரியான சமயத்தில் குரலெழுப்பிய சிறுவனை பாராட்டினர், அரங்கத்தில் இருந்தவர்கள்.துணிச்சல் மிக்க சிறுவனின் அப்போதைய வயது, 14; பிற்காலத்தில், 'அஞ்சாமை' என்ற கருத்தை ஆணித்தரமாக போதித்த சுவாமி விவேகானந்தராக மலர்ந்தது அந்த சிறுவன்தான். உன்னை நம்பு!சிறுவன் நரேந்திரன், சுறுசுறுப்பானவன்; எப்போதும் உற்சாகத்துடன் இருப்பான். விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். அவனது நண்பன் வீட்டில் ஒரு செண்பக மரம் இருந்தது. அதில், தலைகீழாகத் தொங்கி ஆடிக் கொண்டிருப்பான் நரேந்திரன்; குட்டிக்கரணம் போட்டுத் தரையில் தாவிக் குதிப்பான். அடிக்கடி மரத்தில் ஏறியதைப் பார்த்த ஒரு தாத்தா, 'தலைகீழாகத் தொங்கி விளையாடாதே...' என்று கண்டித்தார்.'ஏன் விளையாடக் கூடாது...' கேட்டான் நரேந்திரன். பயமுறுத்த நினைத்தவர், 'மரத்தில் ஒரு பூதம் இருக்கிறது; அதில் ஏறுபவர்களைக் கொன்று விடும்...' என்று கூறினார். அமைதியாக கேட்டுக் கொண்டான், நரேந்திரன்.தாத்தா, அந்த இடத்தை விட்டு அகன்றதும், 'கிடு...கிடு...' என மரத்தில் ஏறி தலைகீழாகத் தொங்கி, மீண்டும் விளையாட ஆரம்பித்தான் நரேந்திரன். இதை பார்த்துக் கொண்டிருந்த நண்பன், 'இப்போது தானே இந்த மரத்தில் பூதம் இருப்பதாக கூறினார் தாத்தா; அது உன்னைக் கொன்று விடப் போகிறது... சீக்கிரம் இறங்கி வா...' என்று பதற்றத்துடன் கூவினான்.கண்களை சிமிட்டியபடி, 'நீ ஒரு முட்டாள்... யாரோ கதை கட்டினால் அதை நம்பி விடுவதா... மரத்தில் ஏறக் கூடாது என்பதற்காக அப்படி ஒரு கதை கட்டி விட்டிருக்கிறார் தாத்தா... எத்தனை முறை இந்த மரத்தில் தலைகீழாகத் தொங்கி விளையாடியிருக்கிறோம்... அவர் கூறியது உண்மையாக இருந்தால், அந்த பூதம் எப்போதோ என்னைக் கொன்றிருக்குமே...' என்றான் நரேந்திரன்.அவனிடம் துணிச்சலும், வீரமும் இருந்தது; அது, அறிவு சார்ந்தே அமைந்தது. அந்த சிறுவன், வளர்ந்து சுவாமி விவேகானந்தராக மலர்ந்து புகழ் பெற்றபோது, 'எந்த கருத்தை எடுத்துக் கொண்டாலும், அதன் உள்நோக்கத்தையும், அடிப்படைத் தன்மையையும் கண்டறிய வேண்டும்... இவனை நம்பு, அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்வர்; அவற்றை புறந்தள்ளி, முதலில் நீ உன்னிடத்தில் நம்பிக்கை வை...' என போதித்தார்.அந்த போதனை உலகம் எங்கும் நம்பிக்கை மழையை பொழிந்து வருகிறது.- தொடரும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !