தமிழரும் அரிசியும்!
அரிசி என்பது அன்னம்! தான் மட்டுமே உண்ணாமல் தரணியே உண்ண உழைப் பவன் உழவன். அவன் தமிழனாயும் இருக்க, அவன் மற்றவர்களுக்கு கொடுப்பதை தன் வாழ்கையின் ஒரு அம்சமாகவே கொண்டு விட்டான். வாசலில் யாராவது உணவு கேட்டு வந்தால், பாட்டிதான் அரிசி போடுவார்.தினமும் மீதம் இருக்கும் சாதத்தில் நீர் கொட்டப்பட்டு, காலை வேளையில் அது வீட்டில் வேலை செய்ய வருகிறவர்களுக்கு உணவாகும். மீதமாவதற்கென்றே சாதம் கொஞ்சம் அதிகம் வைக்கப்படும்.தினமும் சோறு வடிக்கும் முன், ஒரு கை அரிசி ஒரு பாத்திரத்தில் கொட்டப்பட்டு இறுக்கி மூடப்படும்.யாரும் அதை திறந்து பார்க்க கூடாது என்ற கண்டிப்பு உண்டு. மாத இறுதியில், ஏதாவது ஒரு ஆன்மிக அமைப்பு அல்லது சமூக அமைப்பு நபரிடம் தானமாக தருவர். எதற்காக பாத்திரத்தை திறக்க கூடாதுன்னு ஒரு நிபந்தனை? அவ்வப்போது பாத்திரத்தை திறந்து பார்த்தால், 'இவ்வளவு அரிசியா கொடுக்கிறோம்?' என்று ஒரு பிரமிப்பு வருமாமம். கொடுப்பதற்கு அது நல்லதில்லையாம்.சோறு வடித்ததும், ஒரு கரண்டி சோற்றில் ஒரு துளி பருப்பு இட்டு, சமையல் அறை ஜன்னல் படிக்கட்டில் வைக்கப்படும். அது காகங்களுக்கும், அணில்களுக்கும் உணவாகும். வீட்டின் முற்றத்தில் புடைக்கப்படும் அரிசியோ, சுத்தம் செய்யப்படும் ரவையோ கீழே சிந்தினால் அதை பெருக்கி எடுக்க மாட்டார்கள். அப்படியே கிடக்கட்டும், குருவி வந்து சாப்பிடும் என்பர்.