உள்ளூர் செய்திகள்

தி அமேஸிங் ஸ்பைடர் மேன்!

'ஸ்பைடர் மேன்' வரிசையில் அடுத்து வர இருப்பது 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்' அமெரிக்காவின் சூப்பர் ஹீரோ படமாக உருவாகியிருக்கிறது.குழந்தைகள் உலகில் கொடி கட்டிப் பறக்கும் சூப்பர் ஸ்டாரான 'ஸ்பைடர் மேன்' சார்ந்த கற்பனையில் எத்தனை படங்கள் வந்தாலும் அசராமல் ஆதரிக்கின்றனர் குழந்தைகள். அதே நேரம் அது அவர்களைக் கவரும்படி இருக்க வேண்டும். ஆண்ட்ரூ கார்பீல்டு ஸ்பைடர் மேனாக வருகிறார். ஸ்பைடர் மேன் வரிசையில் இது நான்காவது படம். கதாநாயகன் அதாவது ஸ்பைடர் மேனின் பெயர் பீட்டர் பார்க்கர். எம்மா ஸ்டோன் முக்கிய வேடம் ஏற்றுள்ளார்.ஸ்பைடர் மேன் சூப்பர் ஹீரோதான். அதில் நடிப்பவர்கள் கூட சூப்பர் கதாநாயகர்கள் ஆகிவிடுவர். நடிகைகளும் அப்படித்தான். விரைவாக உயர்ந்து விடுவர். இந்த அமேஸிங் ஸ்பைடர் மேனில் நம் பாலிவுட் நடிகர் இர்பான் கான் நடித்துள்ளது சிறப்பு. ஹாலிவுட்காரர்கள் எங்கு திறமை இருந்தாலும் கொத்திக் கொண்டு போய்விடுவர் என்பதற்கு இது ஒரு சாட்சி. வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் இந்தித் திரையுலகில் பளிச்சிட்டு வருபவர் இர்பான் கான். அவரை ஹாலிவுட் பயன்படுத்தியிருப்பது பொருத்தம்தான்.இப்படத்தின் இயக்குனர் மார்க் வெப் நம்ம ஊர் இர்பான் இப்படத்தில் டாக்டர் ரத்தா என்கிற வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ஹாலிவுட் படங்களில் அறிமுகமானவர்தான். அவருக்கு அங்கும் ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. இர்பானுக்கு இதில் முக்கியமான வேடம். வில்லன் போல வருவார். ஆனால், இயக்குனரோ 'அது வில்லன் வேடமல்ல. அவர் நல்லவர்தான் அவர் எடுக்கும் முடிவுகள்தான் தவறானவை. அதனால் அப்படி ஒரு பெயர் வந்திருக்கிறது' என்றார்.உயர்நிலைப் பள்ளி மாணவனாக இருக்கும் ஒருவனுக்கு சூப்பர் சக்திகள் வந்து, வளர்ச்சி பெற்று விஸ்வரூபம் எடுப்பதைப் பற்றிய கதைதான் 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்'.உயர்நிலைப் பள்ளியொன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட டீன் ஏஜ் பையன்தான் பீட்டர் பார்க்கர். இளம் வயதிலேயே பெற்றோரால் கைவிடப்பட்டவன். அவன் தனது அங்கிள் பென் மற்றும் ஆன்டி மேயுடன் வளர்கிறான். அவனது கடந்த கால வாழ்க்கை புதிராக இருக்கிறது. அவனுடைய நேசத்துக் குரியவள் க்வன் ஸ்டேசி. இரண்டையுமே தேடி மீட்க அவனுக்கு விருப்பம். இதற்காகவே நேரத்தைச் செலவிடுகிறான். அவனுக்கு ஒரு 'ப்ரீப்கேஸ்' அதாவது சிறிய பெட்டி கிடைக்கிறது. அதை அவன் கண்டு பிடித்து எடுக்கிறான். அது அவன் அப்பாவுடையது; பல மர்மங்களையும், புதிர்களையும் உள்ளடக்கியது. அந்தப் பெட்டியின் மூலம் அப்பாவின் பழைய கூட்டாளியை அடைகிறான். அவர்தான் டாக்டர் கான்னரஸ். அப்பாவின் ரகசியம் தெரிகிறது. ஆனாலும் என்ன... இவன் விதியே பிறகு மாறிவிடுகிறது. அவன் ஸ்பைடர் மேனாக மாறுவது தலைவதி என்று விதிக்கப்படுகிறது. அவன் ஸ்பைடர் மேன் ஆகிறான். அதற்குப் பிறகு அவன் எடுக்கும் அவதாரங்கள், அட்டகாசங்கள், சாகசங்கள்தான், 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்' படம்.இப்படத்தில் ஜேம்ஸ் வாண்டர் பில்ட் திரைக்கதை எழுத, ஆல்வின் ஜேம்ஸ் மற்றும் ஸ்டீவ் க்ளோக்ஸ் இருவரும் அதை செழுமைப்படுத்தினர். இப்படத்தின் படப்பிடிப்பு லாஸ் ஏஞ்சல்ஸில் டிசம்பர் 2010ல் தொடங்கியது. அதுவும், 'ரெட் எபிக்' கேமராவுடன். இந்தக் கேமரா பல மாயாஜால தொழில்நுட்பங்களின் சங்கமம். ஏப்ரல் 2011ல் படப்பிடிப்பு முடிந்து படப்பிடிப்புக்கும் பிந்தைய மெருகேற்றும் பணிகள் தொடங்கின.சோனி நிறுவனம் இணையதளம், முன்னோட்டங்கள், வீடியோ கேம் என்று இதற்கான வணிகப்படுத்தல் வேலை களில் பரபரப்பாக இருக்கிறது. கொலம்பியா பிக்சர்ஸின் தயாரிப்பு இது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று இந்திய மொழிகளில் வெளிவருகிறது. இந்தியா முழுவதும் 1000க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளிவரவுள்ளது.என்ஜாய் குட்டீஸ்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !