உள்ளூர் செய்திகள்

பணத்தின் அருமை!

சென்னை, வில்லிவாக்கம், சிங்காரம்பிள்ளை உயர்நிலைப் பள்ளியில், 1955ல், 9ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!அண்ணாநகர் அடுத்துள்ள, திருமங்கலம் அப்போது, சிறிய கிராமமாக இருந்தது. அங்கு, அழகிய தோட்டத்துடன் கூடிய என் வீட்டு வளாகத்தில், காய்கனி செடி, கொடிகளை பயிரிடுவோம். விளைச்சலை வீட்டு தேவைக்கு பயன்படுத்துவோம். உறவினர், நண்பர்களுக்கும் கொடுப்போம். வீட்டிலிருந்து, 3 கி.மீ., துாரத்தில் என் பள்ளி அமைந்திருந்தது. அங்கு, நடந்து சென்று படித்து திரும்புவேன். அன்று, தோட்டத்தில் சுண்டைக்காய் விளைந்திருந்தது. அதை எடுத்து சென்று தமிழாசிரியர் வா.சி.தனபாலனுக்கு கொடுத்தேன்.வாங்கியதும், 'அதிக உறுப்பினர் உள்ள குடும்பத்தை சேர்ந்தவன் நீ. பணப்பற்றாக்குறையால் சிரமம் இருக்குமே... இது போன்ற காய்களை இலவசமாக கொடுக்காமல், சந்தையில் விற்றால் பணம் கிடைக்கும். பெற்றோருக்கு உதவியாக இருக்கும்...' என, ஒரு வியாபாரியை அறிமுகம் செய்தார். அவரிடம் காய்கறிகளை விற்றோம். குடும்ப செலவுக்கு பேருதவியாக இருந்தது. பணத்தின் முக்கியத்துவம், என் மனதில் ஆழமாக பதிந்தது.தற்போது, என் வயது, 83; மத்திய அரசில் கணக்கு தணிக்கை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். நேர்மையான முறையில் பணம் சம்பாதிக்கும் வழியை கற்பித்த பள்ளி தமிழாசிரியரை நன்றியுடன் போற்றி வருகிறேன்.- என்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !