உள்ளூர் செய்திகள்

மாய உண்டியல்!

மன்னார்குடி என்ற ஊரில், வண்ணமுத்து என்ற விறகு வெட்டி, மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் சோம்பேறியாகவும், அதே சமயம் மிகவும் செலவாளியாகவும் இருந்தான். கிடைக்கும் வருமானத்தில் சிக்கனமாக செலவு செய்யாமல், ஊதாரித்தனமாக இருந்தான். இதனால், வறுமையில் வாடினான்.ஒருநாள்-அந்த ஊருக்குச் சாமியார் ஒருவர் வந்தார். அவர் ஊரின் மத்தியில் இருந்த ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்திருந்தார். சாமியாரின் வருகை பற்றிய செய்தி, ஊர் மக்களின் செவிகளுக்கு எட்டியது. அவரைப் பார்க்கவும், தரிசிக்கவும், ஆசிபெறவும், வழிகாட்டுதல் பெறவும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்தனர்.மக்களின் கேள்விகளுக்கு பொருத்தமான பதிலைச் சொல்லி, தரிசிக்க வந்த மக்களுக்கு ஆசி வழங்கி, அவர்களை அனுப்பி வைத்தார் சாமியார்.'இந்த சாமியார் மிகவும் சக்தி வாய்ந்தவர். அவரது வாக்கு கட்டாயம் பலிக்கும்,' என்று அவரைச் சந்தித்து விட்டு, வீடு திரும்பிய மக்கள் தங்களுக்கிடையே பேசியவாறு சென்றனர்.அதைக் கேட்ட வண்ணமுத்துக்கு மனதுக்குள் ஒரே சந்தோஷம். சாமியாரின் வாக்கு வலிமையைப் பயன்படுத்தி, ஒரே நாளில் மலையளவு உயர்ந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டான். அந்த நினைப்புடனேயே சென்றவன், சாமியார் இருக்குமிடத்தை அடைந்து, அவரை அணுகி அவரது காலில் சாஷ்டாங்கமாக விழுந்தான்.''மகனே! எழுந்திரு... உன் குறை என்ன? நீ வேண்டுவதுதான் என்ன?'' என்று கேட்டார்.''குறையொன்றும் இல்லை சாமி; ஆனால்... ஆனால்...'' என்று பேச்சை இழுத்தான்.''நன்று... நீ வந்த காரணம் என்ன? உனக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்டார் சாமியார்.''நான் பணக்காரன் ஆவதற்கு வழி சொல்ல வேண்டும்'' என்று கூறி, தனது ஆசையை, அதுவும் பேராசையை வெளிப்படையாகவே தெரிவித்தான் வண்ணமுத்து.''வண்ணமுத்து! ஊரை ஒட்டியுள்ள மலை அடிவாரத்தில், ஒரு மரத்தின் கீழே அமர்ந்திரு. உனது வாழ்வில் விடியல் ஏற்படும் வகையில் வழி சொல்கிறேன்...'' என்று கூறினார் சாமியார்.சாமியார் கூறியபடி, அடுத்த நாளே மலையடிவாரத்தை அடைந்து. அங்கிருந்த மரத்தடியின் கீழ் அமர்ந்தான்; சாமியாரின் வருகைக்காக காத்திருந்தான்.இரண்டு நாட்கள் கடந்தன. ஆயினும் சாமியார் வரவில்லை. ஒருவேளை சாமியார் நம்மை ஏமாற்றிவிட்டாரோ என்று எண்ணினான் வண்ணமுத்து.திடீரென்று மரத்தடிக்கு ஒரு தேவதை வந்து, ''ஏனப்பா இங்கு தனிமையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்? நீ மனம் புண்பட்டு இருக்கிறாய் என்பதை உன்முகமே காட்டுகிறது. உனக்கு என்ன குறை? மனதில் என்ன கவலை?'' என்று கேட்டாள் தேவதை.''தாயே, நான் காட்டிலே போய் விறகு வெட்டிப் பிழைக்கிறேன். விறகை விற்றால் 50, 60 ரூபாய் தேறும். என் குடும்பத்தில் எட்டுப்பேர் உள்ளனர். ''கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்துவதே சிரமமாக இருக்கிறது. வறுமையோடும், வெறுமையோடும் தான் எங்கள் ஜீவனம் நடக்கிறது. என் குடும்ப வறுமை நீங்க, வளம் பெற ஏதாவது வழிகாட்டுங்கள் தாயே,'' என்றான் வண்ணமுத்து.''உனது கஷ்டத்தை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. இதோ இந்த உண்டியலை வைத்துக் கொள். உன் வறுமை தீர்ந்துவிடும்,'' என்று கூறி வண்ணமுத்து கையில் உண்டியலைக் கொடுத்தாள் தேவதை.''இந்த உண்டியலில் காசு இருக்கிறதா?'' என்று ஆசையுடன் கேட்டான் வண்ணமுத்து.''காசை நீதான் போட வேண்டும். நான் கொடுத்துள்ளது ஒரு மாய உண்டியல். தினமும் நீ இதில் காசு போட வேண்டும்,'' என்று கூறினாள் தேவதை.''எவ்வளவு தாயி,'' என்று கேட்டான் வண்ணமுத்து.''உன்னால் முடிந்ததைப் போடு. அப்படி நீ போடும் ஒவ்வொரு காசும், இரண்டு மடங்காகப் பெருகும். ஆனால், ஒரு நிபந்தனை. மூன்று நாட்கள் நீ பணம் எதுவும் போடாவிட்டால், உண்டியல் மாயமாய் மறைந்துவிடும்,'' என்று எச்சரித்தாள் தேவதை.''அது சரி, தாயே... நீங்கள் சொன்ன மாதிரியே செய்கிறேன். உண்டியலை எப்போது உடைக்கலாம்?'' என்று கேட்டான் வண்ணமுத்து.''மூன்று ஆண்டுகள் சென்ற பிறகு, பவுர்ணமியன்று ஆற்றில் நீராடி உன் குலதெய்வத்திற்குப் பூஜை செய்து விட்டு உண்டியலை உடை, நீ அதிசயப்படும்படி பணம் பெருத்திருக்கும்,'' என்று கூறியது தேவதை.''சரி, தாயே... தங்களுக்கு நன்றி,'' என்று கூறிவிட்டு உண்டியலுடன் வீட்டுக்குப் புறப்பட்டான் வண்ணமுத்து.அவன் மனைவி, ''என்னங்க உண்டியல்? இதில் பணம் இருக்கிறதா?'' என்று கேட்டாள்.உண்டியலின் மாயத்தன்மை குறித்து, விபரமாக தன் மனைவியிடம் கூறினான் வண்ணமுத்து.அடுத்த நாளே, பத்து ரூபாயை உண்டியலில் போட்டு சேமிப்பைத் துவக்கி வைத்தாள் வண்ணமுத்துவின் மனைவி.உண்டியலில் போடும் பணம் இரட்டிப்பாகும் என்பதை அறிந்த கணவனும், மனைவியும் சேமிப்பதில் குறியாக இருந்தனர். அதனால், முன்பெல்லாம் சோம்பேறியாக இருந்த வண்ணமுத்து, இப்போது சுறுசுறுப்பாக மாறிவிட்டான்.விறகு வெட்டுவதிலும், அவன் மனைவி வயல் காட்டில் வேலைக்குச் செல்வதிலும் சுறுசுறுப்பும் மும்முரமும் காட்டினர். இவ்வாறு உழைத்துப் பணம் சேர்த்து உண்டியலை நிரப்பத் தொடங்கினர்.மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன.பவுர்ணமியன்று, வண்ணமுத்து தன் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஆற்றுக்குச் சென்று நீராடி விட்டு, குலதெய்வத்தை வழிபட்டான். பின் உண்டியலைத் திறந்தான்.''அடேங்கப்பா... எவ்வளவு பணம்...?'' பூரித்துப் போனான் வண்ணமுத்து.அனைவரும் வாயடைந்து நின்றனர்.தேவதை சொன்னது போல் உண்டியலில் போட்ட பணம் இரண்டு மடங்கு ஆயிற்று! வண்ணமுத்து குடும்பத்தினர் குதூகலம் அடைந்தனர்.உண்டியலில் இருந்த பணத்தை எடுத்து, நான்கு ஏக்கர் நன்செய் நிலத்தையும், உழவு மாடுகளையும் வாங்கினான் வண்ணமுத்து.அந்த ஆண்டில் அமோக மழை! கண்மாய்கள், ஏரி, குளங்கள் நீரால் நிரம்பி வழிந்தன. வண்ணமுத்துவின் குடும்பத்தினர் வயலில் கடினமாக உழைத்தனர். அடுத்து மூன்று ஆண்டுகள் சென்றன.உண்டியலில் முன்பை விட அதிகமாக பணம் சேர்ந்தது.உழைப்பு... உழைப்பு... ஓயாத உழைப்பு... சேமிப்பு... சேமிப்பு... தினந்தோறும் சேமிப்பு!தனக்குப் பத்து விரல்களில் மோதிரமும் வாங்கி போட்டுக் கொண்டான். மனைவிக்கு நகை நட்டு வாங்கி, கழுத்திலும் கைகளிலும் பூட்டி அழகு பார்த்தான். வசதி அவனைத் தேடி வந்தது.உழைத்த களைப்பும், உற்சாகமும் வண்ணமுத்துக்கு நல்ல தூக்கத்தைக் கொடுத்தன.ஒருநாள்-வண்ணமுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது அவனது கனவில் தேவதை தோன்றி, 'வண்ணமுத்து என்னை மறந்து விட்டாயா? வறுமையில் வாடி நின்றபோது நீ என்னிடம் கையேந்தி நின்றாய்! இப்போது உனக்கு வசதி வாய்ப்பு வந்துவிட்டது. அதனால் என்னை மறந்துவிட்டாய் போலும்' என்று கூறினாள்.'இல்லை தாயே! நான் மறக்கவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள். நான் எங்கு வர வேண்டும் சொல்லுங்கள்' என்று கூறினான் வண்ணமுத்து.'என்னிடம் உண்டியல் பெற்றாயே அந்த மரத்தடிக்கு வா..! என்னிடம் வாங்கிய உண்டியலை காலியாக்கி விட்டு அதை எடுத்து வா' என்றாள் தேவதை.'என்ன தாயே கொடுமை இது. அந்த உண்டியலால்தான் இந்த அளவு உயர்ந்தேன். அதை ஏன் நீங்கள் பறித்துக் கொள்ள விரும்புகிறீர்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லை தாயே... நான் தவறு ஒன்றும் செய்யவில்லையே...' என்று புலம்பினான் வண்ணமுத்து.'வண்ணமுத்து! புலம்ப வேண்டாம்... உனக்கு மேலும், வசதி பெற வழி காட்டுகிறேன். கவலைப்படாதே... நாளை மாலை, அதே மரத்தடிக்கு காலி உண்டியலுடன் வந்து விடு,' என்று கூறிவிட்டு மாயமானாள் தேவதை.வண்ணமுத்துவின் கனவு கலைந்தது. தேவதை கனவில் கூறியதைக் கேட்டு, வண்ணமுத்துவின் மனம் சஞ்சலம் அடைந்தது. அடுத்த நாள் மாலை - விரல்களில் மோதிரங்கள் மினுமினுக்க, பட்டாடைகள் ஒளி வீச, மரத்தடியில் தேவதையின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தான். தேவதை கேட்டபடி காலி உண்டியலையும் கையோடு கொண்டு வந்திருந்தான்.அவனை அதிக நேரம் காக்கவிடாமல், பத்தாவது நிமிடத்தில், அவன் முன் தோன்றினாள் தேவதை.தேவதையைப் பார்த்து, ''வணக்கம் தாயே!'' என்று கூறினான் வண்ணமுத்து.''எப்படி இருக்கிறாய்? உன் வறுமை, மனக்கவலை, புலம்பல் எல்லாம் போய்விட்டதா?'' என்று கேட்டாள் தேவதை.''உங்கள் அருள், ஆசியால் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறேன். நீங்கள் கொடுத்த மாய உண்டியல் என்னை மலையளவு உயரத்திற்கு உயர்த்திவிட்டது தாயே,'' என்று உண்டியலின் மகிமையைப் பற்றி பெருமைப்படக் கூறினான்.வண்ணமுத்து கொண்டு வந்த உண்டியலை திருப்பி வாங்கிக்கொண்ட தேவதை, ''இனி உனக்கு உண்டியல் தேவையில்லை,'' என்று கூறிச் சிரித்தாள்.''ஏன் தாயே! சிரிக்கிறீர்கள்?'' என்று கேட்டான்.''வண்ணமுத்து! இது மாய உண்டியல் அல்ல. சாதாரண உண்டியல். இதில் போட்ட பணம் இருமடங்கு பெருகவில்லை. உன்னுடைய வீண் செலவு குறைந்ததன் காரணமாகவே, இந்த உண்டியல் பணம் பெருகியது. அதற்கு உன் உழைப்பே காரணம். உனக்குச் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவே இந்தத் தந்திரமான ஏற்பாட்டை நான் செய்தேன். இனி உண்டியல் அவசியமில்லை. உன் மனமே உனது உண்டியல்!'' என்று கூறி விட்டு, உண்டியலுடன் மாயமானாள் தேவதை.வாயடைத்துப் போய் நின்றான் வண்ணமுத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !