மாய விழிகள்! (3)
முன்கதை: பள்ளி சிறுமி தியா, விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு வந்த போது, எச்சரிக்கையை மீறி தோப்பு கிணற்றில் தண்ணீர் குடித்தாள். அங்கிருந்த மூதாட்டி அவளை விரட்டினார். இனி - தியா திரும்புவதை எதிர்பார்த்து, வாசலில் காத்திருந்தார் பாட்டி. ''படித்துறையை பார்த்துட்டு வந்தாச்சா...''''ம்...''''தோப்புக்கிணறு பக்கம் போகலையே...''''இல்லை பாட்டி...''பொய் சொல்லுவது கொஞ்சம் உறுத்தலாக இருந்தது.''வா செல்லம்... சாப்பிடு...''வாசல் ஓரமாக செருப்பை கழற்றி, உள்ளே வந்தாள் தியா.சாப்பாட்டு மேஜையில், குழம்பு பாத்திரம் இருந்தது. கத்திரிக்காய், முருங்கைக்காய், மாங்காய் போட்ட சாம்பார். வாசனை கமகமத்தது.அதையே பார்த்தபடி இருந்தாள் தியா. சட்டென அவள் கண் முன், ஒரு புகை மூட்டம் தோன்றியது. அந்த பாத்திரம் பார்வையிலிருந்து மங்கலாகி போனது. பார்வையில் நடக்கும் வித்தியாசத்தை தெளிவாக உணர்ந்தாள் தியா.''சாம்பார் பாத்திரத்தை சாப்பாட்டு மேஜையில் வைத்தேன்னு நினைச்சுட்டு இருக்கேன்...'' என்றபடி மீண்டும் சமையலறைக்குள் சென்ற பாட்டி, ''என்ன இது, இங்கேயும் காணோம்... எங்க எடுத்து வெச்சேன்னு தெரியலையே...'' என்றார்.தியாவுக்கு, 'திக்' என்றது. கண்ணை சிமிட்டி, பார்வையை நகர்த்தினாள்.அதுவரை மங்கலாக தெரிந்த பாத்திரம், இப்போது தெளிவாக தெரிந்தது.சமையலறையில் இருந்து திரும்பிய பாட்டி, ''கண்ணுல பிரச்னை போல; இப்ப தான் மேஜைல பார்த்துட்டு போனேன். இந்த குழம்பு சட்டி கண்ணில் படாம இருந்திருக்கு...'' என்றார்.தியாவுக்கு ஒன்றும் புரியவில்லை.'மங்கலாக தெரிந்த பாத்திரம், பாட்டியின் கண்களுக்கு தெரியவில்லை. நிஜமாகவே அப்படி நடந்ததா... பிரமையா' என குழம்பினாள். சாப்பிட அமர்ந்ததும் அதை மறந்தாள். அடுத்த நாள் - பாட்டியும், தாத்தாவும் விடுதியுடன் கூடிய அந்த பள்ளியில் தியாவை விட்டு சென்றனர்.தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த, 26ம் எண் அறைக்கு வந்தாள். கதவை தட்டினாள்.திறந்த மாணவி இவளை விட, பெரியவள். மூக்கு கண்ணாடி அணிந்து இருந்தாள்; நட்புடன் சிரித்தாள்.''ஹாய் தியா... என் பெயர் கலைச்செல்வி...''அறிமுகமானவள் போல பேசியது, வியப்பை தந்தது.'என்ன பதிலளிப்பது' என்று தெரியாமல் தடுமாறியபடி, ''நான் நான் தியா... எனக்கு இந்த அறை தான் கொடுத்துள்ளனர்...'' என்றாள். ''நேற்று வரை இது என் அறை; இன்று முதல் நம் அறை...'' என கூறி சிரித்தாள் கலை.உள்ளே சென்றாள் தியா.''நீ வருவது எனக்கு முன்பே தெரியும். விடுதி வார்டன் சொல்லி விட்டார். இது உன் கட்டில், இந்த மேஜை உனக்கு. இது வசதியாக இல்லை என்றால் மாற்றி பயன்படுத்தி கொள்ளலாம்...''''பரவாயில்லை அக்கா... இதுவே நல்லாயிருக்கு. நன்றி...''உடைமைகளை அதற்குரிய இடத்தில் வைத்தாள் தியா.''அக்கா... நீங்க எத்தனை ஆண்டுகளா இங்க படிக்கிறீங்க...''''என்னை அக்கான்னு கூப்பிடுற. அது சரி... நீங்க, வாங்க, போங்க எல்லாம் தேவையில்லை. எனக்கு வயதாகவில்லை. நான் பிளஸ் 2 மாணவி தானே...''சிரித்தாள் கலைச்செல்வி.இப்படியாக அறிமுகப்படலம் நடந்தேறியது.ஒரு வாரத்தில், பள்ளி, வகுப்பு, ஆசிரியர்கள், தோழியர் என்று எல்லாம் பழகி போயின.அன்று ஞாயிற்றுக்கிழமை -நுாலகத்திற்கு கலைச்செல்வி சென்று விட்டாள்; அறை மேஜை மீது இருந்த அலாரம் கடிகாரத்தில் மணி பார்த்தாள் தியா.அதை உற்று நோக்க கண்களுக்கு முன், புகை படலம் தோன்றியது. சில வினாடிகளில், கடிகாரம் மங்கலாகிப் போனது.துணுக்குற்றாள் தியா.பாட்டி வீட்டில் பாத்திரத்தை பார்த்த போது, நடந்த நிகழ்வு மாதிரியே இருந்தது.கண் சிமிட்டியதும், கடிகாரம் தெளிவாக தெரிந்தது.சற்றே குழம்பிய தியா, மேஜை மீது இருந்த புத்தகத்தை உற்று நோக்கினாள். கண் முன் மீண்டும் புகைமூட்டம். புத்தகமும் மங்கலானது. கண் சிமிட்ட புத்தகம் தெளிவாக தெரிந்தது.மனதுக்குள் பரபரப்பு தொற்றிக்கொள்ள, மற்ற பொருட்களை, சாதாரணமாக பார்த்தாள்.எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை.அப்படியானால்... உற்றுப் பார்த்தால், அது கண்களுக்கு மங்கலாகிறதா... கண்களுக்கு மங்கலாக தெரிந்த போது, பாட்டி, 'பாத்திரத்தை பார்க்கவில்லை' என்று கூறியது நினைவுக்கு வந்தது. அவளுக்கு புரிய ஆரம்பித்தது.'தனக்கு மங்கலாக தெரியும் பொருள், மற்றவர் பார்வையில் மறைந்து போகிறதா என்ன'இந்த விஷயத்தை நம்ப முடியவில்லை. ஒரு வித குழப்பமும், பரபரப்பும் அவளை ஆக்ரமித்தது. கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள்.வந்தாள் கலைச்செல்வி. இவளைப் பார்த்து கையசைத்து, மூக்கு கண்ணாடியை கழற்றி, மேஜை மீது வைத்து, கழிப்பறைக்கு சென்றாள்.சட்டென பொறி தட்டியது தியாவுக்கு.'நினைப்பது உண்மை தானா என்பதை சோதித்து பார்த்து விடலாமா'கலைச்செல்வி திரும்பும் வரை காத்திருந்தாள்.திரும்பியதும், மேஜை மீதிருந்த மூக்கு கண்ணாடியை உற்றுப் பார்த்தாள் தியா. கண்களுக்கு முன், வழக்கம் போல, புகைமூட்டம் தோன்றியது. அந்த மூக்கு கண்ணாடி மங்கலானது.கழிப்பறையில் இருந்து வந்த கலைச்செல்வி, மூக்கு கண்ணாடியை தேடினாள்.''தியா... என் கண்ணாடியை பார்த்தாயா... இங்கே தான் கழட்டி வைத்தேன்...''''கட்டில்ல பாரு அக்கா...'' பார்வையை மாற்றாமல் பேசினாள் தியா.கலைச்செல்வி கட்டிலை நோக்கி நகர, கண் மூடி திறந்தாள் தியா.மூக்கு கண்ணாடி இருப்பது தெளிவாக தெரிந்தது.''கண்ணாடி மேஜையில் தான் இருக்கிறது...'' என்றாள் தியா.''நான் பார்த்தப்ப அங்க இல்லையே... நீ எடுத்து வைத்து விளையாடுகிறாயா...'' என்று சிரித்தாள் கலை. ஒரு அசட்டு சிரிப்புடன் சமாளித்தாள்.இப்போது, தியாவுக்கு உறுதியாக புரிந்தது.'தன் பார்வைக்கு மங்கலாகும் பொருட்கள், மற்றவர்கள் பார்வைக்கு மறைந்து விடுகிறது' அவளால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை.'என்ன விதமான சக்தி இது... திடீரென்று எப்படி வந்தது'மனம் முழுதும், ஒரு வித பரபரப்பு தொற்றியது.'இன்னொரு முறை சோதித்து பார்க்கலாமா...'அதற்கான சந்தர்ப்பம் அன்று மாலையே கிடைத்தது.- தொடரும்..ஜே.டி.ஆர்..