உள்ளூர் செய்திகள்

கஞ்சனின் கதறல்!

திருத்தங்கல் என்ற ஊரில், தேங்காய் வியாபாரி மாணிக்கம் வாழ்ந்து வந்தார். பெருஞ் செல்வந்தரான அவர், படு கஞ்சனாக இருந்தார். வியாபாரத்தை முடித்து, தினமும் பணத்தை, ஒரு மரப்பொந்தில் மறைத்து வைப்பார். அன்று பணத்தை எடுத்த போது, நாகம் தீண்டியது. துணியால் ஒரு கட்டு போட்டு, வைத்தியரை நாடிச் சென்றார்.மருத்துவமனை வாசலில், ஒரு அறிவிப்பு பலகை இருந்தது. அதில், தேள் கடி, பூரான் கடி, எலி கடி, நாய் கடி என, தரம் பிரித்து கட்டணம் குறிப்பிட்டிருந்தார் வைத்தியர்.பாம்பு கடிக்கு சிகிச்சை பெற, அதிக கட்டணமும், தேள் கடிக்கு குறைவான கட்டணமும் நிர்ணயித்திருந்தார்.தேள் கடித்துவிட்டதாக உதவி கேட்டார் மாணிக்கம். கடிபட்ட பகுதியை சோதித்து மருந்து கொடுத்த வைத்தியர், 'தேள் கடிக்கு, மருந்து தந்துள்ளேன்; வேறு ஏதாவது கடித்திருந்தால், உயிருக்கு நான் உத்தரவாதமல்ல...' என்றார்.'பாம்பு கடித்ததை மறைத்து, தேள்கடி என பொய் கூறி, என் உயிருக்கு நானே எமனாகி விட்டேனே' என்று பதறிய மாணிக்கம், 'வைத்தியரய்யா... என்னை கடிச்சது தேள் இல்ல... கொடிய விஷ பாம்பு; அதிகமா காசு கேட்பீங்கன்னு நினைச்சு பொய் சொன்னேன்... என் உயிரை காப்பாத்துங்க...' என்று, கதறினார்.சிரித்த வைத்தியர், 'உன்னை கடிச்சது பாம்பு தான்னு எனக்கு தெரியும்; அதுக்கான வைத்தியம் தான் செய்திருக்கிறேன். வைத்தியரிடம் பொய் சொல்ல கூடாது. அற்ப காசை மிச்சப்படுத்த, அநியாயமா உயிரை விட துணிஞ்சியே... இனிமே இப்படி செய்யாதே... பணம் உயிரை காப்பாத்தாது; மனுஷங்க தான் துணை வருவாங்க; புரிஞ்சிதா...' என்றார்.'தப்பு தான் வைத்தியரே... இனிமே இப்படி நடந்துக்க மாட்டேன்...' என்று மன்னிப்புக் கேட்ட மாணிக்கம், கஞ்சத்தனத்தை விட்டொழித்தார்.குட்டீஸ்... கஞ்சனாய் வாழக் கூடாது என்பதை புரிந்து கொண்டீர்கள் தானே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !