உள்ளூர் செய்திகள்

ராணியின் வீரம்!

காடியவாட் என்றொரு ராஜ்யம்! அதை, ராணி ராஜபாயி ஆண்டு வந்தாள். அவள், அஞ்சா நெஞ்சம் படைத்தவள். யுத்தக் கலையில் வல்லவள்; ஆட்சி நிர்வாகத்தில் கை தேர்ந்தவள். மாற்று தேசத்து மன்னர்கள் புகழ்ந்து பாராட்டினர்.அவளுக்கு, 70 வயது ஆன போது, புனித யாத்திரை செல்ல விரும்பினாள். அரச பொறுப்பை, மருமகள் கோவல்பாயிடம் ஒப்படைத்து கிளம்பினாள். நான்கு ஆண்டுகளுக்குப் பின், திரும்பி வந்தாள்.அப்போது, அதிர்ச்சி காத்திருந்தது.கோட்டைக் கதவுகள் மூடியிருக்க அவளை, உள்ளே விட மறுத்தனர் காவலர்கள். அரசியாக இருந்த மருமகள் கோவல்பாயிடமிருந்து ஒரு செய்தி வந்தது. அதில், 'தங்களுக்கோ வயதாகி விட்டது; இன்றோ, நாளையோ இந்த உலகத்தை விட்டு போக போகிறவர்! தள்ளாத வயதில், ராஜ்ய பாரம் எதற்கு... எங்கேயாவது நல்லதொரு புண்ணிய தலம் சென்று, எஞ்சியிருக்கும் காலத்தை செலவிடுங்கள்...' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.நான்கு ஆண்டு காலம், சுகபோகம் அனுபவித்த அரச பதவியை விட்டுக் கொடுக்க மனம் வரவில்லை. அதனால் தான், மாமியாருக்கு முகத்தில் அடித்த மாதிரி, அப்படி ஒரு செய்தியை அனுப்பி வைத்தாள்.செய்தியை அறிந்த ராஜபாயி சீறினாள். ராஜ்கோட்டில், முகாமிட்டிருந்த பிரிட்டிஷ் துாதர், உதவியை வேண்டி சென்றாள். அவர், உதவ மறுத்து விட்டார்.பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்லவர்கள் ஆயிற்றே பிரிட்டிஷ்காரர்கள். எனவே, மாமியார் - மருமகள் சண்டையை வேடிக்கை பார்த்து நாட்டை அபகரிக்க விரும்பினர்.ராஜபாயி அஞ்சவில்லை; மனம் தளராமல், ஒரு படை திரட்டினாள். சில நாட்களிலேயே, ஆயிரம் பேரை சேர்த்து விட்டாள். கவசம் அணிந்து, கையில், கத்தியுடன் குதிரை மீது ஏறி, படையை, வழி நடத்தி முன்னேறினாள்.கோட்டைக் கதவருகே, கடும் போர் நடந்தது. பீரங்கிக் குண்டுகள், ராஜபாயி படையை தாக்கின. பல வீரர்கள் அடிப்பட்டு இறந்தனர்.மனம் கலங்கவில்லை ராஜபாயி.கடுமையாக போராடி, கோட்டையைக் கைப்பற்றினாள்! அதை அறிந்த மருமகள் கோவல்பாயி, தப்பி ஓடி ஒளிந்தாள்.ராணியை கோலாகலமாக வரவேற்று மகிழ்ந்தனர், மக்கள்.எந்த வயதிலும், வீரத்துடன் போராடினால் வெல்லலாம் என நிரூபித்தார், ராணி ராஜபாயி!குழந்தைகளே... எதற்கெடுத்தாலும், பயந்து நடுங்காமல் தீர்வு குறித்து யோசியுங்கள்; வழி பிறக்கும். வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !