உள்ளூர் செய்திகள்

திக்.. திக்.. பங்களா! (18)

சென்றவாரம்: விடுமுறையில், குற்றால மாளிகைக்கு வந்த வினுவும், மதுவும் அங்கு நிலவிய மர்மங்களை துப்பறிய முயன்றனர். அவர்களை எச்சரித்து காத்துவந்த கொளஞ்சியை, நள்ளிரவில் தாக்கி, மரத்தில் மறைத்தாள், மந்திரவாதி ஜெய்சீலிமா. இனி -மது, வினுவின் முகங்கள் அழுகையால் வீங்கியிருந்தன. கண்கள் சிவந்திருந்தன.வழக்கம் போல ஈசி சேரில் தாத்தா; காலடியில் பாட்டி. 'ஏன் உங்க ரெண்டு பேர் முகமும் ஒரு மாதிரி இருக்கு...''ஒண்ணுமில்லையே தாத்தா...''மறைக்காம சொல்லுங்க குழந்தைகளா...''எங்க வளர்ப்பு பிராணிகள் இறந்து விட்டன...''அடடா... என்னாச்சு... உடம்பு சரியில்லையா... நேற்றே சொல்லி இருந்தா மூலிகை மருத்துவம் பார்த்து காப்பாத்திருப்பேனே...'அவநம்பிக்கையுடன் தாத்தாவை பார்த்தாள் மது.'என்னம்மா அப்படி பார்க்கிற...''அவை இறந்ததுக்கு காரணமே நீங்கதான்னு நினைக்கிறோம்...''என்ன நடந்துச்சுன்னு விளக்கமா சொல்லு...'கூறி முடித்தான் வினு; சோக முகமாய் அனைத்தையும் கேட்டார் தாத்தா; கன்னத்தில் கை வைத்து கொண்டாள் பாட்டி.'இது, மந்திரவாதி ஜெய்சீலிமாவின் கைங்கரியம். சகதி பூதம்ன்னு ஒண்ணு இருக்கும் என்பதையே நம்ப முடியல. ஒருவேளை சகதி பூதம், அவ கையாளோ என்னவோ... சுப்பையன் உருவில் நடுநிசியில் சுடுகாட்டுப் பூஜை பண்ணியதும் ஜெய்சீலிமா தான். சுப்பையன் மீதோ, செண்பா மீதோ ஏன் எங்கள் மீதோ, உங்களுக்கு விபரீதமான சந்தேகங்கள் வரலாம்...'காட்சி மயக்கங்களின் சூத்திரதாரி அவதான். செண்பா மாதிரி கண்சிமிட்டாத பெண்கள் தமிழ்நாட்ல ஆயிரக்கணக்கில் இருக்காங்க. அவங்கல்லாம் பேய்களா... ஆணித்தரமாக சொல்கிறேன். நீங்க நினைக்கிற மாதிரி இங்க, 200 பேருக்கெல்லாமல் சமைக்கப்படல; நீங்க எங்க ரத்தம்; எங்களை நீங்க சந்தேகப்படலாமா...''மன்னிச்சுகோங்க தாத்தா...''இந்த மாளிகையை கைப்பற்றும் நோக்கத்தில் ஜெய்சீலிமா இவற்றை எல்லாம் செய்கிறாள். அவளுக்கு கொளஞ்சி ஆவி கையாளோ என்னவோ...''கொளஞ்சி நல்ல ஆவி தாத்தா...''உங்களுக்கு சிறு சிறு உதவிகள் செஞ்சுட்டு, கடைசில உங்க கழுத்தை அறுக்கப் போகுது கொளஞ்சி...'தாத்தா சொல்வதெல்லாம் உண்மையாக புலப்பட்டது வினுவுக்கு. சந்தேகம் வேறு பக்கம் போனது.'உங்க ரெண்டு பேர் சந்தேகமும் தீர்ந்து போச்சா...''கொடியவள் ஜெய்சீலிமாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாதா தாத்தா...''முடியும்; சில நாள் பொறுங்க; ஒரு மாந்திரீகனை வரவழைத்து முடிவு கட்டுகிறேன்...''அப்படியே செய்யுங்க தாத்தா; அவளை விடாதீங்க...''சரி... வாருங்கள்... காலை உணவு சாப்பிடுவோம்...'மதுவும், வினுவும் சாப்பிட்டனர்.'இன்றைக்கு எங்கே போறீங்க...''ஐந்தருவிக்கு...''உங்களுக்கு வேற புது புகைப்படக் கருவி வாங்கித்தரவா...''வேணாம் தாத்தா...''உங்க துணைக்கு சுப்பையன்...''வேணாம்...''கவனமா போயிட்டு வாங்க; மலை மேல போக வேணாம்...''சரி தாத்தா...'வெளியே வந்தனர்; சுப்பையன் வணங்கினான்; சற்று துாரம் சாலையில் நடந்தனர். சுப்பையனின் கண்களுக்கு போக்கு காட்டி விட்டு மலையில் ஏற ஆரம்பித்தனர்.காற்றுடன் சாரல் சீறியது. பயந்துடன் மரங்களை கட்டிக்கொண்டனர்; மலைப் பிராந்தியம் முழுக்க துாசி படர்ந்தது. இருவருக்கும் எதிர்த்தாற்போல இரு பனை மர உயரத்தில் ஒரு சூறாவளி நிலை கொண்டது.'யார் நீ...' என்று கத்தினான் வினு.'என்னடா முட்டாள் மாதிரி சூறாவளிக்கிட்ட பேசுற...''யார் கண்டது... பதில் சொன்னாலும் சொல்லும்...' என சிரித்தான்.சூறாவளி துாசு ஒரு மனித உருவத்தில் திரண்டது; வடாகம் போல பிழிந்தது. ஏதோ எழுத விரும்பியது சூறாவளி. தேங்காய் நார், கயிறாய் திரிக்கப்படுவது போல... தரையில் எழுத்து வடிவமாக படிந்தது. மதுவும், வினுவும் திகிலாய் பார்த்தனர்.அங்கு...'கொளஞ்சி உயிரோடு இல்லை' என எழுதப்பட்டிருந்தது.'அப்படியென்றால் அவரைக் கொன்றது யார் சூறாவளியே...'பதில் இல்லை. சூறாவளி உயர்ந்து, துாரத்தில் வீரியம் கரைந்து மறைந்தது. அது வந்து போனதற்கான ஆதாரமே இல்லை. 'என்ன யோசிக்கிற மது...''எனக்கு பயமாயிருக்குடா வினு...''ஏன்...''நமக்கு, ஒரே பக்க பலம் கொளஞ்சி தான்; அவரும் இல்லைன்னு சூறாவளி சொல்லிட்டது. இதற்கு மேலும் பழைய குற்றாலத்தில் தங்குவது உசிதமா...''கடவுள் நம் பக்கம் மது...''என்னமோ போடா...''முழுக்க தாத்தா, பாட்டி பக்கம் சந்தேகத்தை திருப்புறது சரியல்ல. மந்திரவாதி ஜெய்சீலிமா ஒரு மர்மயோகி; அவளை மோப்பம் பிடிக்க வேண்டும்...''அவ நம்பள சேவலா, கோழியா மாத்திடுவா வினு...''மாத்தட்டும்...'வழியில் ஒரு சுனை தென்பட்டது. நீரின் அடியில் கூழாங்கற்கள்; பளிங்கு இட்ட முட்டை போல் கிடந்தன. சுனை நீரை குடித்தனர். ஓய்வாக ஒரு மரத்தில் சாய்ந்தனர்.அது, கொளஞ்சி சிறை வைக்கப்பட்டிருந்த மரம். மரத்தை பிளந்து, பேச முயன்றார் கொளஞ்சி; தைக்கப்பட்ட வாய் ஒத்துழைக்கவில்லை. இருவரும் ஜெயசீலிமா குடிலுக்கு நடந்தனர்; அவள் அங்கு இல்லை.குடில் கதவைத் திறந்தனர்; ஏராளமான ஓலைச்சுவடிகள், மூலிகை மசிக்கப்பட்டு மர முகமூடிகள் கிடந்தன! எழுத்து பொறிக்கப்பட்ட தகடுகள் நுாற்றுக்கணக்கில் இருந்தன.கறுப்பு கயிறு சிவப்புக் கயிறு தாயத்துகள். 'அதை தொடாதே மது; உள்ளே ஆவி அடைபட்டிருக்கும்...'குடிலை, சி.பி.ஐ., அதிகாரிகள் போல ஆராய்ந்தனர்.ஒரு ராட்சத பெட்டி தென்பட்டது; அதை திறக்க பிரயத்தனம் செய்தனர்; பெரும் சத்தத்துடன் திறந்தது. உள்ளே ஏராளமான துணி பொம்மைகள்.மது போல், வினு போல், தாத்தா, பாட்டி போல், செண்பா போல், சுப்பையன் போல், கொளஞ்சி போல்...'இந்த ஜெய்சீலிமா தான் வில்லி! அத்தனைக்கும் மூலக்காரணம். இவளை விட கூடாது; விடவே கூடாது...'கூவினாள் மது.அப்போது தான் அந்த பயங்கரம் நடந்தது.இரு கரங்கள் ஒரே நேரத்தில் மது, வினுவின் பின்னங் கழுத்துகளை பிடித்து உயர்த்தின. தலையை பின்னுக்கு திருப்ப இயலவில்லை. கண்கள் பிதுங்கின; மரண பயத்தில் கால்கள் உதறினர்.ஈவு இரக்கமில்லாமல் மது, வினுவின் கழுத்துகளை இறுக்கியது கரம்!- தொடரும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !